நண்பேன்டா வே புனிதா வேளாங்கண்ணி

"டேய் மச்சான்! இண்டெர்வியூக்கு போனியே என்னாச்சு"

"அத ஏண்டா கேக்குற இதுவும் ஊத்திக்கிச்சி. ஒருமுடிவுக்கு வந்துட்டேண்டா.. படிச்ச படிப்புக்கெல்லாம் வேலைய எதிர்பார்த்தா முடியாது. கிடைக்கிற வேலைய ஏத்துக்க வேண்டியதுதான்"

"சரிடா மச்சான் நாளைக்கு எங்க அலுவலகத்துக்குவா. ஒருவேலைக்கு சொல்றேன்"

"சரிடா மச்சான்"

நண்பர்கள் நான்கு பேரும் பேசி அரட்டை அடித்துக்கொண்டு அமர்ந்திருந்தனர்.

"டேய்! டேய்! மச்சான் உங்க மாமா அங்க போறாருடா"

"சரி சரி அவற பார்க்காதிங்கடா.அப்பறம் ஒரு வகுப்பே எடுப்பார்"

"சரிடா" போலாம் என நால்வரும் கலைந்து சென்றனர்.

சில மாதங்கள் கழிந்தன

அவனுக்கு வேலையும் கிடைத்துவிட்டது.

"அம்மா சாப்பாடு ரெடியா, அலுவலகத்துக்கு நேரமாச்சு", என சொல்லியவாறு வெளியில் வந்தான்.

அக்கா வந்தாள்.

"வாக்கா"

"வாடா மாப்ளே உங்க அப்பா வரலயா", என்று அக்காவின் குழந்தைய தூக்கி கொஞ்சியவாறு கேட்டான்.

"தம்பி அவருக்கு கொஞ்சம் பணம் வேணுமாண்டா.. அதான் வந்தேன்"

"வாடி மாப்ள வரலயா", எனக் கேட்டுக்கொண்டே அம்மா வர, "அம்மா" என இழுத்தாள் மகள்.

"எல்லாம் காதுல வாங்கிட்டுதான் வந்தேன். இப்பதான் உன் தம்பி வேலைக்கு போறான்.

"அம்மா விடும்மா மாப்பிள்ளைக்கு ஏதாவது அவசர வேலையா இருக்கும். இல்லையின்னா கேக்க மாட்டாறே, நான் யார்கிட்டயாவது கேட்டுப்பாக்குறேன்"

"டேய் உங்க மாமாட்ட கேளேண்டா"

"யாரு உங்க அண்ணங்கிட்டயா. இருந்தாலும் உன‌க்கு உங்க அண்ண மேல நம்பிக்கை அதிகம்மா சரி. உன‌க்காக கேட்டு பார்க்குறேன்"


மாமா வீடு.

மாமாவின் மகள் ஓடி வந்தாள்.

"ஐ அத்தான் வாங்க! வாங்க! உள்ள விட மாட்டேனே!"

"ஏய் உள்ள விடு நான் ஒரு அவசர வேலையா உங்க அப்பாவ பார்க்கணும்"

"ம் விடமாட்டேன். எனக்கு ஒரு பதில் சொல்லுங்க. வேலைக்கு போனீங்கலே.. எனக்குன்னு ஏதாவது வாங்கித்தந்திங்களா"

"ஏய் நானே உனக்கு தாண்டி அப்புறம் என்ன வேணும்?"

"ம்..."

"வாங்க மாப்ள. எவ்ளோ நேரந்தான் அப்படியே நிப்பீங்க. ஏம்மா அவற விடு.."

"என்ன மாப்ள.. இவ்ளோ தூரம்?"

"இல்ல மாமா. அக்கா வந்திருக்கு.. ஏதோ அவசரமா பணம் வேணுமாம். அதான்..", என்று இழுக்க..

"இரண்டு நாள்ல ஆபிஸ்ல வாங்கி திருப்பி தந்தர்றேன் மாமா"

அரைமணி நேரம் இல்லாத பேச்செல்லாம் பேசிவிட்டு

"இப்ப வயல்ல அறுவடை மாப்ள.. கைல பணம் இல்ல" என்று சொல்லிவிட‌

"சரி மாமா", என்று எழுந்து வந்துவிட்டான்.

மகள் அப்பாவிடம் கோவித்துக்கொண்டாள்.

"ஏன்ப்பா.. அத்தான் கஷ்டம்னு வந்து கேட்டாங்க.. ஏம்ப்பா இல்லேனு சொன்னீங்க.."

"அம்மாடி நான் ஒண்ணும் வேணும்னு அப்படி சொல்ல.. பின்னாடி ஏதாவது ஒரு பிரச்சனைனு வரும்போது நமக்கு உதவி செய்ய மாமா இருக்கறார்னு நெனப்பு தான் வரும். அவரே எப்படியாவது புரட்டட்டும்", என்றார்.

மாலை..

"ஏண்டா மாப்ள.. ஒரு மாதிரியா இருக்க.. ஆபிஸ்க்கு கூட வரல..", என்று நண்பர்கள் கேட்க..

அவன் விவரத்தை சொல்ல, "சரி விடு நாங்க பாத்திக்கிறோம்.. நீ வீட்டுக்கு போ", என்றனர்..

இரவு நண்பர்கள் வீட்டிற்கு வந்து வேண்டிய பணத்தை கொடுத்தனர்.

"எப்படிடா நீங்களும் என்னைப்போலத்தானே"

"டேய் மச்சான்.. எப்படியோ புரட்டீட்டோம்.. நாளைக்கு எங்களுக்கு ஒண்ணுனா நீ பாத்துக்க மாட்டியா", என்றனர்.

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (14-Jan-14, 2:15 pm)
பார்வை : 260

மேலே