காலமென்னும் நதியினிலே

எழுதும் போது பாலகுமாரன் சார் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாரோ தெரியவில்லை.....ஆனால் அதைப் படித்து முடிக்க கிட்ட தட்ட 2 வருசம் ஆகிவிட்டது. உடையார் ஆறாவது பாகத்தைப் முடித்து விட்டு அதை விட்டு விலகி வர முடியவில்லை. விடுமுறைக்கு வீட்டுக்கு வந்து பின் மறுபடி கல்லூரிக்கோ இல்லை வேலைக்கோ வேறு ஊருக்கு கிளம்பும் போது ஒரு மாதிரி ஏக்கமாக இருக்குமே அது மாதிரி இருந்தது. புத்தகத்தை எடுத்து மடக்கி வைக்க மனதே வரவில்லை.அது கதையல்ல ஒரு வாழ்க்கை. அழகிய ஒரு கலாச்சாரம். ராஜராஜசோழன், பஞ்சவன் மாதேவி, இராஜேந்திரச் சோழர், பிரம்மராயர் கிருஷ்ணர் ராமன் அவருடைய மகன் அருண்மொழிப் பட்டன், வல்லவராயர் வந்தியத் தேவர், பெருந்தச்சர் குஞ்சரமல்லன், வினோதகப் பெருந்தச்சன்....,

எல்லாவற்றுக்கும் மேலாக கருவூர்த் தேவர்... கதையின் ஆதார சக்தியாய் இருக்கும் நிசும்ப சூதனி....இப்படியாய் விரிவடைந்து கொண்டே செல்லும் ஆதிக்கம் நிறைந்த பாத்திரப்படைப்புகள் முதல் தெருவில் சாதாரணமாய் வணிகம் செய்யும் மனிதர்கள், அவ்வப்போது சண்டையிடும் மறவர்கள் என்று மனம் முழுதும் மனிதர்கள் வியாபித்து நின்று கொண்டிருக்கிறார்கள்.

முழுதாய் இந்த நாவலை வாசித்து முடித்த பின்பு ஒரு நாவல் எப்படி எழுதப்படுகிறது? அதன் நகர்வுகள் என்ன மாதிரியாக இருக்கிறது? எப்படி ஒரு கதையை நெய்து கொண்டு செல்வது, பாத்திரப்படைப்புகளின் கூர்மை எப்படி இருக்கவேண்டும்..? எடுத்துக் கொள்ளும் களமும் சூழலும், செய்தியும் என்ன மாதிரியான தாக்கத்தை வாசகனுக்குக் கொடுக்க வேண்டும்? ஒரே நேர்கோட்டில் இல்லாத பல்வேறு தளங்களில் கதை பயணிக்கும் போது எப்படி அதை முடிச்சுட்டு கோர்வையாக சொல்ல வேண்டும்..? எதைப் பேச வேண்டும்...? எதை விட வேண்டும்...? எந்த இடத்தில் ஆதாரக் கருத்துகளை தரவுகளின் அடிப்படையில் பேச வேண்டும்......? எந்த இடத்தில் கற்பனையைச் சேர்க்க வேண்டும்..? பல்வேறு பட்ட பாத்திரப்படைப்புகளின் அடிப்படையில் பார்வைகளைப் பதியும் போது அந்தப் பாத்திரப்படைப்போட தனித்தன்மையை எப்படி வெளிப்படுத்திக் காட்டுவது.....என்பதை எல்லாம் கற்றுக் கொள்ள முடிந்தது.

இது எல்லாவற்றுக்கும் மேலாக சிறுகதை, அனுபவக் கட்டுரைகள், சமூகம் சார்ந்த சிந்தனைகள் என்பதை சாதாரணமாக உள்ளுக்குள் தோன்றும் தாக்கங்களின் அடிப்படையில் படைத்து விட முடியும். இதற்கு ஓரளவிற்கு அனுபவமும் அந்த அனுபவம் கொடுத்த புரிதலும், தெளிவும் அன்றாட வாழ்க்கையில் நம்மைச் சுற்றி நிகழும் விசயங்களை உற்று நோக்கும் கூர்மையும் மட்டும் இருந்தால் போதும். கூடவே நிறைய புத்தகங்களை வாசிக்கும் போதும், நல்ல திரைப்படங்களை பார்க்கும் போதும் நமக்கு நிறைய செய்திகள் உள்ளுக்குள் தோன்றும் அதன் அடிப்படையிலும் நாம் ஏதோ ஒன்றை எழுதி விட முடியும்.

