எது பாவம் எது புண்ணியம்

சிறுகதை - எது பாவம்? எது புண்ணியம்?

ஒரு துறவியும், அவருடைய சீடனும், திருத்தலம் ஒன்றிற்குப் பயணமாகச் சென்று கொண்டிருந்தார்கள்

இரு நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் அது. வோல்வா பேருந்துகளும், சதாப்தி ரயிலும் இல்லாத காலம். நடைப் பயணம்தான்

சுட்டெரிக்கும் வெய்யிலில் நடந்த களைப்பு. உடன் கடுமையான பசி. பெரியவர் பொறுத்துக்கொண்டார். சீடனால் முடியவில்லை

"சாமி, அதோ ஒரு கிராமம் தெரிகிறது. சிரமபரிகாரம் செய்து விட்டுப் போகலாமே" என்றான்

துறவியாரும் சரி என்று செயலில் இறங்கினார். வரப்பின் மேல் நடந்து, கிராமத்தை அடைந்தனர்.

கிராமத்தின் நுழை வாயிலிலேயே ஒரு பெரிய பண்ணை வீடு இருந்து. பின்புறம் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலபுலன்களுடன் கூடிய மிகப் பெரிய வீடு.

துறவி கதவைத் தட்டினார். திறக்கப் படவில்லை. மீண்டும், மீண்டும் நான்கைந்து முறை தட்டினார். கால்மணி நேரம் கடந்திருக்கலாம். கதவைத்
திறந்து கொண்டு பீமசேனன் தோற்றத்துடன் ஒரு மனிதன் வெளிப்பட்டான்.

அவன்தான் அந்தப் பெரும் பண்ணைக்கும், பண்ணை வீட்டிற்கும் சொந்தக்காரன். பாதித் தூக்கம் அவன் கண்களில் மிச்சம் இருந்தது

எரிச்சலோடு கேட்டான்,"என்ன வேண்டும்?"

துறவி, பொறுமையாகத் தாங்கள் யார் என்பதையும், எங்கு பயணிக்கின்றோம் என்பதையும் கூறிவிட்டு, தங்களுக்கு உணவு வழங்கும்படி வேண்டினார்.

அடிப்படைப் பண்பின்றி அவன் கோபமாக, "இதற்குத்தான் தட்டினீர்களா, சனியன் பிடித்தவர்களே! என் தூக்கத்தை வேறு கெடுத்துவிட்டீர்களே!
போய் வேறு இடத்தில் கேளுங்கள்" என்று சொல்லி, படார் என்று கதவை அறைந்து சாத்திவிட்டுத் திரும்பவும் தன் வீட்டிற்குள் சென்று விட்டான்.

அவன் நடத்தையைப் பார்த்துச் சீடனுக்கு அசாத்திய கோபம் வந்தது. ஆனால் குருபக்தியினால் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.

ஆனால் துறவி எதுவுமே நடக்காதது போல சாந்தமாக நின்றவர், தன் கைகளை உயர்த்தி, "ஆண்டவனே இவனுக்கு இன்னும் நான்கு மடங்கு
செல்வத்தைக் கொடுப்பாயாக!" என்று பிராத்தனை செய்தார்.

சீடன் வியப்பின் எல்லைக்கே போய்விட்டான். குருவின் தவ வலிமை அவனுக்குத் தெரியும். அவர் பிராத்தனை செய்தால் அது நடந்துவிடும். ஆனாலும் இவர் ஏன் இந்தக் கிராகதகனின் நல்வாழ்விற்குப் பிரார்த்திக்கின்றார் என்பது அவனுக்குப் பிடிபடவில்லை.பேசாமல் நின்றான்.

இறங்கி நடந்த துறவி, கிராமத்தை நோக்கி நடந்தார். சீடனும் தொடர்ந்தான். ஒரு குடிசை வீடு அவர்கள் கண்ணில் பட்டது. முன் பக்கம் திண்ணை.
அருகில் உள்ள கொட்டகையில் நான்கு பசுமாடுகள் கட்டப்பட்டிருந்தன

துறவி,"தாயே!" என்று ஓங்கிக் குரல் கொடுத்தார்.

