காதலே என் காதலே
காதலே என் காதலே ...
காதலே என் காதலே -1
கடலோடு வானும் காற்றோடு இலையும் பேசும் அந்த காலை வேளை மார்கழி மாதத்தில் மீதமிருந்த பனியை இந்த தை மாதத்தில் கொடுத்துக் கொண்டிருந்தது. அழகான காலை வேளை, மிதமான பனி, சுடாத சூரியன் அத்தனையும் ஒன்றாய் சேர்ந்து அவள் மனதில் கலவரம் செய்ய காதல் என்ற ஒற்றை வார்த்தை தன் வேலையை காட்டத் தொடங்கி இருந்தது. அவன் கண்கள், அதன் கூர்மை, அவனது நேரான நாசி, இதழோர புன்னகை, அந்த மாநிற நெற்றியின் வலப் புறம் உள்ள மச்சம் என மொத்தமாய் மொத்தமாய் சேர்ந்து அலைக் கழித்தது அஞ்சலியை.
23 வருடங்களாக வேண்டிய வேண்டுதல் இன்று இன்னும் 2 மணி நேரத்தில் நடந்துவிடும். அந்த ஒரு நிமிடம் அவன் அவள் கழுத்தில் தாலி கட்டப் போகும் அந்த ஒரு நிமிடம் ஜென்ம சாபம் தீரப் போகும் அந்த ஒரு நிமிடம் அதற்காக மட்டுமே காத்துக் கொண்டிருந்தாள் அஞ்சலி.
எத்தனை பிரச்சனை எத்தனை சண்டை பெற்ற அப்பாவிடம் கூட சண்டை போட்டு தானே இந்த திருமணத்திற்க்கு சம்மதம் வாங்கினாள். பின்னே சதாரணமான தோஷம் சதாரணமான பரிகாரம் என்றால் அவரும் ஒத்துக் கொண்டிருப்பார். அவன் ஜாதகத்தில் அப்படி தோஷமும் அதற்கு இப்படி ஒரு பரிகாரமுமா இருக்க வேண்டும். எந்தப் பெண்ணும் ஒத்துக் கொள்ள மாட்டாள், வரப் போகும் கணவனின் ஜாதகத்தில் மரண தோஷம் இருப்பதால் கட்டிய தாலியை 3 மாதத்தில் கடலில் கரைத்துவிட்டு 1 வருடம் தாலி அணியாமல் கணவனைப் பிரிந்து வாழ வேண்டும் , இது அவளால் மட்டும் தான் முடியும் இந்த பைத்தியக்காரிதான் அவனை அந்த அளவிற்கு பைத்தியமாகக் காதலிக்கிறாளே. அவனுக்காக என்றால் ஒரு வருடம் மட்டும் அல்ல வாழ்க்கை முழுவதும் கூட அவனைப் பிரிந்து இருப்பாளே, அவள் எதிர் பார்த்தது ஒரு வருட பிரிவை மட்டும் தான் வாழ்க்கை முழுவதும் பிரிந்துவிடலாம் என்று அவன் சொல்லும் வரை.
முதலில் யார் அந்த பேச்சை எடுத்தார்களோ தெரியாது ஆனால் பேசியது மட்டும் தெரியும் "நீ உன் மாமன் மகனை தாண்டி கட்டிக்கப் போற நீ முடியாதுன்னு சொன்னா நாங்க உன்ன தூக்கிட்டு வந்துருவோம்". யாரோ விளையாட்டாக சொன்னது முதலில் ஆழமாகப் பதியா விட்டாலும் கேட்கக் கேட்கக் பிடித்துப் போய் பின் அந்த வார்த்தையை யாராவது சொல்ல மாட்டார்களா என்று தவம் இருக்க ஆரம்பித்து விட்டாள். அவனை தள்ளி நின்று பார்த்துப் பார்த்து காதல் வளர்த்தாலே ஒழிய ஒரு முறை கூட அவனிடம் சொல்லவும் இல்லை, சொல்ல முயற்சிக்கவும் இல்லை. அவனை நேராய் பார்க்க முடியாது, பேச முடியாது. அதுவும் அவன் கண்களைப் பார்த்து விட்டால் போதும் தொலைந்தால். என்ன தான் செய்வானோ அந்தப் பார்வையிலேயே ஊமையாகிப் போவாள் அவள். பிறகு எப்படி பேசுவது காதலை சொல்வது எல்லாம். அவளது பேச்சும் நடப்பும் அவனிடம் மட்டும் எடுபடாது. அந்தக் காதல் தான் அப்பாவிடம் பேசி இதற்கு ஒத்துக் கொள்ள வைத்தது. முதலில் பரிகாரத்திற்காக யாருக்கும் சொல்லாமல் கல்யாணத்தை முடித்து விட்டு பிறகு 1 வருடம் கழித்து பெரிதாக செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து எல்லாம் செய்தாகிவிட்டது.
