ஆட்டிப் படைக்கும் சிந்தனைகள்-1

இசை கேட்டால் புவி அசைந்தாடும் என்று கூறுகிறார்கள். இசைத்திறம் கடுகு அளவு பெற்றவர்களை கூட இங்கு இசைஞானி என்|றெல்லாம் அழைக்கிறார்கள். அவரை கடவுள் போல் பாவித்து காலில் விழுந்து வணங்குகிறார்கள். பாவம் இந்த தமிழர்கள். தரையில் விழுந்து வணங்கிட வேண்டியது இறைவன் ஒருவர்க்கு மட்டுமே என்பதை அறியாமல் கண்டவர் காலிலும் விழுகிறார்கள்.

இன்று உலகின் மாபெரும் இசைஞானி ஆகிய லுட்விக் வான் பீத்தோவென் என்பவரின் நினைவு நாள். மார்ச் 26, 1827 இல் மறைந்த பீத்தொவெனை நாம் இன்று நினைக்காமல் இருக்க முடியாது. 12 வயது பாலகனாக இருந்த போதே முதல் இசை படைப்பை உலகுக்கு அளித்தவர்., இரவில் விழித்திருக்க வேண்டும் என்பதற்காக முழுத் தொட்டித் தண்ணீரில் தலையை மூழ்க வைத்து வைத்து, காதுகளில் நீர் ஏறி, 26ஆவது வயதில் “டின்னிடஸ்” எனும் ரீங்கரிக்கும் செவி நோயால் தாக்கப்பட்டு, 28ஆவது வயதில் முழுச் செவிடர் ஆனார். ஆயினும், அவர் 9 சிம்பொனிகள், 5-பியானோ கான்செர்ட்டுகள், 32-பியானோ சொனட்டாக்கள், 16 ஸ்ட்ரிங் குவார்ட்டெட்டுகள் என உலகமே வியக்கும் வகையில் இசைப் படைப்புகள் அளித்தவர்.

பீத்தோவனின் செவிடானாலும் சிறப்புற வாழவேண்டும் எனும் ஞானம் அவருக்கு அவர் படித்த நூல்கள் வாயிலாகவே வந்தது. அவரது படிக்கும் மேசையில், “தத் த்வம் அஸி” எனும் மகா வாக்கியம் அழகாக பொறிக்கப்பட்டு வைக்கப் பட்டு இருந்த வாசகம் ஆகும். அப்படி அவரை இந்த கிழக்கத்திய ஞானம் கவர்ந்ததற்கு என்ன காரணம் என ஆய்ந்தோமென்றால், பண்பாடு மற்றும் மத உறவுகட்கு அப்பாற்பட்ட அபூர்வமான காரணங்கள் அல்லாமல் இத்தகைய புரட்சிகரமான ஒரு மேற்கோளினை அவர் தேர்வு செய்து இருக்க முடியாது. சாண்டோக்ய உபனிடதத்தில் (vi-8-16) குரு உத்தாலக ஆருணி தன் மகனாகிய ஸ்வேதகேதுவுக்கு, ஒன்பது முறை சொல்லிய மகா வாக்யமே ”தத் த்வம் அஸி” என்பதாகும் . இதன் பொருள், நீ அதுவாக இருக்கிறாய் என்பதாகும். நீ அதுவாய் இருக்கிறாய் என்பது நாம் இறைவனின் ஒருவித அம்சம் என நமக்குப் புரிவது தியானம் மூலமே ஆகும். இத்தகைய தியானம் மூலம் சாதிக்கும் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு பயணத்தையே இது குறிக்கும். இது எல்லாம் கடந்த கடவுள் இங்கு, இப்பொழுது காணக் கிடைப்பதாக அறிவிக்கிறது. இத்தகைய விடுதலை என்பது எங்கிருந்தோ புதிதாக கொண்டு வரப்படும் பொருள் அல்ல. மாறாக, தவறினை நீக்குவது ஆகும்.. ஒரு மனிதனுக்கு நோய் குணமாகிறது என்னும்போது நாம் அவர் புதிதாக எதையோ பெற்று விட்டார் என்று கூறுவதில்லை. ஆனால், அவர் தனது பழைய ஆரோக்கிய நிலைக்குத் திரும்பி விட்டார் என்கிறோம். நமது வேத புத்தகங்கள் விடுதலையை போதிக்க முயலாமல் அவை ஒரு மனிதனின் இயற்கையான பண்பினை அவன் உணர்வதற்கு அவனை உசுப்பி எழுப்புகின்றன.

