தோண்டல் பொழுதுகளில்

புதிததாய் எரிந்துமுடித்த
ஏதோவொரு வரவின்
புகைக் கோடெழுப்பி
அடையாளப்படுத்திக் கொள்கிறது....
அன்றைய அரண்மனை
வாசலும்... இன்றைய
இடிந்தசுவர் மூலையுமான
மாநகராட்சி சேகரங்கள்.....!!!
இங்கு
எதிர்காலம் உணர்ந்து
எறியப்படும்
எல்லாம்... எதுவும் உணராமல்
அள்ளப்படும்...! இன்றையநாள்
தேவைகளுக்காய்...
சீருடைகளாகவும்.... புது
சிசுக்களாகவும்...!!!
காதல் தவிர்க்கப்படும்
இந்த
காகிதப் பூங்காக்களில்
கழிதல்களே நிறைந்து
கிடக்கின்றன...
உரித்த ஆணுறைகளாகவும்..
உதட்டுச் சாய
காலிக்குப்பிகளாகவும்.......!!!
சுயங்களாய் பற்றியெரிந்து
சுத்தப் படுத்திக்கொள்கிறது
பாவக் கழிதல்கள்
சேர்ந்து பெருகும் போது..!!
சிறுகுன்றாய் பெருகிக்
கிடப்பது.... ஏதோவொரு
பெரியவாளின்
தடாகமாய் இருந்திருக்கக்
கூடும்..!! அன்றைய
நாட்களில்....!!
உன்மைதானென
சொல்கிறது...!! ஊனமாகிப்போன
மூன்றுகால்
மர நாற்காலியும்....
உள்ளில் கிடக்கும்
மூன்றாம் தலைமுறை
உரிமைக்காரத் தாத்தாவும்...!!