கொத்துவேல

கண்ணு முழிச்சு எழுந்ததுமே
கஞ்சி காச்சி வடிக்கோணும்

கூலி வேல கொத்துக்கு
கூட்டத்தோட நிக்கோணும்

களைகொத்தும் கஞ்சிபோசியும்
கையிலேந்திப் போகோணும்

கொத்தி கொத்தி புல் வெட்டி
களை எடுக்க வேணும்

கொத்திய புள் மாடு உண்ண
உதறிக் கட்ட வேணும்

சுப்பம்மா பாட்டுக்கு
சப்ப கட்டுப் போடோணும்

சுட்டெரிக்கும் வெயிலுக்கு
முக்காடு கூட்டோணும்

குட்டி புள்ள நிழலாட
தொட்டி ஒன்னு கட்டோணும்

ஆராரோ பாட்டுச் சொல்லி
அவளுறங்கச் செய்யோணும்

வேள வந்து கூடு முன்னே
ஆளோடு சேரோணும்

கூடக் கொஞ்சம் கொத்துப் போட்டு
குப்பாயச் சேர்த்துக்கோணும்

அவதூறு சொல்ற பண்ணாடிய
அப்பவே அடக்கோணும்

வேல முடிஞ்சதுமே
சேல அவுத்துக் கட்டோணும்

சேர்ந்து நடபோட்டு சீக்கிரமாய்
ஊடு போய்ச் சேரோணும்

அருகம்புல் கட்ட
தல மீது சுமக்கோணும்

கொழந்தைய மார் அணைச்சு
மாராப்புக் கட்டோணும்

வீரப்பன் வருமுன்னே
ஊடு போய்ச் சேரோணும்

காலு கை கழுவி பழைய
கஞ்சிஅதக் குடிக்கோணும்

பாலூட்டிக் கொழந்தைய
தொட்டிலிலே வைக்கோணும்

பாய் விரிச்சுப் படுக்கோணும்
பக்கத்திலே புருசனோட

ஊட்டப் பூட்டோணும்
வெளக் கணச்சுப் படுக்கோணும்

வெளஞ்சிருக்கும் ஆண்மைக்கு
வளைஞ்சு கொடுக்கோணும்

அழுகின்ற கொழந்தைய
அப்பப்போ ஆட்டோணும்

கோழி கூவ எழுந்திருச்சு
ஒல காய வைக்கோணும்

போசியில கஞ்சி ஊத்தி
ஆம்பளைய அனுப்போணும்

அவுத்த மாட்ட தண்ணி கட்டி
அவரிடம் கொடுக்கோணும்

அடுத்ததா.....
கொத்து எடுத்து .....
அழுத புள்ளைய தூக்கிகிட்டு ......

எழுதியவர் : படைக்கவி பாகருதன் (5-Mar-14, 9:22 pm)
பார்வை : 58

மேலே