மதயானைக் கூட்டம்

இயக்கம் விக்ரம் சுகுமாரன் என்ற அறிவித்தலோடு படம் முடிந்து போய்விடுகிறது. நள்ளிரவில் படம் பார்த்து முடித்திருந்தேன். கடைசிக் காட்சியில் கழுத்தில் வளரி வாகாய் உட்கார்ந்து கொண்டிருக்கையில் மூச்சுக்குழல் அறுபட்டு பார்த்தியாய் நடித்த கதிர் திணறிக் கொண்டிருந்த காட்சி என் மனதை அறுத்துக் கொண்டிருந்தது. கம்ப்யூட்டரை ஷட் டவுன் செய்து விட்டு பால்கனிக்கு வந்தேன். நள்ளிரவு ஷார்ஜா நேசனல் பெயின்ட்ஸ் பகுதி நானெல்லாம் உறங்கமாட்டேன்... உள்ள போடா என்று என்னைப் பார்த்து அதட்டியது. என் வீட்டிலிருந்து பார்த்தால் பழைய எமிரேட்ஸ் ரோடு தற்போதைய ஷேக் முகமது பின் சையித் ரோடு தெரியாது...ஆனால் அதில் அசுரத்தனமாய் விடிய விடிய அலைந்து கொண்டிருக்கும் வாகனங்களின் சப்தம் துல்லியமாய் கேட்கும்.

என் வீட்டிலிருந்து வலது புறம் பார்த்தேன் ஷார்ஜா யுனிவர்சிட்டி தூரமாய் தெரிந்தது. ஆறாவது மாடியிலிருந்து தற்கொலை செய்து கொண்டால் உயிர் போகுமா..? போகாதா என்ற ஒரு எண்ணம் விபரீதமாய் உள்ளுக்குள் எட்டிப் பார்த்த போது நான் கீழே சிதறிக் கிடந்த வாகனங்களை பார்த்துக் கொண்டிருந்தேன். பகல் நேரத்தில் அத்தனை வாகனங்களும் பிழைப்பு நோக்கி ஓடிவிடும். வாகன உரிமையாளர்கள் எல்லாம் காக்கை குருவிகளாய் அப்பார்மெண்ட் உலகத்திற்குள் ஏதேதோ கற்பனையில் உறங்கிக் கொண்டிருப்பார்கள். என்னைப் போல யாரேனும் ஓரிருவர் இந்த இயந்திர வாழ்க்கையிலிருந்து வலுக்கட்டாயமாய் தங்களைத் துண்டித்துக் கொள்ள இரவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கலாம்.

எனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் கிடையாது. இருந்தாலும் கல்லூரிக் காலத்தில் புகை பிடித்த அனுபவம் இப்போதும் புத்திக்குள் அலைந்து கொண்டுதானிருக்கிறது. ஐஸ்கட்டியைப் போல இருந்த அந்த குளுமையான சூழலுக்கு புகைத்தால் தேவலாம் என்று எனக்குத் தோன்றியது. வானம் பார்த்தேன். பூமியிலிருந்து முடிந்தவரை மெர்க்குரி பல்புகளின் வெளிச்சம் வானத்தில் வியாபித்துக் கிடந்தது. அதையும் கடந்து ஆழமான கருமையோடு வானமும், நட்சத்திரங்களும்....மெளனமாய்....என்னைப் பார்த்துக் கொண்டிருந்தன...!

பதினைந்து வருடமாக எனக்கும் வானத்துக்கும் இருக்கும் நட்பு அலாதியானது. அந்த வசீகர இரவின் பேரமைதியைக் கிழித்துக் கொண்டு மதயானைக் கூட்டம் படம் மீண்டும் புத்திக்குள் வந்து ஜதி சொல்ல ஆரம்பித்தது. எனக்குத் தெரியும் அந்த ஜதி ஒரு ரசிக்கும் நடனமாய் முடியாது. அது ரெளத்ரமாய் மாறி ஒரு ருத்ர தாண்டவத்தை எனக்குள் நிகழ்த்துமென்று....ஆதலால் மென்மையாய் அந்த திரைப்படம் கொடுத்த தாக்கத்தை சாதி பற்றிய எனது கொள்கைப் பார்வைகளை தூரமாய் வைத்து விட்டு அசை போட ஆரம்பித்தேன்.