இப்படித்தான் இவ்வளவு நாள் நான் என்னுடைய வலைத்தளத்தில் எழுதி வந்திருக்கிறேன்....ஆனால் இவற்றை எல்லாம் கடந்த ஒரு அர்ப்பணிப்பும், உழைப்பும், படைக்க வேண்டியதின் பொருட்டு ஒரு தேடலும் வேட்கையும் வேண்டும் என்பதை நிறைய மூத்த எழுத்தாளர்களின் படைப்புகளின் மூலம் நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். உடையார் ஒரு வரலாற்று புதினம் மட்டுமல்ல.....பாலகுமாரன் என்ற மனிதரின் கடும் உழைப்பு என்பதை உணர முடிந்தது. ஒரு எழுத்தாளன் வியாபாரியாகவும் தன்னை வரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இப்படியான வியாபாரத்தில் தன் சுயத்தை இழந்து விடாத ஒரு தெளிவும் மிக மிக அவசியமாயிருக்கிறது.

சமகாலத்தில் நிறைய பேர்களுக்கு எழுதும் ஆசை வந்திருக்கிறது. தற்போது சென்னையில் நடக்கும் புத்தக கண்காட்சியில் நிறைய இளம் எழுத்தாளர்களின் புத்தகங்கள் வெளியாகி சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றன. எழுத்தாளனுக்கு என்று கட்டியமைக்கப்பட்டிருந்த தொன் மரபுகளை எல்லாம் இளையர்கள் இன்று சர்வ சாதாரணமாய் உடைத்துப் போட்டிருக்கிறார்கள். இலக்கியம் என்பது பாமரனுக்கு வெகு தூரமானது என்பது போன்ற மாயப் பிம்பங்கள் வரும் காலங்களில் இந்த எழுச்சியினால் வெகு நிச்சயமாய் கலைந்து போய்விடும். பிளாக் என்னும் வலைத்தளத்தில் நமக்குப் பிடித்தது பிடிக்காதது என்று எல்லாவற்றையும் பதிவு செய்து கொண்டிருந்த எனக்கு....

என் எழுத்து ஒற்றை பரிமாணத்தில் ஒரே ஒருவனின் பார்வையாய் மட்டும் இருக்க கூடாது என்று தோன்றிய இடம்தான் எனது பரிணாம வளர்ச்சி என்று நினைக்கிறேன். நிறைய புத்தகங்கள் வாசிக்கப்படாமல் என்னிடம் இருக்கின்றன. நிறைய மனிதர்களைப் பற்றியும் படிக்க வேண்டி இருக்கிறது. பொருள் ஈட்ட வேண்டி ஓடும் ஓட்டம் ஒரு நாளின் மிகுதியை விழுங்கி விடுகிறது. நம்மைச் சார்ந்திருக்கும் குடும்ப உறவுகளோடு செலவிடும் நேரம் மீதியை விழுங்கி விடுகிறது இதற்கு அப்புறமாய் இந்தப் பரந்து விரிந்து கிடக்கும் வாழ்க்கை சமுத்திரத்திற்குள் நான் மூழ்கித் திளைக்க வேண்டும். யாரோ ஒருவன் தெரியாமல் ஒன்றும் சொல்லவில்லை...கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்று.....இங்கே நான்(ம்) கற்றது கையளவு கூட கிடையாது...என்பதுதான் உண்மை.

தானியம் பொறுக்கும் குருவியின் கூர்மையோடு, தேர்ந்த சிற்பி ஒரு கல்லை உயிராக்கும் சிரத்தையோடு செதுக்கும் சிற்பத்தைப் போன்று இனி எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. ஏனோ தானோ என்று எழுதிச் செல்வதிலும் பொருள் ஈட்டுவதற்காய் நிறைய பேரை ஈர்க்கும் வகையில் வசீகரச் சித்து விளையாட்டுக்கள் விளையாடவும் எனக்கு விருப்பமில்லை. பெண்ணின் அவயங்களைப் பற்றி வக்ரமாய் எழுதுவதோடு இல்லாமல், தொடர்ச்சியாய் இயல்பாய் பேசுகிறேன் பேர்வழி என்று அபத்தங்களை தனது பேஸ்புக் சுவற்றில் கிறுக்கிக் கொண்டிருக்கும் ஒருவருக்கு ஏராளமான ரசிகர்கள்.

அவரது புத்தகத்தை ஒரு முன்னணி பதிப்பகமும் வெளியிட்டு விட்டது. அதற்கு விளம்பரம், விழா என்று பணம் புகுந்து விளையாடியது அங்கே...!ஈக்கள் இனிப்பை மட்டும் தேடிச் செல்வதில்லை என்பதையே இந்த நிகழ்வு எனக்கு உணர்த்தியது. ஒரு எழுத்தாளன் தரமான படைப்புகளைக் கொடுக்க வேண்டும். என் புத்தகம் மட்டும் விற்க வேண்டும் என்பதைக் கடந்து எதை நான் இங்கே பதிவு செய்கிறேன் என்பதும் மிக முக்கியமாகிறது. எனது எழுத்து நான் வாழ்ந்த கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு. எத்தகைய ரசனை கொண்ட மக்கள் வாழ்ந்தார்கள் எதை ரசித்தார்கள் என்பதற்கான சான்று. அடுத்த தலைமுறையினர் சிலாகித்துப் பேச இங்கே அற்புதமான உணர்வுகளை நாம் விட்டுச் செல்லவேண்டும். ஒவ்வொரு படைப்பாளிக்கும் இந்த தார்மீக கடமை இருக்கிறது. நல்ல படைப்புகளே தனது சந்ததிகளை வழிநடத்திச் செல்கிறது.