முடிவான முடிவாக இந்த மகா வாக்யம் கூறும் மற்றொரு கருத்து என்னவென்றால், நாம் அதுவாக இருக்கிறோம் எனும் விழிப்புணர்வு உலகின் படிவங்கள், வெளிப்பாடுகள் பற்றிய படைப்புத்திறத்தோடு நாம் வாழ்வதற்காகவும், அத்தகைய வாழ்வில் எதிர் வருபவற்றை அனுபவிக்கவும் வழி வகுக்க வல்லது ஆகும். அதனால் புதிய புதிய எண்ணங்களில் மூழ்கி
அர்த்தம் தெரியாமல் அமிழ்ந்து விடாமல், அவ்வெண்னத்தின் மொழி வடிவினையும் தாண்டி
நம் ஆன்ம பயணம் செல்வதற்கான விடுதலையை அது அளிக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். இது அத்தனையும், பேச்சு, சிந்தனை வாயிலாக இல்லாமல் வெறுமனே தியானத்தில் மூழ்கி இருப்பதன் மூலமே நடப்பதாகும்.

ஆயினும், செவிடராக இருந்து கொண்டு பீத்தொவன் அப்படி ஒரு இசைப்பயணம் மேற்கோண்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவை மாற்றி, தம் வாழ்க்கைப் பயணத்தை ஆக்க பூர்வ படைப்புப் பயணமாக மாற்றியது இந்த மகா வாக்கியமே… நமது இந்திய ஞானமே அத்தனை உலகிலும் சிறந்தாக ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது.

செவிட்டுத் தன்மை சில வேளைகளில் நம்மை நையாண்டி செய்ய வைக்கும். நகைச் சுவைக்கு நல்ல கருப்பொருள் ஆகி நிற்கும். ஒரு நல்ல மனிதருக்கு ஒரு நல்ல மனைவி இருந்தார். முப்பது ஆண்டு தாம்பத்திய வாழ்க்கையில் அம்மனிதர் தம் மனைவிக்கு இப்போதெல்லாம் காது சரியாக கேட்பதில்லை என ஆதங்கப்பட்டார். தனது குடும்ப மருத்துவரிடம் இது குறித்து ஆலோசனை கேட்டார்...அவரது ஆலோசனைப்படி, எவ்வளவு தூரத்தில் இருந்து பேசினால் கேட்கவில்லை என்பதைப் பொறுத்து ட்ரீட்மெண்ட் கொடுக்கலாம் என்றதால் வீடு திரும்பி 15 அடி தூரத்தில் தன் மனைவியிடம் இன்று இரவு சாப்பாட்டுக்கு என்ன செய்கிறாய் எனக் கேட்டார்.. பின் 10 அடி தூரம் , 8 அடி தூரம், 7 அடி தூரம் கடைசியில் 4 அடி தூரம் வந்து கேட்டபோழுது, ஐந்தாவது முறை கூறுகிறேன் இட்டிலியும் சாம்பாரும் என அவரது மனைவி பதில் அளித்தார்.

இப்படித்தான், நாம் யார் எனத் தெரியாமல் நாம் அதுவாய் இருக்கிறோம் என நம்மில் பல பேர் அலைந்து கொண்டு இருக்கிறோம்.
(வளரும்)

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ். (26-Mar-14, 1:50 pm)
பார்வை : 241

சிறந்த கட்டுரைகள்

மேலே