இமை

இமை...

சிறு துரும்பு நுழைவை
படபடவென அடித்து மூடி
விழி காக்கும் இமைகள்
உன் மொத்த உருவம்
உள்நுழைந்தும் இமைக்க
மறந்ததென்ன மாயமோ..!!

குழல் கானமன்ன நின்
குரல் மொழியோ
நுரை கடலன்ன எழில்
கரை காணா உடலழகோ

மயக்கும்விழி அசைவோ
மருண்டு நோக்கும் பார்வையோ
இழுத்ததென் மனதை
பழுத்ததென் காதல் உணர்வு

குலம் கோத்திரம் அறியேன்
மதம் சாதி விருப்பங்கள் அறியேன்
பேசும் மொழி அறியேன்
உறவு அறிமுகமும் அறியேன்

பேசாது பேசும் விழியசைவன்றி
வேறொன்றும் அறியா தருணம்
நொடிப்பொழுதில் உள் நுழைந்து
இதயவீட்டில் குடியேறியவனை

தூசியென கண்கள் கசக்கிடவோ
பழுதென அறிவு துரத்திடவோ
இடம்தான் கொடுத்திட மனமின்மையால்...
இதயவீணையுனை மீட்டும் விரல்களாம்
கற்பனை எண்ணத்திற்கு வலுவூட்டியதோ
இமைக்க மறந்த இமைகள்...!!

... நாகினி

எழுதியவர் : நாகினி (10-Feb-14, 9:45 pm)
சேர்த்தது : Nagini Karuppasamy
Tanglish : imai
பார்வை : 107

மேலே