என்னுடைய எழுத்தை வாசிக்கும் நண்பர்கள் உங்களின் அனுபவங்களை என்னோடு பகிர்ந்து கொள்ளத் தயங்காதீர்கள். தாக்கம் கொடுத்த நிகழ்வுகளையும் பகிரலாம் என்று நீங்கள் நினைக்கும் அனைத்துச் சம்பவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்....ஏன் தெரியுமா?

எழுதுவது என்பது தனக்குத் தெரிந்ததை ஊருக்குச் சொல்லிச் செல்வது மட்டும் கிடையாது. அகண்டு பரந்து விரிந்த இந்த பிரபஞ்சத்தில் அமைதியாய் சுற்றிக் கொண்டிருக்கும் இந்த பூமியில் எல்லா உயிராகவும் இருந்த பார்க்க வேண்டிய ஒரு பெருவேட்கை எழுத்தாளனுக்கு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நான் பல நாட்கள் ஒரு பசுவாய் மாட்டுக் கொட்டகையில் நின்றிருக்கிறேன். இரவுகளில் உறங்கக் கண் மூடும் பொழுதில் ஈக்கள் உடலின் மீது ஏறி விளையாட, வாலால் அவற்றை விரட்டிக் கொண்டு, தோலை உலுக்கி அவற்றை உடல் விட்டு உதிர்த்துக் கொண்டும்.....ஈரமண்னில் கால் மடக்கி அமர்ந்து கொண்டு எண்ணங்கள் ஏதுமில்லாமல் இரைப்பையிலிருக்கும் உணவை மீண்டும் வாயில் எடுத்து அரைத்துக் கொண்டே.....

கண் மூடி லயித்திருந்திருக்கிறேன்.

ஒரு தெரு நாயாய் பலர் கல் எறிய ஓடி இருக்கிறேன். மனிதர் உணவு கொடுத்து தலை தடவும் போது தோன்றும் இனம் புரியாத பரவசத்துக்காய் வால் குலைத்து என் உணர்வினை வெளிப்படுத்தியுமிருக்கிறேன். சாலையோர கடையில் விற்பனை செய்பவனாக, ஒரு விலை மாதுவாக, மது அருந்தி விட்டு கொடுமை செய்யும் ஒரு குடும்பத் தலைவனாக, வியாபாரியாக, அரசியல்வாதியாக, கொலைகாரனாக, நடிகனாக, பைத்தியக்காரனாக, ஒரு ஆத்திகனாக, நாத்திகனாக தீவிரவாதியாக........

மெளனமாய் படுத்துக் கிடக்கும் மலையாக, ஆர்ப்பரிக்கும் கடலாக, ஒரு பெண்ணாக, கடவுளாக, மிருகமாக.....

இருந்து பார்க்க ஏற்படும் ஆசையே எழுத்து. இங்கே சுயத்தை மையமாய் வைத்துக் கொண்டு உடல் தாண்டி வெவ்வேறு இடங்களுக்குப் பயணித்து, அனுபவித்து அதை மீண்டும் ஒரு முறை மாடு அசை போடுவது போல அசை போட்டுப் எழுதிப் பார்ப்பதில் ஒரு சுகமிருக்கிறது. ஒரு மனிதன் அவனது உடல் சார்ந்த அனுபவங்கள் என்று குறுக்கிக் கொள்ளாமல்.....

எல்லாமாய் இருந்து பார்க்க விரும்பும் ஒரு தேடலின் விளைவே இங்கே நான் தட்டச்சு செய்து கொண்டிருப்பது. எந்த அவசரமும் இல்லை. யாருடனும் போட்டியிட வேண்டிய நிர்ப்பந்தமும் இல்லை....தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் இந்த கால நதியில் புதிது புதிதாய் ஏதோ ஒன்றை படைத்தளிக்கும் பெரு விருப்பம் மட்டுமே என்னிடம் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

சமகாலச் சங்கடங்களை எல்லாம் சமாளித்து....நிறைய வாசிக்க நிறைய எழுத, நிறைய பயணிக்க , நிறைய மனிதர்களைச் சந்திக்க காலம் எனக்கு வரம் அருளட்டும்...!

எழுதியவர் : Dheva .S (19-Jan-14, 11:02 pm)
சேர்த்தது : Dheva.S
பார்வை : 251

சிறந்த கட்டுரைகள்

மேலே