பனையோலை வீடு
கத்தரிவெய்யில்
ஒற்றைப்பனையின் நிழலை
அதனடியில் கிடத்தியிந்தது
அம்மாவின் கைகளுக்குள்
சுட்டுவிரலிருந்தது
வலிநெடுக தண்ணீரறியாத
சுடுமணல்
வழிந்த வியர்வையை
நெடுநாள் பசியாய்
குடித்து தீர்த்தது
கருவேல முட்கள் மீது
முனை மழுங்கிய அருவாவையும்
சேர்த்து தலைமேல் தூக்கி
“இப்ப வந்திடும்“
சொல்லி நடந்தாள்
வெகுநேரமாகியும் கவிழ்ந்த
பனையோலை வீடு
வகிடெடுத்த பாதையின்
கடைசியில்
தெரிந்துகொண்டேயிருந்தது
பசிக்கு இனிமேல்தான்
கருவேல முட்கள்
தீக்கிரையாகும்.