டாக்டர்
ஆஸ்பத்திரில் மரண படுக்கையில் கிடக்கிறான் மகன். தந்தைக்கோ பரிதவிப்பு.
அவசர ஆபரேஷன் உடனே செய்தாக வேண்டும். ஸ்பெஷலிஸ்ட் டாக்டரோ இன்னும் வர வில்லை. கேட்டால் 'லீவில் இருக்கிறார். போன் செய்து வர சொல்லியிருக்கிறோம். வந்து விடுவார்' என்கிறார்கள்.
இதோ அவசர அவசரமாக வந்து விட்டார் டாக்டர். வேகமாக சென்று ஆபரேஷனுக்கான உடை அணிந்து வந்தவரை மடக்குகிறார் தந்தை.
'ஒரு டாக்டர் இப்படித்தான் பொறுப்பில்லாமல் லீவு போடுவதா..? நோயாளிகளின் உயிர் என்றால் கிள்ளு கீரையா உங்களுக்கு..?'
'மன்னிக்க வேண்டும் சார். கோப படாமல் பேசுங்கள். டாக்டர்களுக்கு மட்டும் லீவ் தேவை படாதா என்ன..? நான்தான் வந்து விட்டேனே..?'
'கோப படாமல் இருப்பதா..? கொஞ்சம் பொறுப்போடு பேசுங்கள். உங்கள் மகன் மரண படுக்கையில் இருந்தால் இப்படி பேசுவீர்களா..? உயிர்களை காப்பாற்ற வேண்டிய முக்கிய பொறுப்பில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை மறக்க வேண்டாம்'.'
'மறுபடியும் மன்னியுங்கள் சார். ஒரு உயிரை காப்பாற்றுவது ஆண்டவன் கையிலேயே உள்ளது.ஆன மட்டில் வைத்தியம் செய்ய வேண்டியது மட்டுமே எங்கள் கடமை. அதற்கு தடை போடாதீர்கள். ப்ளீஸ்...! வழி விடுங்கள்.'
வேகமாக ஆப்பரேஷன் தியேட்டருக்குள் புகுந்தார் டாக்டர்.
பல நேர ஆபரேஷனுக்கு பின் உயிர் காப்பாற்ற பட்டது.
வெளியே காத்து கொண்டிருந்த தந்தையிடம், 'ஆப்பரேஷன் வெற்றி. கடவுள் உங்கள் மகனை காப்பாற்றி விட்டார். விவரங்கள் ஏதும் தேவை எனில் நர்சிடம் கேட்டு கொள்ளுங்கள்' என கூறி விட்டு பஞ்சாய் பறந்தார் டாக்டர்.
மகன் பிழைத்த மகிழ்ச்சியோடு கோபமும் கலந்தது தந்தையின் மனதில்.
'என்ன மனுஷன் இவன்..? மிருக ஜென்மம்.'
ஆத்திரத்தில் , நர்சிடம் கேட்டே விட்டார்..
' இந்த டாக்டர் ஏன் இப்படி இருக்கிறார்..? ஆபரேஷனுக்கு பிறகு நோயாளியின் தந்தை என்னென்ன கேட்பார் என்பது கூடவா தெரியாது..?'
நர்ஸ் அவரை ஆழமாக ஊன்றி பார்த்தாள்.
'மன்னிக்க வேண்டும் சார்....நேற்று நடந்த அவசர ஆபரேஷனில் அவரது ஒரே மகன் இறந்து விட்டான். இந்த ஆபரேஷனுக்காக நாங்கள் அழைத்த போது, டாக்டர் தன் மகனது இறுதி காரியங்களை செய்து கொண்டிருந்தார். அதை நிறுத்தி வைத்து விட்டே ஆபரேஷன் செய்ய வந்தார். நின்று போன காரியங்களை முடிக்க வேண்டிய கட்டாயத்தினாலேயே அவருக்கு உங்களிடம் பேச நேரம் இல்லாமல் போய் விட்டது'.