காதுகுத்து விழா - கே-எஸ்-கலை

ஆகாதப் பாதையில்
போகின்ற நீதியில்
வேகாத சிதையெடுத்து
வெறிநாய்கள் பசியடக்க
நோகாமல் படுத்திருக்கும்
நொண்டி ஜனநாயகம் !
ஏகாந்த தனிமைக்குள்
இடறுண்டு இனமொன்று
காணாத துயரெல்லாம்
காண்கின்ற பொழுதொன்றில்
ஆகாத கதைப்பேசி
அண்டிவரும் ! அருகில்வரும் !
அண்டைய ஜனநாயகம் !
தேர்தலுக்கு நாள்குறித்து
கூத்தணிகள் கூத்தடிக்கும் !
தடுமாறா நாக்குகளில்
தமிழ்பாசம் விளையாடும் !
தூக்குக் கயிறவிழ்த்து
தூண்டிலிடும் வாக்கிழுக்க !
மாட்டிக் கொள்ளும் மீன்களுக்கு
மட்டும்தானே முள்குத்தும் ?
உடன்பிறந்த உறவென்று
உணர்வொழுக அறிக்கையிடும் !
நீலிக் கண்ணீர் வடித்து
போலிக் கதைகள் பேசும் !
உடற்கருக்கும் தீயெடுத்து
வீட்டுக்குள் விளகேற்றும் !
கடன்மறந்து கதவடைத்து
கள்ளக் குடித்தனம் நடத்தும் !
உயிர்பிடித்து ஓடிவந்த
அகதிகளின் முதுகிலேறி
சவாரிக்கும்! சம்பாரிக்கும் !
போராட்டம் பலநடக்கும்
பொங்கியெழும் ஒருகூட்டம் !
போராளி தோழரென்று
அறைகூவல் வான்பிளக்கும் !
சிலருக்கு முடி வேண்டும்
பலருக்கு நிதி வேண்டும்
கிடைக்கும் வரை கிளறுவார்கள்
நீதியென்று புளுகுவார்கள்
கஷ்டவேலி முட்கள் தைத்து
கஷ்டப்படுவோர் கத்துவார்கள்
தேதி வந்து தேவை தீர்ந்தால்
கதைகூறி காது பொத்துவார்கள் !
அவர்கள் கரை காண்பார்கள்
இவர்கள் கறை காண்பார்கள் !
தேர்தல் முடிய தேவை முடிய
சத்தியங்கள் பத்திரமாய்
சத்திரத்தில் சயனிக்கும் !
சாகா வரம்பெற்ற
சரித்திரத்தின் தரித்திரம்
கும்பர்கர்ண துயில்களைந்து
காதுகுத்தும் விழா செய்ய
மீண்டுமெழும் ஐந்தாண்டில் !