எனக்கு மிக நெருக்கமான பல நண்பர்கள் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த கள்ளர்கள் சாதியைச் சேர்ந்தவர்கள். இராமநாதபுரம், சிவகங்கை மதுரை மாவட்டங்களில் முக்குலத்தோர்கள்அதிகம். கள்ளர், தேவர், மறவர்....இந்த மூன்று பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கும் வலுவான வரலாற்றுப் பின்புலங்கள் இருக்கின்றன. நான் கல்லூரியில் படித்த போது ஒரு நண்பனின் வீட்டுக்கு திருவிழாவிற்காக சென்றிருந்தேன். நிறைய நண்பர்கள் அவன் தோட்டத்து வீட்டில் இருந்த போது நான் நண்பனோடு அவன் வீட்டுக்குச் சென்றேன். வாசலில் இருந்த அவனின் அப்பத்தாவைப் பார்த்து..கும்பிடுறேன்..அப்பத்தா என்று சொன்னேன்.

" ஏப்பா....நீங்க என்ன ஆளுக...?" பளீச் என்று அந்த அப்பத்தா தூக்கிப் போட்ட கேள்வி எனக்குள் விழுந்து என்னை ஏதோ செய்தது. சங்கடமாய் நண்பனைப் பார்த்து நெளிந்தேன். அட....உள்ள வாடா மாப்ள என்று அவன் சைகை செய்ய....நான் வீட்டுக்குள் நுழைய முயன்றேன்..." ஏப்பு ...கேட்டுக்கிட்டே இருக்கேன் போறியளே.." அந்த அப்பத்தாவின் கணீர் குரலில் இருந்த ஆளுமையை என்னால் மீற முடியவில்லை. அந்த அப்பத்தாவிடம் எல்லாம் சாதியை ஏன் கேக்குறீங்க என்று சண்டையிட்டு எனக்குள் இருக்கும் பாகுபாடுகளற்ற சமூகப் பார்வையை சொல்லி விவாதிக்க முடியாது என்று தோன்றியது...

அதே நேரத்தில் அங்கே இருக்கும் சூழலை உடைக்கவும் விரும்பாமல்....இல்லப்பத்தா இந்தா வாரேன்....என்று சொல்லிவிட்டு நண்பனின் வீட்டுக்குள் சென்றேன். வீட்டில் உள்ளவர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு மீண்டும் நண்பனின் தோட்ட வீட்டிற்கு செல்ல வாசலுக்கு வந்த போது...

" கள்ளன் மறவன் கனத்ததோர் அகமுடையான்......." என்று ஆரம்பித்து அந்த அப்பத்தா ஏதோ சொல்லிக் கொண்டிருந்தது. " ஏன் மாப்ள இன்னுமா இப்டி எல்லாம் இருக்காக.." என்று நான் நண்பனிடம் கேட்ட 1996 ஆம் வருடம்...இப்போது எனக்கு அந்தக் காலமாய் போய்விட்டது...ஆனாலும் இந்த சாதியை வைத்து பேசும் இயல்புகளும் அதனால் கொள்ளும் பெருமைகளும் இன்னும் தீர்ந்து போகவில்லை. அடிப்படையில் வாழும் வாழ்க்கை முறை நமது குணத்தை தீர்மானிக்கிறது. ஜீன்களின் தாக்கமும் புறச்சூழலும் ஒரே நேர்கோட்டில் அமைந்து போக....அங்கே ஒரு மனிதனின் இயல்பு தீர்மானிக்கப்படுகிறது.

