கன்னிச்சிறை0தாரகை0

இவள்
இளமை முதுமை
இடையில் மாட்டி
இருட்டில் போராடும்
போராளி!

இவளின்
உத்தரவின்றி பிறக்கும்
உணர்ச்சிகளை
உள்ளடக்கி வாடும்
நோயாளி!

பெண்பார்க்கும் தினமெல்லாம்
கனவுப்பூ பறிக்கச்சென்று
கண்ணீர் பூ வாங்கிவரும்
ஏமாளி!

பண வெறியில்
மனம் சிதைக்கும் சில
ஆண் இனத்தின்
பார்வைக்கு இவளொரு
கோமாளி!

இவளின்
நல்வாழ்வு என்றென்று
நாள்குறித்தே
நல்வாழ்வு பெற்ற
ஆருடர்கள்
ஏராளம்!

இதுவரை
வந்தவருக்கும்
பார்த்தவருக்கும்
சிறிதும் இல்லை
மன தாராளம்!

வேறு எவரும்
எதுவுமில்லை
இவளின் பொறுப்புணர்வு
மட்டும்தானே
கன்னிச்சிறைக்கு
காரணம்!

உயிரை கொடுத்தவளுக்கும்
அறிவைக் கொடுத்தவனுக்கும்
சம்பளமாய் தன் சம்பளத்தோடு
தன் இளமையையும் வட்டியாய்
அடைக்கின்றாள்

இவள் ஒருவளின்
திருமணம்
தம்பி தங்கைகளின்
எதிர்காலத்தை
கேள்வி குறியாக்கிவிடும் என்பதை
பெற்றோர்கள் நன்றாக
உணர்ந்துவிட்டனராம்
இவளை விடவா?

காதல் பிடிக்காது
கல்யாணம் வேண்டாம்
என்ற இவளின் பொய்கள் எல்லாம்
நிஜமாக சிலர் வேண்டிக்கொள்வது
இவள் அறியாமலா?

இவளுக்கு வயதாவதை
பெற்றோர்கள் மறந்தாலும்
கண்ணாடி மறைப்பதில்லை

பிறந்தநாள் வரும்பொழுது
அஞ்சி அழுது
துக்கம் அனுஷ்டிக்கும்
பிறவிகள் இவர்கள்
மட்டும்தான்

முதிர்கன்னி என்ற
முத்திரையை முகத்தில்
குத்தி சித்திரவதை
செய்வது போதாதென்று
முடவனுக்கும் மூடனுக்கும்
வாழ்க்கைப்பட நிர்பந்திக்கும் பொழுது

இவளுக்கு
விவரிக்கமுடியாத வலி
நெஞ்சத்தில் தோன்றி
நரம்புகளின் வழி
மூளை சென்று
மூர்ச்சையாகும்
உணர்வு தோன்றுகிறது.

எழுதியவர் : தாரகை (15-Feb-14, 12:45 pm)
பார்வை : 245

மேலே