சொத்துக்கு சொத்தாக
சொத்துக்கு சொத்தாக...........................
சொத்துக்கு சொத்தாக –தமிழ்
சொந்தத்தின் வித்தாக.
பத்திரமே முத்திரையே—தமிழ்
பாசறையே கண்வளராய்.
நீரோடா ஆறை இங்கு--தமிழ்
யார் பாடக் கூடுமடா?
சீராளும் செந்தமிழா!—தமிழ்
ஊர் உன்னைப் பாடுமடா!
பாரதியும் தமிழ் வளர்த்தான்—தமிழ்
பசியிலே தான் மகிழ்ந்தான்.
ஊரவனைத் தேடவில்லை—தமிழ்
உலகம் இன்று பாடுதடா!
குறள் பாடிய வள்ளுவனோ—தமிழ்
கொடுக்கும் என்றும் பாடவில்லை.
ஊருலகம் அவன் புகழை—தமிழ்
ஓத நாளும் மறக்கவில்லை.`
ஔவை அந்தக் கிழவியவள்—தமிழ்
அழகி வாழுங் கன்னியவள்.
செவ்வைவழி காட்டித் தானே—தமிழ் .
செழிக்கத் தான் சுழன்றாள்.
இலக்கியங்கள் செய்தோரை –தமிழ்
ஏற்றவில்லை உப்பரிகை.
விளங்க வாழ்ந்த வித்தகரை—தமிழ்
வெஞ்சாமரம் ஆற்றுதடா.
என்னதரும் என்று எண்ணி—தமிழ்
எழுதுவது வியாபாரம்.
பின்னவரும் நலம் இயற்றி—தமிழ்
பிறவி நீயும் வாழ்வாயடா!
சொத்துக்கு சொத்தாக –தமிழ்
சொந்தத்தின் வித்தாக.
பத்திரமே முத்திரையே—தமிழ்
பாசறையே கண்வளராய்.
கொ.பெ.பி.அய்யா.

