பாரதி எங்கள் சாரதி

#பாரதி எங்கள் சாரதி

வானம் பார்த்த மீசை
முகத்தான்
வாரிக்கொடுத்த வள்ளல் குணத்தான்
ஞானம் மிகுந்த
நற்பண் பினத்தான்
ஞாயிறு ஒளியைக்
கவியில் படைத்தான்..!

புனைந்த பாக்களில்
பூத்தது புதுமைகள்
பூட்டிய விலங்கினை
உடைத்ததில் விடியல்கள்
நனைந்திட வாரீர்
அவன்கவி பெருமழை
நரம்புகள் புடைத்திட
வீரம் விதை விதை..!

நவீனம் பேசிய
நாயகன் பாரதி
நன்றாய்ப் படைத்தோம்
வலைவழி கதிர்வழி..!
நவீனம் உணர்ந்த
ஞானத்தின் ஞானி
- நற்
காஞ்சிப் பேச்சுகள்
காசியில் கேள்இனி..!

அடுப்படிப் பெண்களை
படிப்படி என்றான்
அவரின் உயர்வுக்கு
அடிக்கல் நட்டான்
துடுப்புகள் அளித்தான்
தோணிகள் அளித்தான்
தொடர்வாய்ப் பயணம்
இனிதாய்க் கரைதான்.!

பாப்பா பாட்டினில்
பண்பு விதைத்தான்
பயத்தினை யதிலே
விரட்டி யடித்தான்
தோப்பா யிருக்கத்
தூண்டியும் விட்டான்
தூங்கிய பேர்களை
விழித்தெழ வைத்தான்..!

எதிரிக்கு எரிமலை
ஆவது எப்படி
என்றவன் பாரதி
எங்களின் சாரதி
எதிர்த்து நின்றான்
வெள்ளைக் கொள்ளையை
என்பதை யறிந்திட
பாரதி பாபடி..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (5-Jan-25, 7:45 am)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 22

மேலே