வானொலியே

காற்றலையில் தவழ்ந்துவந்து
காதோரம் ரீங்காரமிடும்
கானமழை தினம்பொழியும்
காந்தமாய் கவர்ந்திழுக்கும் ....!!

கொடுந்தனிமை விரட்டிவிடும்
கொதித்தமனம் இளகிவிடும்
கொந்தளிப்பும் அடங்கச்செய்யும்
கொஞ்சிநாளும் இசைமீட்டும் ...!!

இரவின்மடியில் தாலாட்டும்
இதமாக கதைபேசும்
இதயம்கவர்ந்து சீராட்டும்
இனியகீத விருந்தளிக்கும் ....!!

சோர்ந்தபோது உற்சாகமூட்டும்
துவண்டுவிட தாய்மடியாகும்
சுமக்கவொண்ணா துயர்வரினும்
சுமையைக்கூட சுகமாக்கும் ....!!

வானொலிபோல் உற்றதோழி
வாழ்வினிலே கண்டதில்லை
வாட்டம்போக்கும் ஏக்கம்தீர்க்கும்
வாஞ்சையுடன் மனம்வருடும் .....!!

முத்தமிழும் வளர்த்திடுமே
முக்கனியாய் இனித்திடுமே
முப்பொழுதும் இசைமுழங்கும்
முடிவில்லா வானொலியே ....!!

தொலைக்காட்சி வருமுன்னே
தொனித்ததிந்த வானொலியே
தொன்றுதொட்டு இதன்பணியும்
தொடரட்டும் பல்லாண்டு பல்லாண்டு !!

(இன்று உலக வானொலி தினம் )

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (13-Feb-14, 8:34 pm)
பார்வை : 145

மேலே