குறள்காத்தல் கோளாங் குறி
இரும்புவி யாங்கும் இருமிலக்கி யத்துள்
திருக்குறள்போல் உண்டோ திரு!
ஆகாப்பாழ் பண்பை அகற்றுந் திருக்குறளாம்
பாகாப்பாய் நன்கு படித்து!
சொல்லரிய தொல்குறளைத் தேராநூல் வல்லாரைக்
கல்லாருள் வைத்தல் கடன்!
சாணிற் குறைவெனச் சாரா தகல்வார்எண்
சாணுடல் பாழெனச் சாற்று!
மல்லி சிறிதெனினும் மன்றல் பெரிதன்றோ?
உள்ளிக் குறள்படித்(து) ஓர்!
தொட்டோர் திருக்குறளைத் தூக்கி நிறுத்துங்கால்
நெட்டிமயம் பார்க்கும் நிமிர்ந்து!
அணுசிறி(து) ஆற்றல்? அகுதொக்கும் பாரோர்
அணுகிப் பயில்குறளென்(று) ஆர்!
பாரெடுத்துக் கற்கும் பயன்குறளைச் செந்தமிழின்
சீரெடுத்துச் செய்க சிறப்பு!
உள்ளத் திரளும் உயர்பொருளால் தீங்குறளும்
அள்ளக் குறையாக் கலம்!
விண்தேடும் வல்லோன் விரித்த குறள்முடியை
மண்தேடும் தாளின் அடி!
ஆக்கமுற வேண்டின் அமிழ்தனைய முப்பாலை
நீக்கமறக் கற்று நிமிர்!
திரள்செல்வம் என்றேநம் தீந்தமிழ்க்கு வாய்த்த
குறள்காத்தல் கோளாங் குறி!
அரிய தமிழெனினும் ஆளுங் குறளே
அரிதிற் கரிதாம் அறி!
குறட்பா படித்தாய்ந் துணர்ந்தால் நன்றாய்த்
திரண்டு வருமே தமிழ்!
செருக்கடையும் பேற்றினைச் செந்தமிழர்க் கீந்த
திருக்குறள் ஏட்டினைச் சேர்!