காமுகனின் கலியாட்டம்

நான் ஒரு காமுகன். என் வயதோ இருபத்தி ஆறு. என் குறியெல்லாம் இளம் வயது பெண்கள் தான். அவர்களை காதல் செய்வது எனது வாடிக்கை. அவர்களின் நம்பிக்கையை சம்பாதிப்பது என் தலையாயக் கடமை. சிலக் காலம் பழகி அவர்களை என் வலையில் விழ வைப்பது என் திறமை. விழுந்தப் பிறகு அவர்களை அணு அணுவாய் ரசித்து ருசித்து கத்தி கதற வைத்து அனுபவிப்பதில் நான் கில்லாடி. இதுவரை என் திட்டப்படி இருபத்தி எட்டு பெண்களின் வாழ்க்கையை நான் சூரையாடி மகிழ்ந்திருக்கிறேன்.

காமக் கொடூரன் அல்ல நான். இது என் குலத்தொலிலும் அல்ல. இருந்தும் இது என் பொழுதுப் போக்கு. அதற்கான காரணங்களையும் அவசியங்களையும் நான் இதுவரை அலசி ஆராய்ந்தது இல்லை. அதற்கான ஆர்வம் கூட எனக்கு இல்லை எனலாம். ஏன், அதுபோன்ற எண்ணங்களே எனக்கு வந்ததில்லை. தவறு செய்வதாக எண்ணி நான் மனம் குறுகுறுத்தது இல்லை. பாவமோ என அஞ்சி என் செயல்களை நிறுத்திக் கொண்டதும் இல்லை.

இருபத்தி எட்டு பெண்களின் வாழ்கையை நாசம் செய்த ஈனப் பிறவி நான் என யார் சொன்னாலும் என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்கான வலுவான காரணங்கள் என்னிடம் உண்டு. இது ஒருக் கால், என்னிலையை நான் தற்காத்துக் கொள்வதற்காய் சொல்லும் விடயங்கள் அல்ல. உண்மை. அதைத்தான் சொல்லப் போகிறேன். ஆம், என் வலையில் விழுந்த பெண்களில் பெரும்பாலோர் இளங் கன்றுகள் கிடையாது. எல்லாம் வாடி வதங்கிய கீரைத் தண்டுகள் தான். கைப்படாத ரோஜாவாக என்னிடம் வந்துப் பூத்தவள் என் துர்கா. அவளை ஒரு நாளும் குப்பை சகதியில் வீசி எறிய நான் விருப்பப்பட்டதே இல்லை. என்னவள் அவள்.

இது எந்த வகையான அன்பு என சிந்திக்கையில் அவள் சொன்னால் அதுதான் காதல் என்று. என்னவோ போ என அவளுக்காய் நொடி ஒன்றையும் நகர்த்திய வேளையில் பணக்கார அப்பாவின் தாண்டவம் ஆரம்பம் ஆகியது. அப்பாவா... நானா... எனும் நேரத்தில் அழகுப் பைங்கிளி என் கூண்டை விட்டுப் போனாள். அன்று முதல் அவளை வெறுக்க நினைத்தேன் ஆனால், முடியவில்லை. அவளை அடைய வேண்டுமென்ற அலாதியான ஆசையில் மந்திரத் தந்திரங்களைக் கையாள திட்டமிட்டேன்.

தனி ஆளாய் நின்று அவள் அப்பாவை எதிர்க்கும் துணிச்சல் எனக்கிருந்தாலும் ஆள் பலமும் பண பலமும் ஒரு சேர என்னை ஓரங் கட்டி காட்டுப் பாதை ஒன்றில் தூக்கி எறிந்தது தான் மிச்சம். புலியிடம் பூனை வால் ஆட்ட நினைத்தால் ஆகுமா ? அதான், சூழ்ச்சியில் இறங்க திட்டமிட்டு விட்டேன்.