போரில் ஈடுபட்டு, போருக்காகவே தங்களை தயார் செய்து கொண்ட, ஊர்க்காவல் செய்த, மிருகங்களை வேட்டையாடிக் கொண்டு வர, பயப்படாத ஒரு கூட்டத்தின் ஜீன்கள் பாரம்பரியமாய் கட்டியமைக்ப்பட்டு....பரம்பரைகளுக்குள் செலுத்தப்பட அந்த குணத்தை பிரித்து எடுத்துக் கொண்டு சாதி என்னும் கட்டமைப்பை உருவாக்கி விடுகிறார்கள். இங்கே ஒரு சாதியை மையப்படுத்தி தேனி மாவட்டத்தில் நிகழும் தன்முனைப்பு போராட்ட வடிவமாக மதயானைக்கூட்டம் படத்தை இயக்குனர் வடிவமைத்திருக்கிறார். என்னிடம் கேட்டால் மதுரை, இராமநாதபுரம், சிவகங்கைப் பகுதியிலிருக்கும் பல்வேறு பிரிவுகளுக்குள் இருக்கும் மிகையான மனிதர்களின் குணமாய்த்தான் நான் இதைப் பார்க்கிறேன். சோ கால்ட் ஏதோ ஒரு சாதி என்னும் அடைப்புக்குள் இந்தப் படத்தில் உலாவும் கதைமாந்தர்களின் குண இயல்புகளை அடைத்து விடமுடியாது.

வறட்சியான பூமி அது. வானம் பார்த்த வாழ்க்கை அது. மதுரை மாவட்டத்தின் ஒரு சில கேரளாவை ஒட்டிய பகுதிகள் கொஞ்சம் செழுமையாய் இருக்கும். அதுவும் முல்லைப் பெரியாறு அணையின் உதவியால், வைகையின் கருணையால், மற்றபடி வானம் பார்த்த பூமியின் வாழ்க்கையே மிகப்பெரிய போராட்டம் நிறைந்ததுதான். போராட்டங்களில் எல்லாம் மிகப்பெரிய போராட்டம் உயிர்ப்போராட்டம். உணவுக்காய் மேற்கொள்ளும் முயற்சிகள். அடிப்படை வாழ்க்கைக்காக, வாழ்வுரிமைக்காக இயற்கையோடு மல்லுக்கட்டும் மனிதர்களுக்குள் ரெளத்ரம் எப்போதும் ததும்பிக் கொண்டே இருக்கிறது.

எதோடு நாம் அதிகம் இருக்கிறோமோ அதன் அருமை நமக்குத் தெரியவே தெரியாது. திருவண்ணாமலையில் வசித்து வருபவனுக்கு அந்த கோயிலும் மலையும் அவ்வளவு பெரிய உணர்வைக் கொடுத்து விடாது. தஞ்சாவூரில் வசிக்கும் எத்தனை பேர் தஞ்சை பெரிய கோயிலை தினசரி கடந்து போய் வந்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? தஞ்சையிலிருந்து திருவண்ணாமலைக்குச் சென்று ஆகா....என்று கை கூப்பி வணங்குவார்கள். கிரிவலம் செல்வார்கள். பொதுவாக நிதம் பழக்கத்திலிருக்கும் ஒன்று எவ்வளவு அரியதாய் இருந்தாலும்....எளிதாய் பார்க்க முடியும், கேட்க முடியும், கிடைக்கும் என்பதால் அதன் சுவாரஸ்யமும் அருமையும் கொஞ்சம் குறைந்துதான் போகும்.

