ஆற்றும் மருந்து பரிசு

ஆற்றும் மருந்து பரிசு ..

இளமையில்
காதல் வலையில் சிக்காத மானாய்
துள்ளித் திரிந்த வேளை ...

திருமண வயது வந்ததென்று
உனை பெற்றோருடன்
இழுத்து வந்தது காலம்
பரிசம் போட ...

மணநாள் நெருங்க இருந்த
மூன்று மாதங்களில் மூவாயிரம் கோடி வருட
பந்தமாக இணைந்த இருவர்மனமும்
காதல்மொழி பேசி திளைத்திருக்க..

சாத்திரம் பார்த்து நாள் குறித்து
சத்திரம் அமைத்து
பத்திரிக்கை அச்சடித்து
பந்தங்களுக்கு அழைப்பு விடுத்து
இன்னும் ஒரே வாரத்தில் நானுன்
மனையாளாகி மாமாங்கமாய் இணைபிரியாமல்
இணைந்திருக்கலாமெனும் ஆவலில்
காதல் சிறகு விரித்து மகிழ்ச்சிவானில்
பறந்த நேரம்...

வேறொரு பெண்வீட்டார் வாக்களித்த
அதிக வரதட்சணை பெரிதென்று
ஏற்பாடு செய்த நம் மணநாளில்
மாற்று மணப்பெண்ணுக்கு மாலையிடவே
மனமாற்றம் கொண்டு ஏமாற்றம் தந்தாய்...

பெற்றோர் காட்டும் பெண்ணையே மணமுடிக்கும்
நல்லபிள்ளையாகி வேதனை கண்ணீரை
காதல்பரிசாக்கினாய்
என்னைவிட நல்ல இடம் பார்த்து
மணவாழ்க்கை அமைத்துக்கொள்ளென
ஆறுதல் பரிசும் தந்து சென்றாய்...

கலங்கிய மனதின் ஆறாத
காதல் வடுக்களோடு
கடத்திய காதலில் விழுந்த மனம்
கசங்காமல் ஆற்றும் மருந்து பரிசாய்
காலம் கடந்து கொடுத்தான்
காலதேவன் சகமனிதர் தரம் தாழ்ந்த
கழிவென நோக்கும் இரண்டாம்தார மணவாழ்க்கை...!!

.... நாகினி

எழுதியவர் : நாகினி (18-Feb-14, 3:52 pm)
பார்வை : 363

மேலே