மந்திரத் தந்திரங்களை கற்க அடிக்கடி கேரளாவிற்கு சென்று வந்தேன். எனக்குள் மாற்றங்கள் பல உணரக் கண்டேன். அனைத்தும் பிடித்திருந்தது. பெண்கள் என்னை அதிகமாய் மற்ற ஆண்களை விட கொஞ்சம் நெருக்காமாய் நெருங்க ஆரம்பித்தனர். அது எதுவென்று நான் வெளிப்படையாய் சொன்னால் என்ன சொல்லா விட்டால் என்ன. உலகமே அதற்குள் தான் கட்டுட்ண்டு கிடக்கிறது. துர்கா என்ற ஒரு சுவடு என்னுள் மறைந்தது. அவளது நினைவுகளும் என்னுள் புதைந்துப் போனது.

பலப் பெண்கள் புடைச் சூழ கிருஷ்ணன் போல் இருக்கும் எனக்கு எதற்கு இனி வேண்டும் துர்கா. கிடைப்பாலே பல துர்கா எனக்கு, இனி உலகமெங்கும். கரும்புத் தின்ன கூலியா ? மடியில் தானாய் வந்து விழும் பெண்களைத் தள்ளி விட்டு போகும் ஆண்களைக் கண்டால் கொஞ்சம் சொல்லுங்கள். அப்படியே மற்றவர் முன்னிலையில் தள்ளி விட்டாலும் பின்னாளில் அனைத்துக் கொள்ளும் பழக்கம் ஆண்களுக்கே உரித்தானது. நான் மட்டும் என்ன விதி விலக்கா ? பெண்கள் அழுதால் தங்குமா என் நெஞ்சம். ஆதரவு என்ற பெயரில் அணைக்கும் கைகளும் தட்டிக் கொடுக்கப்படும் தோள்களும் பின்பு ஒருவரை ஒருவர் கட்டித் தழுவ பயன்பட்டது அறிந்ததே.

இப்படித்தான் நடக்கவேண்டும் என்று நான் திட்டம் தீட்டிய நாட்கள் எல்லாம் கேரளா சென்று முழுமையாகக் கைதேர்ந்த பின்புதான். அதற்கு முன்பு அனுபவித்த ஏக போக வாழ்க்கையின் பெண்கள் கணக்கு அதிகபட்சமே ஏழுதான்.

ஆசாமி ஒன்று என்னுடனே இருக்கும். அதற்கு தேவையானது கிடைத்தால் என் வேலைகள் எளிதில் முடியும். கொடுக்கல் வாங்குவதுப் போலத்தான். அப்பா இல்லாத அம்மா தான் எனக்கு. மிகப்பெரிய வீடொன்று எங்கள் சொந்தக் கிராமத்தில் இருந்தது. அம்மாவுக்கும் எனக்கும் பெரிதாய் அப்படிச் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பாசமில்லை. என் போக்கிலேயே விட்டு விட்டார். காலப் போக்கில் அவரும் மரணித்து விட்டார். சகல வசதிகளுடன் இருக்கும் அந்த வீடு என் அந்தப்புரமானது.

ஆசாமியின் துணைக்கொண்டு இனிக்க இனிக்க பேசி பெண்களைக் கவர்வதில் வல்லவனானேன். அச்சமயம் வந்து மாட்டியவள் தான் தனிஷா. பார்க்க ஒல்லியாய் பலகையைப் போலவே இருப்பாள். ஆளும் கூட கருப்பு தான்.

