எது தர வேண்டும் புத்தாண்டு

பாய்ந்திடும் நதிகள் சேர்ந்திட வேண்டும்
பஞ்சம் பாரினில் பறந்தோடிட வேண்டும்
பிஞ்சு மனங்களில் குணம்சேர வேண்டும்
நெஞ்சில் நிறைந்திடும் அன்பது வேண்டும்

கொங்கை மாந்தர்க்குக் கற்புநெறி வேண்டும்
கொடும்புலி எதிர்த்திடும் வீரமும் வேண்டும்
கொடுங்கோல் ஆட்சிகள் முடியுற வேண்டும்
கொடுமைகள் தகர்த்திடும் ஆண்மையும் வேண்டும்

தன்னலம் கருதா உள்ளமும் வேண்டும்
தாய்மடி ஒருநாள் துயிலவும் வேண்டும்
தர்மம் தழைத்தோங்கும் ஊரது வேண்டும்
தனிக்குடில் அமைத்தங்கே குடியேற வேண்டும்

விளக்கொளியாய் அறிவும் சுடர்விட வேண்டும்
விருந்தினர் மகிழ்வுறும் விருந்தோம்பல் வேண்டும்
வெள்ளாமைப் பயிரும் நஞ்சின்றிச் செழிப்புற வேண்டும்
விதைத்தவனே விலைவைக்கும் நாளது வேண்டும்.

தருவாய் என்கிற நம்பிக்கை வேண்டும்
புத்தாண்டே! இதை நீ தந்திட வேண்டும்

எழுதியவர் : கவிஞர்: நா. தியாகராஜன், ஈஞ்சம்பாக்கம், சென்னை (6-Jan-25, 5:56 pm)
சேர்த்தது : TPRakshitha
பார்வை : 16

மேலே