உயிர் பிழைப்பதே வாழ்க்கை. அதற்காக வானம் பார்த்தலும், மழை பொய்த்தால் ரெளத்ரம் கொண்டு போர்கள் செய்வதும், தன் வீட்டுப் பிள்ளை உண்ண ஒண்ணும் இல்லாத போது செல்வச் செழிப்போடு இருப்பவனின் பொருள் கவர்ந்து கொண்டு வருதலும் சர்வ சாதாரணமான விசயங்கள். என் வாழ்க்கை இப்படியாயிருக்கிறதே....என் உறவுகளும், என் மக்களும் ஒன்றுமில்லாமல் இருக்கிறார்களே..என்ற கோபம் கொலைகள் செய்யவும் வைக்கிறது. பாண்டிய தேசத்தின் போர்கள் எல்லாம் நாடு பிடிக்கவும் தன்னுடைய அதிகாரத்தைக் காட்டவும் பெரும்பாலும் நிகழவில்லை. அங்கே நடந்த போர்கள் எல்லாம் தன்னை தற்காத்துக் கொள்ள அல்லது பழி தீர்த்துக் கொள்ள....என்றுதான் வரலாறு சொல்கிறது.

அப்படிப்பட்ட ஒரு கலாச்சார பரவல்கள் கொண்ட மண்ணில் இருக்கும் மனிதர்கள் அத்தனை பேருக்கும் ஒருவித கோபம் கெளரவம் என்ற பெயரில் எப்போதும் மூக்கு நுனியிலேயே இருக்கும். அதை மதயானைக் கூட்டம் கொஞ்சமும் பிசிறில்லாமல் தெளிவான திரைக்கதையின் மூலம் அழுத்தமாய் பதிவு செய்திருக்கிறது.

கழுத்தில் பாய்ந்து கிடக்கும் வளரியை எடுக்க வரும் தனது அப்பாவின் மூத்த தாரத்தை வெறுமையாய் பார்த்துக் கொண்டே.....அந்தக் கையைத் தட்டிவிடும் பார்த்தி கேரக்டர்....அந்த கையைக் கோபமாய் தட்டிவிடும் இடத்தில்......உயிர் எல்லாம் எங்களுக்கு....மயிறு மாறிடா....என்று அழுத்தமாய் சொல்லிவிடுகிறது. படத்தின் மொத்த கருவே அந்த ஒரு காட்சியில் விளக்கப்பட்டு விடுகிறது. கதிர் அச்சு அசலாக தெக்குச் சீமைப் பையனாகவே அவர் மாறி முதல் படத்திலேயே ஹிட்டடித்திருப்பது பாராட்டுக்குரியது.

கல்லூரியில் ஒரு சண்டையின் போது பாண்டியராஜா என்ற என் நண்பனுக்கு தலையில் அடிப்பட்டு விட்டது...! சரி அவனை வீட்டில் விட்டு வருவோம் என்று நானும் இன்னொரு நண்பனும் சாயல்குடிக்கு பயணப்பட்டோம். அவன் பெயர் பாண்டியராஜா... அவன் அப்பா பெயர் சண்முகராஜா...

ஒரு தெருவின் தலைவாசல் அவன் வீட்டு முகப்பு என்றால் கொல்லைப் புறம் அடுத்த தெரு. வீட்டுக்குள் செல்ல முகப்பில் செருப்பினை கழட்டிக் கொண்டிருந்தோம். தலையில் கட்டோடு பாண்டியராஜா திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான்...." மாப்ள கீழ விழுந்துட்டேன்னு சொல்லுங்கடா...ப்ளீஸ்டா சண்டையில அடிப்பட்டேன்னு அப்பாக்கிட்ட சொல்லாதீங்கடா..." திருப்பத்தூரிலிருந்து சாயல்குடி வரை கிளிப்பிள்ளையைப் போல சொல்லிக் கொண்டிருந்தான்...

மீசையை முறுக்கியபடியே....அப்பா வந்தார். என்னாச்சுப்பா என்று அவர் என்னிடம் கேட்ட உடனேயே உண்மையைச் சொன்னேன்....காலேஜ்ல சண்டைப்பா...அதுல ஒருத்தன் ராஜாவ அடிச்சுட்டான்....வேற ஒன்ணும் இல்ல மூணு தையல் போட்டு இருக்குப்பா அதான் விட்டுட்டுப் போலாம்னு வந்தோம்....

