மயானக் காட்டில் ஜெபக்கூட்டம் 0தாரகை0

மனித இரத்தத்தால்
குளிப்பாட்டப்பட்டு
சூரிய உருண்டையாய் பூமி

சிவப்புக் கம்பளத்தில்
நடைபோட ஆசைப்பட்ட
குருதி நக்கும் நரிகளுக்காய்

உயிர்கள்
ஊசலாடிக்கொண்டிருந்தன
சில பல சதவீதங்களில்

முழு சதவீதமும்
மனிதம் செத்திருந்தது
உயிர்கள் இருந்தவர்களிடம்

ஒரே நேரத்தில்
ஆயிரம் கர்ப்பிணிகளின்
பிரசவத்திற்கு ஒத்த ஒலியும் வலியும்

எல்லைகடந்த தன்மையால்
இயங்கியும் இயங்கா
உணர்வுகளும் உறுப்புகளும்

புகையின் கண்கள் எரிச்சலடைந்தன
கண்ணை உறுத்தும் காட்சிகளை
கணக்கின்றி கண்டதால்

தீச் சுவாலைகள்
எழுந்து எழுந்து கோசமிட்டன
அப்பாவிகளை விட்டுவிடு விட்டுவிடு என்று

அலைக் கைகளால்
நெஞ்சில் அடித்து அடித்து அழுத
கடலன்னை கரைதாண்ட போராடினாள்
கயவர்களை அழிக்க

சுவாசிக்கவும் விருப்பமின்றி
தலை சுற்றித் திரிந்தது
காற்று

ஆகாயம் கண்பொத்தி கதறியது
இதுவரை காணாத காட்சிகளை
கண்டு திக்கித்து

மனிதப்போர்வையில் நடமாடித் திரியும்
இந்த கொடூர விலங்குகளின் திட்டங்கள் தோல்வியில் முடிய
எப்போதும் ஜெபித்தவாறு
ஐம்பூதங்கள்

எழுதியவர் : தாரகை (11-Mar-14, 9:35 am)
பார்வை : 161

மேலே