உலகத் தமிழன் - பொங்கல் கவிதை போட்டி

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ் கூறு நல்லுலகத்தின் தனிப்பெருங் கூட்டம்
இன்று தனித்துப் போன கூட்டம்.

அற்றைத் தமிழன் கங்கை கொண்டான்;
கடாரம் வென்றான்; கடல் பிறகோட்டி காலம் வென்றான்.
ஆனால் இற்றைத் தமிழன்..?
மறம் மறந்த மரத்தமிழன்.

ஈழப்போரின் கொலைக்காட்சிகளில் உறவுகள் ஓலமிட்டபோது
வீட்டுத் தொலைக்காட்சிகளின் குத்துப்பாட்டுக்குத் தாளமிட்டவன்.

பண உணர்வே மன உணர்வாய் மரத்துப் போனவன்
சின உணர்வே தன் இன உணர்வு என்று
ரவுத்திரம் பழகச் சொன்ன பாரதியை மறந்தவன்.

இனியொரு விதி செய்வோம் தோழனே!

குழிக்குள் ஆயுதம் வைத்துப் பதுக்கிப் பார்த்த
இனங்கள் ஆயிரம் உண்டு. ஆனால்
மொழிக்குள் ஆயுதம் வைத்தவர் நாம்.
அறிவே வலுவான ஆயுதம்!

தன் சாதிக்காக அடிக்கடி அரிவாளேந்தும் நாம்
தமிழ் சாதிக்காக அறிவேந்துவோம்.

ஈழத்தமிழன்; இந்தியத் தமிழன்;
எந்தத் தமிழனும் வேண்டாம்.
எல்லோரும் ஓர் இனம் .. உலகத்தமிழன்.!

உலகத் தமிழர்களே ஒன்றுபடுங்கள்!
உலகத் தமிழனாய் ஒன்றுபடுங்கள்!

எழுதியவர் : கணேஷ் எபி (10-Jan-14, 4:11 pm)
சேர்த்தது : ganesh ebi
பார்வை : 182

மேலே