"ப்ப்ப்ப்ப்ப்ளார்ர்................" என்று ஒரு அறை விழுந்தது பாண்டியராஜாவுக்கு....ஏண்டா மானங்கெட்ட நாயே....அடி வாங்கிட்டு வந்து இருக்க......போய் உன்னை அடிச்சவன் மண்டைய உடைச்சு கையக்கால உடைச்சுப் போட்டுட்டு வா....வக்காளி வெக்கங்கப்பட்ட பயல பெத்துருக்கேனடா....த்த்தூ........." காறித்துப்பினார்...ராஜா மீது....

இல்லப்பா...என்று அவரை சமாதானப்படுத்தி வீட்டுக்குள் கூட்டிச் செல்வதற்குள் பெரிய பாடாகிவிட்டது.

இரவு உணவு அருந்தும் போது பாண்டியராஜாவின் இரண்டு சகோதரிகளும் அம்மாவும் என்னிடம் சொன்னார்கள்...."தம்பியளா திரும்ப போகும் போது நாலு பயலுகள கூட அனுப்புறேன்...ராசாவ அடிச்சவன காமிச்சு மட்டும் கொடுங்க...மிச்சத்த அவிங்க பாத்துக்கிடுவாய்ங்க...

வேண்டாம்மா....காலேஜ்ல சஸ்பெண்ட் பண்ணி வச்சு இருக்காங்க...அந்தப் பையனை...." மென்று விழுங்கிக் கொண்டே சொன்னேன்.

"சஸ்பெண்ட் பண்ணிப்புட்டா வலி தெரியாதுல்லப்பு....பொளக்க மறுக்கா போட்டாத்த்தேன்.. அடங்குவாய்ங்க...."

இது நடந்து கிட்டத்தட்ட இப்போது 17 வருடம் ஆகிப் போய்விட்டது. மதயானைக் கூட்டம் மீண்டும் என் பழைய நினைவுகளை கிளறிவிட்டது. இன்னமும் இந்தியா குறிப்பாக தமிழகம் சாதியைச் சுமந்து கொண்டு அலைகிறது. அரசு அலுவலகங்களுக்குச் சென்றால் என்ன சாதி நீ என்று கேட்கிறார்கள்...? கையெழுத்து வாங்க செல்பவன்....அந்த ஆபீசர் என்ன சாதி என்று கேட்கிறான்...? அடிச்சவன் என்ன சாதி என்று காவல்துறை புகார் அளிக்கப் போனால் கேட்கிறது...

சாதி பார்த்து தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துகிறார்கள்...., சாதிக்காரன் வோட்டு என்று இன்னமும் பேசிக் கொண்டிருக்கிறார்கள், சாதி, சாதி என்று மனிதர்கள் வாழ்வியல் சூழல்களையும், வளர்ந்த முறையையும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு இன்னமும் மீசை முறுக்குகிறார்கள்....

திராவிட இயக்கங்கள் இல்லாமல் மட்டும் போயிருந்தால் என்னவாயிருக்கும் என்று யோசித்துப் பார்க்கவே எனக்கு தலை சுற்றியது....

மணியைப் பார்த்தேன்....!

இரண்டே கால் என்று காட்டியது. விடிந்ததும் ஓட வேண்டும் வேலைக்கு....துபாய் அசுரகதியில் இயங்க ஆரம்பித்திருக்கிறது மீண்டும்....

ஆமாம்....

எக்ஸ்போ 2020ஐ வென்றிருக்கும் இந்த தேசம்...உலகமெங்கும் வசிக்கும் எத்தனையோ மனிதர்களுக்கு சாதி மத வேறுபாடுகளின்றி வாழ்க்கையைப் படியளக்கப் போகிறது...!

எழுதியவர் : Dheva. S (8-Jan-14, 8:51 pm)
சேர்த்தது : Dheva.S
பார்வை : 156

சிறந்த கட்டுரைகள்

மேலே