நான் உன்னை காதலிக்கவில்லை 0தாரகை0

காதலி! காதலி காதலி என்றேன்
காதலிக்கவேமாட்டேன் என்றாள்
வாயால் மட்டும்.என்னையே
வைத்தகண் வாங்காமல்
பார்த்துக்கொண்டு....

பார் பார் என்றேன்
பார்க்காமலே போனாள்
மனக்கண்ணால் படம்பிடித்து
மனசுக்குள் பதியம் போட்டுக்கொண்டே...

சொல் சொல் என்றேன்
சொல்லாமலே சொல்லிவிட்டாள்
எல்லாவற்றையும் ஒரு சிறு சிணுங்கலில்

கோபமாய் திட்டும்போது
நடிப்பில் பிழையாய்
அவள் உதட்டோர புன்னகையில் தேன் சொட்ட
என் இதயத்தில் இனிப்பாய் பட்டது...

அவள் மூச்சுக் காற்றை
திருடிச் சென்றேன் சுவாசிக்க.
முறைத்த அவள் பார்வையில் கோபம் இல்லை என்னிடம் இருந்து அவள் திருடியதை நானும் திருடியதால்.....

பேசமாட்டாள் பார்க்கமாட்டாள்
விடுமுறை அன்றும் விடுப்பு எடுக்காமல்
விடியலுடன் சண்டை போட்டு
வேலை சாக்கு சொல்லி வந்துடுவாள்
என்னோடு சண்டை போட
நான் உன்னை காதலிக்க மாட்டேனென.

கால் இடறாமல் விழுந்திடுவாள்
நான் தூக்க நாடி
சும்மாவே சிரித்திடுவாள்
என் கவனம் தேடி
பார்ப்பானா என ஏங்கிடுவாள்
பார்க்கும்போது
தலை குனிந்திடுவாள்
பேசும் போது சொல்லிடுவாள்
நான் உன்னை காதலிக்கவில்லையென.

யாரும் என் நிழலை தொடாமல்
இருக்க வேலி போடும் வேலையில் இருக்கும்
அவள் என்னை காதலிக்கவில்லையாம்.

நான் நிற்பது அறிந்தே தூரம் செல்வாள்
நான் போனது அறிந்து நான் நின்ற இடத்தில் நின்று என் நினைவுகளை அசைபோடும் அவள்,
என்னை காதலிக்கவில்லையாம்.

அவள்மீது நான் கொண்ட காதலை
அதிகரிக்கும் முயற்சியில்
அவள் சொல்லும் முதல் பொய்யே
'நான் உன்னை காதலிக்கவில்லை'

உன் பொய்கள் எல்லாமே தாங்கிடுவேன்
ஒரேயொரு உண்மை மட்டும் சொல்லிவிடு!
நீ சொல்வது எல்லாம் பொய்கள்தானே?
நெஞ்சத்தில் என்மீது காதல் உண்மைதானே?

எழுதியவர் : தாரகை (18-Mar-14, 10:12 am)
பார்வை : 197

மேலே