விதை தேடும் நிலம் 0 தாரகை 0

முதல் மழையில் தாகம் தணிந்த நிலம்
முதல் முறை பருவக்கோளாரில் செய்த தவறு
முதல் சந்திப்பில் வெளிக்கொட்டிய வியர்வைத்துளிகள்.

இறந்த காலத்தின் மீதெழும் திடுக்கிடும் கனவு
பிரளயத்தின் பெருவெடிப்பொத்த இழப்பு
இல்லையென்றாகியும் எதிர்பார்த்துக் காத்திருத்தல்

விழாமேடையில் துதிபாடல்
திருமண மண்டப உரையாடல்
தனிமை மனதின் எண்ணக்குவியல்.

பசியால் அழுது உணவைத் துப்பும் மழலை
விழுந்த குழந்தையை பாசத்தால் அடிக்கும் தாய்
அடங்காமல் பிரவாகமெடுத்து வழியும் காதல்.

இடுகாட்டின் உருகித் தீர்ந்த மெழுகு
அங்காடித்தெருவின் நள்ளிரவுத் தூக்கம்
அழுது தீர்த்த உள்ளத்தின் வெறுமை.

மனைவியின் மரணத்தை மறக்க ஒரு தாசி வீடு
கணவனின் சந்தேகத்தால் பூத்த புதுக்காதல்
உன்னால் ஏற்பட்ட புண்ணிற்கு மருந்தாய் இக்கவிதை.

எழுதியவர் : தாரகை (24-Feb-14, 10:58 am)
பார்வை : 363

மேலே