ஒன்றெனக்கூடு உரிமையை வெல்லு

மலர்களிலே எத்தனைதான் மணமிருந்தாலும் -அதில்
மாற்றமில்லை மலர்வதென்ற வகையி லொன்றாகும்
புலர்வதிலே எத்தனைதான் பொழுதுவந்தாலும் - இப்
பூமியிலே காலையின் புத் துணர்வில் ஒன்றாகும்
உலர் விழிகள் வழிந்தழுது துன்பங் கொண்டாலும்-இவ்
உலகிலெங்கும் இரங்குபவர் இல்லையென்றாகும்
சிலரதிலே துயர்தரவே தீமைசெய்தாலும் -நாம்
செல்வழியில் நேர்மைகொள்ளு, தீரம் உண்டாகும்
இசைதனிலே பலவகையில் ராகமுண்டாகும் - உன்
இதயமதில் உணர்வினிமை என்றுமொன்றாகும்
தசையினுள்ளே தமிழ்கலந்து குருதி சென்றாளும் - அத்
தருணமதில் வீரமொன்றே விளைவெனக் காணும்
அசைவதிலே விதியுமொரு பக்கம் நின்றாலும் - நீ
அதை வெல்லவே மனது ஒன்றா யாகிடவேண்டும்
வசைசொல்லியே வரும்சிலரால் வாழ்வு துண்டாகும் - அவர்
வழிமறித்து மதியுரைத்து வென்றிடவேண்டும்
திசைகள்தொறும் வழிகள்பல தனியேசென் றாலும் -நாம்
செல்லும் வழி முடிவினிலே ஒன்றிட வேண்டும்
விசையுடனே விரைந்து செலும் வில்லம்பு போலும் - அவ்
விளைவினிலே விடுதலையாம் இலக்கது வேண்டும்
பிசையுமுளத் துயர்களைந்து பெருமை கொண்டாடும் - இப்
பிறவிதனை இழிமை செய்வர் புறமுதுகோடும்
கசையடிகள் காணுமுடல் கனிவென மாறும் - இக்
காலமெனும் ஒன்றையினிக் காணுதல் வேண்டும்
நிலைமை வரும் மகிழ்வுடனே நிலமதை மீட்கும் -இந்
நேரமதில் நெஞ்சலையில் நீந்திடும் வெள்ளம்
கலை பலதென் றாயிருந்தும் காண்பவர் உள்ளம் -அக்
காட்சிதனைக் காணுகையில் களிப்பதே மிஞ்சும்
குலைகளிலே கனிகள் பல கூடுதல்போலும் - ந
குறியைஎண்ணி ஒற்றுமையாய் குழுமிடல் வேண்டும்
இலை குணங்கள் ஒன்றெனவும் இருந்திடும்போதும் -நீ
ஏற்றமுடன் தமிழ்நினைந்தே உழை -- நிலம்மீளும்

எழுதியவர் : Akramshaaa (8-Jan-14, 8:12 pm)
பார்வை : 48

மேலே