எல்லாம் காதல் மயம்

கைகள் சிவக்கவேண்டி
மருதாணி பூசிக்கொள்ளுதல்போல்
முகம் சிவக்க
வெட்கத்தைப் பூசிக்கொண்டவளே!

--- --- ---

நல்லவேளையாக அன்று
ஆதாம் ஏவாளுக்கு
அன்னை தந்தை இருந்திருக்கவில்லை
இருந்திருந்தால்
பிறந்தவுடன்
கள்ளிப்பாலுக்கு இரையாகும்
பெண்சிசுவைப்போல
காதல் கொல்லப்பட்டிருக்கும்

--- --- ---

நீ கண்களால் கொலுத்திப்போட்ட
காதலின் ஒளியில்தான்
வாழ்வைக் கடந்துகொண்டிருக்கிறேன்

--- --- ---

அடித்துத் திருந்துதற்கு
காதல் ஒன்றும்
விடைத்தாள் அல்லவே

--- --- ---

மண்ணை வளப்படுத்தும்
மண்புழுவைப்போல
என்னை வளப்படுத்திக் கொண்டிருக்கின்றன
உன் நினைவுகள்

--- --- ---

பௌர்ணமியைக் கண்டாலே
கடல் பொங்கும்
உன்னை நினைக்கையிலேயே
போங்கிவிடுகின்றன விழிகள்

--- --- ---

உன்னையும் என்னையும்
உருட்டி விளையாடியது காதல்
பொறுக்காத காலம்
போட்டுடைத்து விட்டது

--- --- ---

நீயும் நானும் வினாக்குறிகளானபோது
விடையான காதலே இன்று
வினாக்குறியாகிப் போனது
விடையாகவேண்டிய நாம்
முற்றுப் புள்ளியாய்

--- --- ---

அவன் கொடுத்த தைரியத்தில்தானே
எடுத்தெறிந்து பேசுகிறாய்
என்கிறாள் அன்னை
காதல் கொடுத்த தைரியம் என்பதை
யார்சொல்லி புரியவைப்பது

--- --- ---
கடிகாரமுள்
நிகழ்காலத்தை நோக்கி
நகர்வதே போல
உன்னை நோக்கியே நகர்கின்றன
என் நினைவுகள்
--- --- ---

இன்னும் துரத்திக் கொண்டுதான்
இருக்கின்றன
உன் நினைவும்
தலை விதியும்

--- --- ---

நம் மனவுறுதியைச் சோதிக்க
இவர்கள்
பிள்ளைக் கறி கேட்டிருந்தால்கூட
பெற்றுக் கொடுத்திருக்கலாம்
காதற்கறியையல்லவா கேட்கிறார்கள்

--- --- ---

அவளை ஏன் இன்னும்
காதலிக்காமல் இருக்கிறாய் என்றென்னை
தட்டிக்கேட்ட காதல்
அவர்களை ஏன்
பிரிக்கத் துடிக்கிறீர்கள்
என்று இவர்களை
விளையாட்டுக்கூட வினவவில்லையே

--- --- ---
காதலின் வருகையும்
நாரதர் வருகையைப் போலத்தான்
கலகத்திலேயே முடிகிறது

--- --- ---

காதல் என்ன
கண்ணின் மையா
கழுவி நீக்குதற்கு
கன்னத்து மச்சம்
சுடுகாடு போகும்வரை
சுமந்துதான் ஆகவேண்டும்

--- --- ---

அன்று என்னென்னவோ பேசினோம்
எதுவுமே பேசாததுபோல்
ஒரு
ஏமாற்றமே எஞ்சியது
இன்று எதுவுமே பேசவில்லை
ஆனால்
நிறைய பேசிய நிம்மதி

--- --- ---

நிதானமாய்தான் இருந்தேன்
உன்னை காணும்வரை

இப்பொழுதோ
என்னை தளும்பவிட்டுவிட்டு
நிதானமாய் நடந்துசெல்கிறது காதல்
ஒரு நிறைகுடத்தைப் போல

--- --- ---

‘எல்லா கிளவியும் பொருள்குறித் தனவே’
நீ என்னோடு இருந்தவரையில்

இன்று என்னிடம்
வெறும் சொற்கள் மட்டுமே
உள்ளன

--- --- ---
உன்னை மறந்துவிடச் சொல்லி
வற்புறுத்தி வற்புறுத்தியே
நினைவுபடுத்திவிடுகிறார்கள்
உன்னை

--- --- ---
அவர்கள் நம்மை பிரிப்பதாய்
எண்ணிக்கொண்டு
அதிகமான நெருக்கத்திற்கு
அடிகோலி விட்டார்கள்

--- --- ---

எழுதியவர் : அகரம் அமுதன் (28-Feb-14, 7:23 am)
பார்வை : 88

மேலே