அடுத்த நொடியே, ஒரு மூதாட்டி கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள்.

"வாங்க சாமிகளா? என்ன சாமிகளா வேணும்?" என்று அன்புடன் கேட்டாள்

துறவி சொன்னார்

அவள் பதறி விட்டாள்.
அவள் வீட்டில் சற்று முன்தான் சாப்பிட்டுவிட்டு, பாத்திரங்களைக் கழுவிப் போட்டிருந்தார்கள்

"சாமி நல்ல மோர் இருக்கிறது. ஆளுக்கு ஒரு செம்பு தரட்டுமா?" என்று தயக்கத்துடன் வினவினாள்.

கொண்டுவரச் சொல்லிவிட்டுத் துறவி திண்ணையில் அமர்ந்தார். சீடனையும் அமரச் செய்தார்.

இரண்டு பெரிய செம்புகளில் அமிர்தம் போன்ற சுவையுடன் மோர்
வந்தது. வாங்கி அருந்தினார்கள் பசி அடங்கிய பிறகுதான் இருவரும்
ஒருநிலைக்கு வந்தார்கள்.

துறவி அந்த மூதாட்டியிடம் பேச்சுக் கொடுத்தார்

அவள் தன் கதையைச் சொன்னாள். அவள் வீட்டில் விதைவைக் கோலத்துடன் ஒரு மகள். பதினெட்டு வயதில் ஒரு பேத்தி. ஆக மூன்று பேர்கள்.

நான்கு பசு மாடுகளை வைத்து ஜீவனம். பால், தயிர், மோர் விற்று வயிறு வளர்ப்பதை நடிகை மனோரமா பாணியில் ஏற்ற இறக்கத்துடன் சொன்னாள்.

துறவி விடை பெற்றுக் கொண்டு புறப்படும்போது, இப்படிச் சொல்லி ஆசீர்வதித்தார்: ."உன் பேத்திக்கு சீக்கிரம் திருமணம் ஆகும். நல்ல மணாளன்
கிடைப்பான். உன் மாடுகளில் இரண்டு இறந்துவிடும் ஆனாலும் நீ நன்றாக இருப்பாய்!"

சீடன் நொந்து போய்விட்டான்

அந்த அயோக்கியன் வீட்டில் உன் செல்வம் நான்கு மடங்கு பெருகட்டும் என்று சொன்னவர். ஏழையானாலும், பசிக்கு அற்புதமான மோர் கொடுத்த
இந்த மூதாட்டி வீட்டில் இரண்டு பசுமாடு சாகட்டும் என்கிறாரே, எதற்காக இப்படி சொல்கிறார்? என்று புரியாமல், குழப்பத்துடன் தன் குருவைத்
தொடர்ந்தான்.

அவன் மன ஓட்டத்தை ஊகம் செய்த துறவி அவராகவே முன்வந்து விளக்கம் சொல்லி அவன் குழப்பத்தைத் தீர்த்துவைத்தார்.

"பண்ணைக்காரனிடம் அபரிதமான செல்வம் இருந்தும் பசித்தவர்க்கு உணவளிக்க மறுக்கும் பாவியாக இருக்கின்றான். அவன் செல்வம் நான்கு
மடங்கு பெருகினால், அவன் பாவமும் நான்கு மடங்கு பெருகும்.அதனால்தான் அவனை அப்படி ஆசீர்வதித்தேன். இந்தப் பெண்மணி தன் ஏழ்மையிலும் தர்மம் செய்யும் தயாநிதியாக இருக்கிறாள். நான்கு மாடுகளை மட்டுமே வைத்து இவள் செய்யும் தர்மம் (புண்ணியம்) இரண்டு மாடுகளை மட்டும் வைத்துச் செய்யும் போது இரண்டு மடங்காக மாறும். அதனால்தான் இங்கே அப்படி ஆசீர்வதித்தேன்

எழுதியவர் : முரளிதரன் (4-Feb-14, 12:58 pm)
சேர்த்தது : முரளிதரன்
பார்வை : 193

மேலே