மரம் -மனிதன் ஒரு நேர்காணல்

மரம் -மனிதன்
(ஒரு நேர்காணல் )


மனிதன் -------------மரமே,!
பரிணாம் வளர்ச்சியின் முதல் அறிவே!
நலம் தானே?


மரம்------
சில சமயம் நலம்.



மனிதன் -------------- அது எப்படி உன்னால் மட்டும்
எது நடந்தாலும்
பொறுத்துக்கொள்ள முடிகிறது?


மரம்---------------------------- நாங்கள் பூமிதேவியின் கருவில் இருந்து
ஜெனிப்பவர்கள்…….
தாய் குணம் தானே எங்களுக்கும்
இருக்கும்!


மனிதன் -------------- சரி சரிதான்,

ஆமாம்,அது எப்படி?பலகோடி கரு சுமக்க
முடிகிறது உன்னால்?
உனக்கு பிரசவ வலி வந்ததுண்டா?


மரம்----------------------ம் ,அடிக்கடி ,சிலசமயம் நொடிக்கு நொடி வரும் !



மனிதன் --------------புரியவில்லையே!

மரம்----------------------பலசமயம் உங்கள் இனத்தார்,பறிக்கிறேன்
என்கிற பெயரில்
எனக்கு அறுவை சிகிச்சை செய்வார்கள்……!

சில சமயம்,
என் முயற்சியால் கீழே விழும் சுகபிரசவமும்
நடக்கும்!

என்ன,
உங்கள் குழந்தைகள் குறை பிரசவம்
எனில்,
குளிரூட்டியில் வைக்கப்படுவர்!
எங்கள் குழந்தைகள்……..நெருப்பூட்டியில்
வைக்க படுவர். இதுதான்
வித்தியாசம்……..!


மனிதன் -------------ஓ!
முப்பொழுதும் நிற்கிறீர்களே…..
என்றாவது கால் வலித்ததுண்டா?


மரம்------------------சில சமயம் வலிக்கும்,ஆனால்
களைத்து போய் வரும் மனிதரின்
ஆத்ம திருப்தியில் வலியெல்லாம்
அந்த நொடியே மறைந்து போகும்!


மனிதன் ----------- நீங்கள்
எப்போதாவது பேச நினைத்ததுண்டா?


மரம்---------------- நாங்கள் வீண் பேச்சு பேசுவதில்லை
மௌனத்தால் பேசுவோம்!


மனிதன் --------------- மௌனத்தாலா?
யாரிடம்?
எதற்காக?


மரம்--------------------------அது
எங்கள் அந்தரங்கம்……….!


மனிதன் -----------------உங்களுக்கு கூட உண்டா
அந்தரங்கம்?

மரம்-------------------------இருக்க கூடாதா?


மனிதன் -----------------இருக்கலாம்,

மௌனத்தால் யாரடம் பேசுவாய்?
மௌனம் மொழியற்றது…..
ஆனால்,
பேசுவேன்,,,,,,, என்கிறாய்………!
மௌனத்திற்கு பாஷை உண்டா?

மரம்----------------------உம் !நிச்சயம் உண்டு!
அது,
அகம் ஒன்று படும் ஆன்மாக்களுக்கு
புரியும்!
நான் என் கருமேக காதலனுடன் பேசும்
மௌன பாஷை-மழை!


மனிதன் ---------- அடடா! மேலும் சொல்!

மரம்--------------- -உங்களுக்கு இருப்பது போல மூன்றுநிலை
எங்களுக்கும் உண்டு!


மனிதன் -------- மூன்று நிலையா?
என்ன நிலை?


மரம்-------------- கலவு ,கற்பு, துறவு……………..


மனிதன் ---------- என்ன?
இது எங்களுக்கு மட்டுமே உள்ள
தனித்துவம் ,இதை தான்
ஆறாம் அறிவில் அடக்கி உள்ளோம்………!
ஓரறிவு என
வரையறுக்க பட்ட உங்களுக்கு
இது உண்டா?
விளக்கம் தேவை……..!


மரம்----------------------கொஞ்சம் எங்கள் வாழ்வை பிரித்துப்பார்
புரியும்!



மனிதன் --------------புரிந்தது!ஆனால்
துறவு?


