செம்மொழியாம் நந்தமிழின் தனிச்சிறப்பு

இந்தியாவில் செம்மொழிகள் வடமொழி எனப்படும் சமஸ்கிருதமும் தமிழும் தான். இவ்விரண்டு மொழிகள் மட்டுமே வேறுமொழிகளில் இருந்து கடனாகப் பெற்ற சொற்களை உதறிவிட்டுக் கூட செயல்பட முடியும். தெலுங்கு மொழிக்கும் போராடி செம்மொழி தகுதியைப் பெற்றார்கள். வடமொழியும் தமிழும் எப்போது தோன்றின என்பது பற்றி ஆதாரங்கள் இல்லை. ஆனால் மற்ற இந்திய மொழிகள் எல்லாவற்றிற்கும் அவை தோன்றிய காலம் பற்றிய வரலாற்றுப் பூர்வமான ஆதாரங்கள் உள்ளன்.
திராவிட மொழிகளிலேயே மிகவும் இளைய மொழி மலையாளம் தான். பழைய மலையாளம் ஏறக்குறைய தமிழைப் போலவே இருக்கும். அதை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சமஸ்கிருத சொற்களைக் கல்ந்து அம்மொழியை ஒரு கடினமான மொழியாக மாற்றி வருகிறார்கள். அதே நிலையை தெலுங்கு கன்னட மொழி பேசுவோரும் பபின்பற்றுகின்றனர். ஆனால் இம்மூன்று மொழிகளிலும் உள்ள தமிழ் சொற்களை உதறிவிட்டு அவர்களால் ஒரு வாக்கியத்தைக்கூட பேசவோ எழுதவோ முடியாது. பெயர் சொற்களில் மட்டும் வடமொழியில் இருந்து வந்த சொற்கள் தெலுங்கில் அதிகமாகவும், அதற்கு அடுத்து கன்னடத்திலும், அதைவிடக் குறைவாக மலையாளத்திலும் உள்ளன.
ஆனால் தமிழ் மட்டுமே கடன் பெற்ற சொற்களை உதறிவிட்டுக் கூட செயல்பட முடியும். வடநாட்டு மொழிகள் எல்லாமே சம்ஸ்கிருதத்தை உதறி விட்டு ஒரு வாக்கியத்தைக்கூட அமைக்க முடியாது. சமஸ்கிருதம் செம்மொழியாக இருந்தாலும் மக்கள் மொழியாக இல்லை. அந்தக் காலத்தில் அது பண்டிதர்கள் மொழியாக இருந்தது. தற்காலத்தில் வழிபாட்டிலும், சாத்திரம் சடங்குகளிலும் சமஸ்கிருதம் கற்றுத் தரப்படும் கல்வி நிலையங்களில் வகுப்பறையில் மட்டுமே பயன்படுகிறது.
சமஸ்கிரும், இந்தி ஆகிய மொழிகளை வளர்க்க இந்திய அரசு கோடிக்கணக்கில் செலவிடுகிறது. இப்பொழுது செம்மொழியாம் நந்தமிழ்க்கும் தாராளமாக பண உதவி கிடைக்கிறது.
சமஸ்கிருதத்தை கர்நாடகாவில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையில் உள்ள மக்களே பேசுகிறார்கள்.
ஆனால் தமிழின் நிலை அதுபோல் இல்லை ஏறத்தாழ ஏழு கோடி மக்கள் தமிழைப் பயன்படுத்துகிறார்கள். உலகின் பெரும்பாலான நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள். பேராசிரியர் சுந்தரம் பிள்ளை எழுதிய நாடகம் மனோன்மணியம். இந்த நாடகத்தின் முகப்புரையில் வரும் “நீராரும் கடலுடத்த” என்ற பாடலே தமிழ்த் தாய் வாழ்த்தாக உள்ளது. அந்த பாடலில் தமிழைப் பற்றிச் சொல்லும் போது “சீரிளமை குன்றாத” என்ற சொற்றொடரால் தமிழுக்குப் புகழாரம் சூட்டுவார். தமிழை ஒழித்துக் கட்ட எத்தனையோ பேர் அரும்பாடு பட்டனர். இன்று அந்த வேலையை நம்மில் பலரும் ஊடகங்கள் பலவும் செய்யும் வேலை தான் வேதனை தருவதாக உள்ளது.

தமிழ்த் தாய் வாழ்த்து (திருத்தம் செய்யப்பட்டது):

"நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!

உன் சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!!
வாழ்த்துதுமே!!!"

பேராசிரியர் சுந்தரம் பிள்ளை எழுதியது:

"நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!"

புதுச்சேரி அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் வாழ்த்துப்பாடலை எழுதியவர் பாரதிதாசன் ஆவார். இவர் எழுதிய இசை அமுது என்னும் பாடல் தொகுப்பின் இரண்டாம் பகுதியின் முதல் பாடல் இதுவாகும்.[1]

வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே!
மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே!
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே
வீரனின் வீரமும், வெற்றியும் நீயே!

தாழ்ந்திடு நிலையினில் உனை விடுப்பேனோ?
தமிழன்எந் நாளும் தலைகுனி வேனோ?
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்
தோன்றுடல் நீஉயிர் நான்மறப் பேனோ?

செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்களித்தேனே!
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!

முந்திய நாளினில் அறிவும் இலாது
மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போலே
செழித்தஎன் தமிழே ஒளியே வாழி!
இம்மூன்று பாடல்களையும் விக்கிப் பீடியாவில் பார்க்கலாம்

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (19-Jan-14, 8:41 pm)
பார்வை : 1647

சிறந்த கட்டுரைகள்

மேலே