மூன்றாம் உலகப் போர் - அமிர்தா

நாகரீகம் நிலைநாட்டப்பட்டிருக்கும்
இந்திய வல்லரசாயிருக்கும்
உலகம் கணினியின் கட்டுப்பாட்டில் இருக்கும்
அணுகுண்டுகளின் தலைமையில்
உலகம் இயங்கி கொண்டிருக்கும்

நிலவுக்கும் பாலம் இருக்கும்
வான்வெளியில் வீடுகள் மிதக்கும்

ஒரு கார் வைத்திருப்பவன் ஏழையாவான்
தங்கங்கள் தகரத்துக்கு ஒப்பாகும்
பெற்றோல் லிட்டர் ரூ.10 க்கு விற்கப்படும்

24 மணி நேர மின்சாரம் கிடைக்கபெறும்
நியுக்கிலியர் அணு சுவாசம்
பழகி போயிருக்கும்

கதிரியக்க கோட்பாடு
மனிதனுள்ளும் நடந்தேறும்
நோய்கள் ஆட்சி செய்யும்

பிறப்பு அதிசயமாகும்
இறப்பு அதிகரிக்கும்
ஆயுசு குறையும்

ஆறுகள் அனாதியாயிருக்கும்
கடல் நீர் கானலாயிருக்கும்
பறவைகள் வலசை போவது நின்றிருக்கும்
சதுப்பு நிலங்கள் சருகாயிருக்கும்
பூமி பந்து புழுதி ஆயிருக்கும்

குடிக்க நீர் இராது
உண்ண உணவிராது

விளை நிலங்கள் வீடுகளாயிருக்கும்
தண்ணீருக்காக ஆழ்குழாய் தோண்டியே
அடுத்த தேசம் வந்திருக்கும்

காலை 200 கலோரி
மதியம் 400 கலோரி -
பெயர் பலகையோடு
மருந்தகம் மாத்திரைகள் விற்கும்

தண்ணீர் தேடுவதர்க்கே
ஒவ்வொரு நாடும் - ஆயிரங்களில்
செயற்கைக்கோள் விட்டிருக்கும்
பனிமலைகள் ஏலம் விடப்படும்
எவரெஸ்ட் உலகிலேயே
சிறிய மலையென அறிவிக்கப்படும்
நாடுகளுக்கிடையே தண்ணீர் ஒப்பந்தம் போடப்படும்,

பட்ஜெட் கூட்டத்தொடரில்
தண்ணீர் முதலிடம் பிடிக்கும்
தண்ணீர் பேர ஊழல் நடக்கும்

வெளிநாட்டிலிருந்து தண்ணீர்
கடத்தியவன் கைது,
நல்ல தண்ணீர் தருவதாக
பணம் வாங்கி ஏமாற்றிய
பெண்மணிக்கு ஆயுள் தண்டனை,
என தினம் நாளேடுகளில்
செய்திகள் பரவும்

தண்ணீர் திருடினால் தூக்கு தண்டனை
சட்டம் திருத்தப்படும்

வரதட்சணையாக
தண்ணீர் கேட்கப்படும்
தேர்தலில் ஓட்டுகளுக்கு
தண்ணீர் லஞ்சமாக கொடுக்கப்படும்
ஒட்டகங்கள் கொல்லப்படும்
ஓணான்கள் உயிரிழக்கக் கூடும்

வன விலங்குகள்
நகரத்தில் நங்கூரம் இடும்
மனிதர்கள் வேறு நட்சத்திர கோள்களைத் தேடி
பயணிக்க கூடும்

மூன்றாம் உலகப் போர்
உருவாகும்

இது...
மனிதனுக்கும் மனிதனுக்குமான
போர் அல்ல

மனிதனுக்கும் இயற்கைக்கும்
உண்டான போர்
இயற்கை வெல்லும்

மனிதன்
புழுக்களாய் புழுதியாய்
மக்கி போவார்கள்

புதியதோர் உலகம் பிறக்கும்
75% தண்ணீருடன்

எழுதியவர் : அமிர்தா (13-Feb-14, 1:22 pm)
பார்வை : 321

மேலே