மரம்--------------------என்ன புரிந்தது?


மனிதன் -------------இரு மரம் அருகில்-காதல்
மகரந்த சேர்க்கை-கற்பு
ஆனால்
துறவு?


மரம்--------------------துறவென்பது எது?


மனிதன் -------------துறவு …………
நிறைய அர்த்தம் உண்டு!
பற்றற்ற நிலை,சுய நலமின்மை,எதையும்
எதிர்பாரா குண நிலை……….
இப்படி பல உண்டு!


மரம்-------------- நீ! சொன்ன எல்லாமும்
எங்களுக்கு உண்டு!
இதற்கு மேல் ஒன்று உண்டு!
அது!
எல்லோரும் நலமாய் இருக்க
வேண்டுதல்………..!


மனிதன் -------என்ன ?வேண்டுகிறாயா?யாரிடம்?
யார் உன் கடவுள்?


மரம்--------------- !மழை!


மனிதன் ----------மழையா?
மழை எப்படி கடவுளாக முடியும்?


மரம்---------------உங்கள் கடவுளின் குணம் என்ன?
யாரை நீங்கள் கடவுள் என்கிறீர்கள்?


மனிதன் ----------எங்கள் கடவுளின் குணம்
படைத்தல்,காத்தல்,அழித்தல்!.
எங்களுக்காக எல்லாவற்றையும் செய்யும்!
எங்கள் விருப்பங்களை நிறைவேற்றும்
நம்பிக்கை கடவுள்.!


மரம்----------------- அப்படியா?
அப்படியெனில், என் கடவுளுக்கும்
அதே குணம் தான் உள்ளது!


மனிதன் -----------மழைக்கா?

மரம்-----------------அதில் ஏன் இவ்வளவு ஆச்சரியம்?
மாரியாய் பொழிந்து காக்கிறான்……!
புயலாய் மாறி-அழிக்கிறான் !
என்னைப் போன்ற பல உயிர்களை படைக்கிறான்
இதற்கும் மேல்
, பல சமயங்களில்
நான் இருக்கிறேன்!என்கிற நம்பிக்கையை
தருகிறான்!


மனிதன் -----------சரிதான்!
ஒத்துக்கொள்ள முடியவில்லை!


மரம்---------------- நீ இன்னும் துறவு நிலைக்கு வரவில்லை!
நான் வந்து விட்டேன்!
உன் கடவுள்!என் கடவுள்! குணம் ஒன்று தான்!
நான் எப்படி உணர்கிறோமோ,
அந்த வடிவில் வார்க்க படுகிறது! இது தான்
கடவுள் நியதி!


மனிதன் -------------பாஷை பேசுவதாய் சொன்னாய்!
நீ! பேசும் பாஷை காதலா?
பக்தியா?


மரம்-----------------------இரண்டும் கலந்த ஆன்ம பாஷை,புரியவில்லை
எனில்,
உங்கள் பக்தி இலக்கியம் படி மனிதன் -------------இறுதியாக ஒரு கேள்வி!
உங்கள் இனம் இல்லாவிட்டால்
என்ன வாகும்?


மரம்--------------------குறைந்த பட்சம்,உங்கள் இனம் அழியும்!
அதிக பட்சம்,
தண்ணீரை போல்,
குடுவையில் அடைத்து வைக்க பட்ட
காற்றை விலைக்கு வாங்கி
சுவாசிக்க நேரலாம்,அதுவும்
சில தினங்களுக்கு மட்டும் தான் முடியும்!


மனிதன் --------------ஐய்யோ!
இப்போது தான் புரிகிறது!
மன்னித்து விடு!


மரம்----------------------மன்னிப்பு கோருவது மனிதனின் இயல்பு!
எப்போதும் மன்னித்து கொண்டே இருப்பது
மரத்தின் இயல்பு!

ஒரு வேண்டுகோள்!

மனதார மன்னிப்பு கேட்க நினைத்தால்
உடனே ஒரு மரக்கன்றை நடு!
உன் சந்ததியாவது நலமாய் இருக்கட்டும்.

.

எழுதியவர் : yathvika (6-Jan-14, 8:48 pm)
பார்வை : 975

மேலே