வேண்டாம் என்னும் ஒரு சொல்

பேருந்தில்...
ஏறி அமர்ந்த கணத்திலிருந்து
அவனுடைய சொல்
என்னைத் துரத்திக் கொண்டிருந்தது.
எல்லோரையும் இறைஞ்சும்
அவனின் சொற்கள்...
என் காதுகளிலும் கெஞ்சி வீழ்ந்தன.
தன்னிடம் இருக்கும் பொருள் ஒன்றை
விற்க...அவன் எல்லோரையும்
இறைஞ்சிக் கொண்டிருந்தான்.
பசியால்...தொய்ந்த அவனின் குரல்...
அவன் வயிற்றைப் போலவே குழைந்திருந்தது.
பேருந்தின் நீளத்தை...
மிக மெதுவாய் கடந்தபடி...
மெல்லிய குரலில் எல்லோரையும்...
கெஞ்சிக் கொண்டிருந்தான்.
இந்தப் பத்து நிமிடத்தில்...
அவனுக்கு இலாபமாக இரண்டு ரூபாய்கள்
கிடைத்திருக்கக் கூடும்.
ஒரு தேநீருக்கும் போதாத
இந்தக் காசை வைத்துக் கொண்டு...
எப்படி அவன் பசியாறுவான்?...
என்னும் எண்ணம் மேலிட...
அவனை அருகில் அழைத்து...
என்னால் முடிந்தது பத்து ரூபாய் தந்தேன்.
வாங்க நீண்ட கைகளை மடக்கியபடி...
"எதனாச்சும் சாமான் வாங்குறியா? சார்!"..என்றான்.
நான் இல்லை என மறுதலிக்கவும்....

"நான் பிச்சை வாங்கறதில்லை...சார்"...என்றான்.

இப்போது அவன் குரல்....

அதி கம்பீரமாய் இருந்தது.

எழுதியவர் : rameshalam (30-Dec-13, 4:05 pm)
பார்வை : 108

மேலே