இருந்தும் அவளைப் பிடித்திருந்தது. 'அதற்காய்' அல்ல. அவளுக்காய். அவளது அன்பு அளவற்றது. என்னைத் திக்கு முக்காட வைத்தது. ருசி ருசியான பல வித உணவுகளைச் சமைத்து பரிமாறினாள். கண்ணின் இமையாய்க் காத்தாள். அவளுடனான வாழ்க்கை அர்த்தமானதாக இருக்க கண்டேன். அவளைக் கட்டிக் கொள்ள விருப்பப்பட்டேன். ஆனால், அது நடக்கக் கூடாது. ஒருக் கால், அது நடந்தால் அவளை நான் இழக்க நேரலாம். இதுதான் எனக்கும் அந்த ஆசாமிக்கும் உள்ள ஒப்பந்தம். நான் மனதார நேசிக்கும் ஒருப் பெண்ணைத் திருமணம் செய்ய நிணைத்தால் அவளை எனக்கு முன் தொடும் உரிமையை நான் சத்தியம் என்ற பெயரில் வாக்காய் அந்த ஆசாமிக்கு தந்திருந்தேன். அதைத் தவறினால் அவள் உயிருக்கு ஆபத்து. அதையும் மீறி நான் ஆசாமியின் கண்களில் மண்ணைத் தூவினால் அப்போதும் அவள் உயிர் அவள் உடல் விட்டு பிரியும் இதுவே எங்களின் ஒப்பந்தம்.

துர்காவைப் பிரிந்த வழியும் வேதனையும் ஒரு சேர அவள் மீதுக் கொண்ட காதல் அத்தனையும் வெறியாய் மாறி நானே என்னை மறந்த வேளையில் அவளை எப்படியாவது அடைந்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் கற்றுக் கொண்ட மாயமும் ஜாலமும் என்னை அடியோடு மாற்றி அதற்கு அடிமையாகியத்தில் முட்டாள் தனமாக ஆசாமி ஒன்றைக் கூடவே வைத்துக் கொண்டு நான் செய்த பலக் கிழ்த்தரமான செயல்களின் பாவமே என்னை இப்படி இந்த சூழ்நிலைக்கு கொண்டு வந்துள்ளது.

ஆசாமி நான் சாகும் வரை என்னுடனே இருப்பான். நான் அழிந்தால் அவன் அழிவான். தனிஷாவைக் கட்டிக் கொள்வதா அல்லது கொல்வதா... இல்லை நானே செத்து மடிவதா. அன்று மற்ற பெண்களின் கதறலில் உல்லாசம் அனுபவித்த நான் இன்று என் மனகுமறிலில் உடைந்துப் போயிருக்கிறேன்.

முடிவெடுத்து விட்டேன். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.நன்றாய்ப் புரிந்துக் கொண்டேன். தனிஷா..... நான் போகிறேன் உன் மீதுக் கொண்ட காதல் மிகவும் புனிதமானது. துர்கா மீது இருந்ததை விட. அதனால்த்தான் நான் இன்று மாறியிருக்கின்றேன். என்னை மன்னித்து விடு காதலியே. உன்னோடு வாழ நான் தகுதியிழந்து நிற்கின்றேன். என்னை புது மனிதனாய் உருமாற்றியே என் தெய்வமே உன் அன்பில் நான் வீழ்ந்தேன்.

கடிதம் ஒன்று காற்றில் பறந்து ஜன்னலருகில் அடித்துக் கொண்டு பறக்காமல் ஒட்டிக் கொண்டு இருக்கிறது. அச்சத்தம் என் செவிகளில் மெல்லமாய் கேட்கிறது. என் தனிஷா என் பெயரை சொல்லி அழைத்தவாறே என்னைத் தேடிக் கொண்டு வருகிறாள் வீட்டுக்குள்ளே. ஒளிந்துக் கொண்டு விளையாடுகிறேன் என எண்ணி விட்டாளோ என்னவோ. நான் வாயில் நுரையோடு தரையில் சாய்ந்திருக்கிறேன். கதறியவாறே என் தலையைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு அழுகிறாள் பேதை. பாவம் நானே கதி என்றிருந்தவள் ஆயிற்றே. என் உயிர் கொஞ்சம் கொஞ்சமாய் பிரிகிறது. என் கையிலிருந்த மாத்திரைப் போத்தல் மெல்லமாய் என் விரல்களிருந்து தரையில் உருண்டோடுகிறது.

எழுதியவர் : தீப்சந்தினி (21-Jan-14, 12:50 pm)
பார்வை : 347

மேலே