இருவரது குடும்பமும் விருதுநகரில், இருக்க அவன் மட்டும் சென்னையில் ஒரு சாப்ட்வேர் டெவலப்பிங் நிறுவனம் ஒன்றை நிறுவி நடத்தி வந்தான். அங்கேயே சொந்தமாக ஒரு ப்ளாட்டையும் வாங்கி அவன் மட்டும் அங்கே இருந்தான். முதலில் அவள் திருமணத்திற்க்கு பிறகு எங்கே இருப்பது என்ற கேள்வி வந்த போது அவனது தங்கை திவ்யாவும் இவளது தங்கை நந்தனாவும் சேர்ந்து அந்த பிரச்னையை எளிதாகத் தீர்த்தனர். 2 பேரும் கொஞ்ச நாள் ஒண்ணா இருந்தாதான் புரிஞ்சுக்க முடியும், அப்போ தான் நல்லா இருக்கும் என்று பெரியவர்களை வாயடைக்க வைத்தனர்.எல்லா பிரச்சனைகளுக்கும் முடிவு தெரிந்தாகிவிட்டது, இன்று திருமணம் அவனது அம்மா, அப்பா, தங்கை திவ்யா, இவளது அம்மா, அப்பா, தங்கை நந்தனா, தாத்தா, பாட்டி என மொத்தம் 10 பேர் கொண்ட திருமணம் பரிகாரத் தளமான தளமான ஸ்ரீ ரங்கத்தில் நடைபெறப் போகிறது.
எத்தனை நாள் கனவு இன்று நடக்கப் போகிறது.வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் இது. இனிமேல் இந்த விருது நகரை விட்டு, அம்மா, அப்பா, சண்டை போடற நந்தனா எல்லாரையும் விட்டு எப்படி இருக்கப் போறேன், ஆனால் "என்ன ஆனா என்ன எப்படி இருந்தாலும் என் கார்த்திக் என் கூட இருப்பானே, அப்பறம் என்ன" , நினைத்த போது சொந்தங்களைக் கூட மறக்க வைக்கும் காதலை நினைத்து சிரிப்புதான் வந்தது , கூடவே முகூர்த்த நேரமும் வந்தது . நந்தனாவும் திவ்யாவும் சேர்ந்து அவள் அலங்காரங்களை சரி செய்து அழைத்து வரும் போது அடிக் கண்ணால் அவனைப் பார்க்கையில் அவன் முகத்தில் தேங்கி நின்ற படபடப்பு அவளுக்கும் தெரிந்தது. அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது அஞ்சலிக்கு, கூடிய சீக்கிரம் அவன் அவளைப் பார்த்து பரிதாபப்படும் நாள் வரப் போகிறது என்பது அவளுக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.
ஐயர் தாலி எடுத்துக் கொடுக்க கார்த்திக் அதை அவள் கழுத்தில் கட்டிய அந்த நிமிடம் அந்த ஒரு நிமிடம் than துடிப்பை நிறுத்தியது அவளது இதயம். யாருடைய நினைவுகளில் தன் இரவுகளைத் தொலைத்தாளோ எந்த கண்களைப் பார்க்கும் போதெல்லாம் தன்னையே இழந்தாலோ , யாருடைய கரம் பற்ற கனவுகளில் கரைந்தாளோ ,அவனுக்கு உரிமையாகிப்போன அந்த நிமிடம் அந்த இதயம் துடிக்க மறந்து போனது கூட குறைவுதான் .
எல்லா சடங்குகளும் முடிந்த பின்னர் மொத்தக் குடும்பமும் விருதுநகருக்குத் திரும்ப அவர்கள் இருவரும் மட்டும் சென்னை செல்ல அஞ்சலியுடன் சேர்ந்து அவள் காதலும் பயணம் செய்தது அவளைப் போலவெ ஊமையாய். திருச்சியில் இருந்து ப்ளைட்டில் செல்ல அவன் ஏற்கனவே எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்ததால் அடுத்த சில மணி நேரங்களிலேயே அவன் அல்ல அவர்கள் வீட்டிற்க்கு சென்றாகிவிட்டது. அவளைப் பொறுத்த வரையில் அது அவர்கள் வீடு, அவனைப் பொறுத்தவரை அது இன்னும் அவன் வீடு மட்டுமே .
"உள்ள வா அஞ்சலி " கதவைத் திறந்து விட்டு விட்டு நிதானமாய் அழைத்தான் கார்த்திக் .
உள்ளே வந்த அஞ்சலி மெதுவாக வீட்டை அளந்தாள். விசாலமான ஓர் ஹால் , அட்டாச்டு பாத் ரூமுடன் கூடிய 2 பெட் ரூம் , கிச்சன் , மாற வேலைப்பாடுகள் நிறைந்த பூஜை ரூம் என அதன் அலங்காரங்கள் அவன் ரசனையைக் கூற கிட்ச்சனில் இருந்த பொருட்கள் அவனுக்கும் சமைக்கத் தெரியும் என்று பறை சாற்றின. வீடு பளிச்சென்று இருக்க "அவனைப் போலவே" என்று தோன்றியது அவளுக்கு. அவள் வீட்டின் அத்தனை வசதிகளும் அவளுக்கு அங்கும் இருந்தன.ஆனால் அவள் எதிபார்த்தது இந்த வசதிகளை இல்லையே. இந்த வசதிகள் இல்லாமல் கூட இருக்க முடியும் அவளால் அவள் உயிரில் உயிரை கலந்த கார்த்திக் மட்டும் உடன் இருந்தால்.
மழைக் கால இலையாய் மனம் அவனால் அலைபாய வழக்கம் போல் மனதிற்க்குள் பாடல் வரிகள் பரவ ஆரம்பித்தன .
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
அது என்னென்று அறியேனடி ........
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
அது என்னென்று அறியேனடி ........
ஓரப் பார்வை பார்க்கும் போதே உயிரில் பாதி இல்லை
மீதி பார்வை பார்க்கும் பொழுதே பேதை நெஞ்சில் இல்லை
எனது உயிரைக் குடிக்கும் உரிமை i உனக்கே உனக்கே ................................
(காதல் காதலுடன் வரும் )...