ஒற்றை மலரோ 0தாரகை0
வலைபின்னி
வலை வீசும்
வசியக்காரி!
வீட்டுக்குள்
வீடுகட்டும்
வித்தைக்காரி!
நூல்கொண்டு
நூல் எழுதும்
கவிதைக்காரி!
சிறை பிடிக்க
சிறை தங்கும்
சூழ்ச்சிக்காரி!
வட்டம் போட்டு
கட்டம் கட்டும்
திட்டக்காரி!
பசைநீரால்
பந்தம் ஈர்க்கும்
பாசக்காரி!
கைகள் எட்டா இடத்திலும்
கால்கள் எட்டால் நடந்திடும்
சாகசக்காரி!
இந்திரன் நுழையா இடங்களிலும்
தந்திரமாக ஆட்சி அமைத்திடும்
மந்திரக்காரி!
இரை வேண்டி
இரையாகும்
விலைமாதோ?
தொங்குபாலத்தில்
தங்கி வாசிக்கும்
மகாராணியோ?
தொங்கு
தோட்டத்தின்
ஒற்றை மலரோ?
அந்தரத்தில்
தொங்கும்
அழுக்குச் சந்திரனோ?
தலைவனின் பிரிவால்வாடி
தலைவிரித்து கிடக்கும்
தலைவியோ?
வானுயர்ந்த கோட்டைகுள்ளும்
வாயாலே கோட்டை கட்டும்
வாயாடி!
சுய உழைப்பால்
சிகரம் தொடும்
சுயமரியாதையின்
சின்னம்!
முயன்றால்
முடியுமென்பதை
மனிதர்களுக்கு காட்ட வந்த
முன்மாதிரி!