===+++தாய்த்தமிழ் தேசியம்+++===

துடிப்பதை இதயம் தொடர்கிறது - அந்த
துடிப்பினில் உணர்வுகள் எரிகின்றது!
தொலைவினில் சூரியன் தெரிகின்றது - அந்த
ஒளியினில் இருளெங்கே மறைகின்றது...???

படிப்பினை பணமே தருகின்றது - அந்த
பணத்தால் பாரும் கரிகின்றது!
ஏழ்மையில் நீதி இருக்கின்றது - அந்த
நீதியும் எங்கே நிலைக்கின்றது...???

நடிப்பினால் மனிதம் விரிகின்றது - அந்த
நாடகம் பூடகம் செரிகின்றது!
உண்மைகள் எங்கோ இருக்கின்றது - அந்த
இருப்பினில் என்னதான் நடக்கின்றது...???

ஊழலில் உலகம் புதைகின்றது - அந்த
உலகத்தில் உறுதி வதைகின்றது!
உரிமையில் சிலகுரல் ஒலிக்கின்றது - அந்த
ஒலிகளும் எங்கே உரைக்கின்றது...???

கொடுமைகள் கெடுமைகள் செய்கின்றது - அந்த
கொடுமையில் குருதி கொதிக்கின்றது!
காத்திடும் கரங்களும் இருக்கின்றது - அந்த
கரங்களின் விலங்கையார் உடைக்கிறது...???

மதுவினில் வீரம் விழுகின்றது - அந்த
மயக்கம் மடமையை வளர்க்கின்றது!
பொதுமையைப் பேசிடும் நாவுகளும் - அட
போர்வையைக் கிழித்தெப்போ எழுகிறது...???

சாதியல் வெறிகள் தொடர்கிறது - இந்த
சமூகம் சாக்கடையில் கிடக்கிறது!
சாத்தானின் குணமெப்போ ஒழிகிறது? இங்கே
சமதர்ம்மம் என்றைக்குத்தான் வளருவது...???

பண்பாடு கொன்றப்புது நாகரிகம் - அட
பாடையிலே போகிறது தமிழறமும்!
பேச்சிலும் மூச்சிலும் பிறமொழியாம் - பின்பு
தாய்மொழி எங்கனம் நிலைப்பதுவாம்...???

கேள்வியே பதிலாய் இருக்கிறது - அந்த
பதிலிலும் கேள்வியே முளைக்கிறது!
தாய்த்தமிழ் தேசியம் ஓங்காமல் - அட
கேள்வியின் முதுகுகள் நிமிர்ந்திடுமோ...???


-----------------நிலாசூரியன்.

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (5-Jan-14, 3:01 pm)
பார்வை : 137

மேலே