உளியை செதுக்கிய சிலை

ஈரப்பதங்களின்
பிண்டமாம் மேகம்
பொழிவது
மழையா ?
மையா ?

மழை என்றது
உலகம்
புது’மை’ என்றேன்
நான்..

ஒவ்வொரு துளியிலும்
ஒருவித கரு வைத்தேன்
எவ்வித சலனமின்றி
புதுவித கவியெழுதினேன்

ஓராயிரம் துளிகளில்
எந்த துளியில்
எந்தன் காதலி...!
அந்த துளியின்
மையெடுத்தேன்.
மையக்கருவில்
காதலை கவியில்
உண்டாக்கினேன்.
------
எண்ணற்ற துளிகளில்
என்னை தள்ளி
ஒரு துளி
துள்ளி துள்ளி
விளையாடியது.
அந்த துளியை
எந்தன் பிள்ளை
என்றேன்...!
-------
சிறு சிறுதுளிகளுக்கு
நடுவே
துறு துறுவென
நிலத்தோடு மோதி
அக்னி தெளித்தது
ஒருசில துளிகள்
நிச்சயம் இது
எந்தன் பாட்டன்
பாரதியின் பாட்டுத்துளிகள்
என்றேன்...!

---------

---------

மழை நின்றால்தான்
நிறுத்தத்தில் நிற்குமாம்
மாநகர பேருந்து.


”எங்க சார் போகணும் ??”

ஆட்டோக்காரன் எனை
ஆட்டிக்கொண்டே கேட்டான்
ஆட்கொண்ட கற்பனை
ஆட்டமிழந்தது.....!!

---------
---------

ஓ ! மேக சிலையே !
பொழிந்து கொண்டே இரு
நீ செதுக்கியது
துளியல்ல
உளி..!

எந்தன் கற்பனையை
செதுக்கிய உளி...!

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (12-Jan-14, 3:46 am)
பார்வை : 357

மேலே