காதலமைப்புச் சட்டம் 143 -ன் கீழ்
என் தெருவுக்கு வந்து சென்றாய்
இருவேறு கருத்தைச் சொல்கிறார்கள்
தென்றல் அடித்ததாகவும்
புயல் தவழ்ந்ததாகவும்
---
எல்லோருக்கும் பிரச்சினை
போர்க்கொடி தூக்கினார்கள்
உனக்கொரு பிரச்சினை
போரே
கொடிதூக்கிக்கொண்டு வந்துவிட்டது
---
நாணமே
நாணப்பட்டுக் கொண்டது
நீ
நாணப்படும் போது
---
கண்கள் பேச
கண்கள் கேட்கின்றன
காதலில்...
---
மனிதனுக்குப் போட்டியாய்
கடவுளே எழுப்பிய
உலக அதிசயம் நீ
யார்கண்ணும் பட்டுவிடக்கூடாதென்று
பிரம்மனே வைத்த
திருஷ்டிப் பொட்டு
உன் கன்னத்து மச்சம்
---
நீ பாடத்தொடங்கினாய்
அவையோர் புரிந்துகொண்டனர்
இதற்குமுன் எல்லாரும்
மென்மையான குரலில்
கத்தியிருக்கிறார்கள் என்று...
---
நீ
கோபத்தில் உதிர்க்கும்
ஒவ்வொரு சொல்லும்
ஆயுத சொல்லாகிவிடுகிறது
நீ 'ம்' கொட்டும் போது
வெளிப்படும் மெய்யெழுத்தும்
உயிரெழுத்தாகி விடுகிறது...
---
உன் பெயருக்குப் பின்னால்
என் பெயரை இட்டுவை
உன் அழகான பெயருக்குத்
திருஷ்டி பட்டுவிடப் போகிறது!