புதுயுகம் படைக்கப் புத்தாண்டே வருக

#புது யுகம் படைக்க புத்தாண்டே வருக..

இறைவன் அவனுக்கு இணையாய் வாழ்ந்தோம்
கிருதயுக(ம்) பொற்காலம்
தர்மம் புண்ணியம் தரணியில் செழித்தது
வாழ்வது பூக்கோலம்..!

திரேதாயுகத்தில் தீவினை சிறிதாய்
தலை நீட்டியும் துயரில்லை
கடமை கண்ணியம் கருணை கொண்டு
வாழ்ந்தார் வறுமையில்லை..!

துவாரப யுகத்தில் வன்மம் குரோதம்
மூண்டது கொடும் போரும்
ஆசை சூது அனைத்தும் அழிக்கும்
அறிந்தார் அழிவோடும்..!

கலியெனுமந்த யுகத்தில் உதித்தோம்
களிப்பினை ஏன் தொலைத்தோம்
யுகங்கள் அனைத்தின் தன்மையறிந்தும் - கிருத
யுகவழி ஏன் மறந்தோம்..!

மனதை வெளுத்து மனிதம் நிறைத்து
வாழ்வோம் எந்நாளும்
கொடுமை அழிக்க உறுதிகள் எடுத்துக்
கொள்வோம் இந்நாளும்..!

வன்முறை கொடுமை வாட்டும் பேய்கள்
எல்லாம் மாளட்டும்
தேன் வழி தோட்டம் போன்றே நமது
வாழ்கையும் மணக்கட்டும்..!

சாதனை படைக்க தர்மம் தழைக்க
தன் நலன்கள் ஒழித்தோம்
வேதனை போக்கி வெளிச்சம் காட்டு - இங்கு
விண்ணுலகம் படைப்போம்..!

விடியல் விரைவில் நம்பிக்கை மனதில் - ஒளி
வாசல் திறந்திடவா
புதுயுகம் படைக்க புண்ணியம் பெருக்க
புத்தாண்டே பொலிவுடன் வா.!
புத்தாண்டே பொலிவுடன் வா!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (4-Jan-25, 10:16 am)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 14

மேலே