புத்தெழுச்சியாய் மீட்பாய் விடை

இன்னமும்
உறங்கிக் கொண்டிருக்கும்
தூக்கம் கலை ;
சோம்பலைத் தழுவும்
கதகதப்பா உன் நிலை ?
துணிச்சலுக்கு கொடு விலை !

எழுக தொய் மனமே
அழுந்திக் கிடப்பதில் ஆழமாகாதே ;
பகலவனைப் பார்
விடியலுக்குள் பொன்மணித்தேர்
விரைந்துன் இலக்கு சேர் !

அளவீட்டுத் தந்திரம்
அறிந்தவர் பலர் இங்கே;
இரு கைகளுக்குள் உலகை மூடு
வெளிச்சம் உனக்குள் தேடு
நாளைக்கு வேறு தினம் , இன்றே ஓடு !

நடப்பதைக் கவனி
ஒரு பிடிக்குள் இரையாகவும்
வசனகர்த்தாக்களுக்குத் திரையாகவும்
சுயநலப் பாய்ச்சலுக்குக் கரையாகவும்
பொதுவாய்ச் சம்மணமிட்டிருப்பாய் !

தூண்டிலாகு
பொறுமையின் எல்லை காண்பாய் ;
தடுமாறத் தவறு
தலைக்குனிவுகளைத் தணலில் சிதறு
கிளிப்பிள்ளை சமுதாயம் உதறு !

காகிதப் பூக்களுக்கும்
விலையதிகம் இந்நாளில் ;
கருத்தினில் சதைப்பற்று பெருக்கு
அலட்டல்களை உருக்கு
தோல்வியை சங்கடத்திற்குள் நெருக்கு !

சுதந்திரமாய்க் கூடுகட்டு
தனிமைப் பூங்காவில் ;
கால்விலங்கு உடை
கவனம் கையாள ஏது தடை ?!
புத்தெழுச்சியாய் மீட்பாய் விடை !

எழுதியவர் : புலமி (8-Jan-14, 9:17 pm)
பார்வை : 486

மேலே