அவளிடம் அந்த மாற்றம்

படித்தது-

கடந்த சில வாரங்களாகவே அவளிடம் அந்த மாற்றம் ஏற்பட்டிருந்தது. முன்னைப் போல‌ அவ‌ள் இப்போது இல்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போய் அவளைப் பார்க்க வேண்டும்.

போன மாதம் கூட அவளைப் பார்த்த போது அப்படி ஒரு வசீகரம். கரும்பச்சையில் தலைமுடிச் சாயம். சிலர் தங்கள் தலைக்கும் அடிக்கும் வண்ணங்களைப் பார்த்தால் சகிக்காது, ஆனால் இவளுக்கோ வெகு நேர்த்தியாக‌ இருந்தது. ஆங்காங்கே கோர்த்த சிவ‌ப்பு முத்துக்க‌ள் த‌லைமுடியுள் தொங்கின‌. த‌ன்னை அல‌ங்க‌ரித்துக் கொள்வ‌தில் அவ‌ளுக்கு நிக‌ர் அவ‌ளே.

முதன் முதலில் அவளை எங்கே சந்தித்தேன் … ம்ம்ம்ம் …

இந்த ஊருக்கு வந்த புதிதில், பால் வாங்க கடைக்குச் சென்ற போது, ஒரு தெரு முனையில் தான் அவளைப் பார்த்தேன். அவளது வனப்பும், வடிவும், கலகலப்பும், பார்த்துக்கொண்டிருக்கும் போதே, என் இதயத்தைக் பறித்துக் கொண்டாள் அந்தக் கொள்ளைக்காரி.

இரண்டு தெருக்கள் சேரும் முனையில் இருந்தது அவளது வீடு. அவள் வசிப்பதாலோ என்னவோ அவள் வீடும் அழகாகவே இருந்தது. வீட்டின் ஜன்னல் சாய்ந்து, கை காட்டி சிரித்துப் புன்ன‌கைத்தாள். யாராவ‌து க‌வ‌னிக்கிறார்க‌ளா என‌ சுற்றி முற்றி பார்த்துக் கொண்டேன். ந‌ல்ல‌ வேளை யாரும் க‌வ‌னிக்க‌வில்லை.

பச்சை வண்ண‌ம் மாற, அங்கிருந்து நகர மறுத்த என்னை, ‘நான் இங்கே தான் இருப்பேன். நாளை சந்திக்கலாம்’ எனக் கை அசைத்து அனுப்பி வைத்தாள். எனக்குப் பின் நின்ற வண்டிக்காரன் ஹாரன் அடித்து என் வயிற்றெரிச்சலை வேறு கட்டிக் கொண்டான்.

அன்றிலிருந்து அவளது தெருப்பக்கம் அடிக்கடி போக ஆரம்பித்தேன். எப்போது சந்தித்தாலும் அவ‌ள் அதிக‌ம் பேசுவ‌தில்லை. நான் பேசாம‌ல் இருப்ப‌தில்லை. காதுகளில் கிசுகிசுப்பாள், கலகலவெனச் சிரிப்பாள், திடீரென சோவென அழுவாள். அவளுடன் இருந்தால், மணிக்கணக்கும் நொடிப் பொழுதே. நாட்க‌ள் செல்ல‌ச் செல்ல‌ நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்கள் ஆனோம். ஆறே மாதங்கள் தான் என்றாலும் ஆறேழு வருடத்திற்கு இணையாக இருந்தது எங்கள் நட்பு.

“திரும‌ண‌ம் ஆன‌வ‌ன் நீ. இப்படி அவளையே சுற்றி வந்தால் உன் மனைவி என்ன நினைப்பாள்” என‌க் க‌டிந்து கொண்டான் ந‌ண்பன். என் காதுகளில் எதுவுமே விழவில்லை. அழகான மனைவி ஒரு புறம் இருந்தாலும், இவளின் மேல் பிரியமும் தவிர்க்க முடியாமல் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருந்தது.

சொல்ல‌ ம‌ற‌ந்துவிட்டேனே ! வனப்பும், வடிவும் தானே தவிர, அவள் அங்கமெல்லாம் தங்கம் இல்லை, க‌ருப்பி தான். ஆனால் க‌ட்ட‌ழ‌கி. அந்த‌க் க‌ட்ட‌ழ‌கிற்கு தான் இப்போது ப‌ங்க‌ம் வ‌ந்திருக்கிற‌து.

அவளைப் பார்த்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகியிருந்தது. அலுவலக நிமித்தம் வெளியூர் சென்றுவிட்டு இன்று தான் ஊர் திரும்பியிருந்தேன். “இப்ப தான வந்தீங்க, அதுக்குள்ள எங்கே கிளம்புறீங்க ?” என்ற மனைவியின் வார்த்தைகளை உதாசீனம் செய்து அவளைப் பார்க்கக் கிளம்பினேன். கையோடு காமெராவையும் எடுத்துக் கொண்டேன்.

வ‌ண்ண‌ச் சாய‌ங்க‌ள் அடித்து அடித்து முடி எல்லாம் ப‌ழுப்பாகிக் கொட்டியிருந்த‌து. இப்போது அவளிடம், கிசு கிசு பேச்சு இல்லை, கல கல சிரிப்பு இல்லை. இப்படி ஆகும் என்று முன்னரே தெரியும். இருப்பினும் இந்த நிலையில் அவளைப் பார்க்க என் மனம் ப‌ழ‌கியிருக்க‌வில்லை.

‘அழ‌காய் இருக்கும்போது குழையக் குழைய‌ வ‌ளைய‌ வ‌ந்தாய். இப்ப எல்லாம் போச்சு. நீயும் என்னை வெறுத்து ஒதுக்கிவிடுவாயா ?’ என்ப‌து போல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

யாருமே அங்கில்லை. துளியும் யோசிக்காம‌ல், கிட்டே சென்று அவளை இறுக‌க் க‌ட்டிப் பிடித்துக் கொண்டேன். முன்னரே தானிய‌ங்கியில் போட்டுவிட்ட காமெராவில், க்ளிக், க்ளிக் என்று சில‌ ப‌டங்க‌ள் எடுத்துக் கொண்டு வீடு திரும்பினேன். ‘இன்னும் சில மாதங்களில் எல்லாம் ச‌ரியாகிவிடும், கவலைப்படாதே’ என்று அவ‌ள் என்னைத் தேற்றி அனுப்பிய‌து ஆறுத‌லாய் இருந்த‌து.

“வந்ததும் வராததுமா, அந்த மொட்டை மரத்தைப் படம் பிடிக்கத் தான் போனீங்களாக்கும் !” என்று தாளிக்கும் க‌டுகோடு சேர்ந்து கொண்டாள் என் ம‌னைவி.

எழுதியவர் : (25-Mar-14, 12:34 pm)
சேர்த்தது : இஸ்மாயில் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 375

மேலே