கரிசல் மண்ணில் ஒரு காவியம் 2௦

கரிசல் மண்ணில் ஒரு காவியம் 2௦

அத்தியாயம் 2௦

கமலாவிற்காக இன்று பாடசாலையில் கோலாகல வரவேற்பும் கொண்டாட்டமும் பள்ளியில் நிறைந்து காணப்பட்டது.முதலாவது சுதந்திர விழாப்போல் வகுப்பறைகள் எல்லாம் பரபரப்பாக இருந்தன.அவளுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்தவண்ணமாக நிறைந்தன.இந்த நாள் அவளின் திருப்புமுனை நாளாக எண்ணி அவள் மனது மகிழ்ச்சியில் பொங்கிவழிந்தது.நல்ல பொழுதாய் விடிந்த இந்த நன்னாளை தனது வரலாற்றில் ஒரு பொன்னாளாய் பதித்துக்கொண்ட அவள் பள்ளி வேளை முடிந்து வீட்டுக்குத் திரும்பத் தயாராகி வாசலில் ராஜாவிற்காகக் காத்திருக்கிறாள்.

ராஜாவும் வருகிறான்.”என்ன நிக்கிற வீட்டுக்குப் போகல”எனக் கேட்கிறான்.அம்மா சொன்ன ஆலோசனைகள் அவன் நினைவுக்கு வருகின்றன,அன்னையின் அறிவுமொழிகள் சரிதான் என அவனுக்குத் தோன்றியதால் கமலாவுடன் செல்ல அவன் யோசிக்கிறான்.

“என்ன யோசனை ராஜா?”என அவன் வித்தியாசமான முகக்குறிகளைக் கவனித்துக் கேட்கிறாள்..சுதாரித்துக்கொண்ட ராஜா,”அதெல்லாம் ஒன்றுமில்லை”என சமாளிக்கிறான்.
“ஒன்றுமில்லை என்கிறாய் அப்புறம் ஏன் என் முகத்தப்பாக்கப் பயப்புடுற.என்ன பயமா?யாராவது ஏதாவது சொல்லுவாங்கன்னு யோசிக்கிறியா”என அச்சம் தவிர்த்தவளாய் பேசினாள்.
இந்த கேள்விக்கு ஆமா என தலையாட்டி தன்னை ஒரு கோழையாக அவள் முன் அடையாளம் காட்டிக்கொள்ளவும் துணியாதவனாய்:யாருக்காகவும் எதற்காகவும் நான் ஏன் அஞ்சவேண்டும் என தன்னை அஞ்சா நெஞ்சனாக நெஞ்சை நிமிர்த்தி அவளுடன் செல்ல ஆண்சிங்கமாக சிலிர்துக்கொள்ளவும் அவசரம் இல்லாதவனாய் இருதலைக் கொள்ளி எறும்பாக அசைவற்று நின்றான்.

புரிந்துகொண்டாள் கமலா.”சரி நீ ரொம்ப யோசிக்கிற.இப்படியே நின்னுக்கிட்டே யோசிக்கப் போறியா?எதுவானாலும் இங்கயே யோசிச்சு முடிச்சிரு.நடந்துக்கிட்டே யோசிக்கிறது ஆபத்துப்பா.ஏன்னா பாதையில பள்ளம் மேடு இருக்கும்.வண்டிகள் போகும் வரும்.பாதையில கவனம் மாறுனா பயணம் அபாயம்பா.அதனால நல்லா நிதானமா நின்னு யோசிச்சுட்டு வீட்டுக்குப் போப்பா.பயந்தாங்கொல்லி....... .பயந்தாங்கொல்லி.”என அவனைக் கோழையாக்கி விட்டு அவள் தைரிய லட்சுமியாய் நடையைக் கட்டினாள்.

இந்தக் காட்சியைக் கண்ட சக மாணவர்கள் சும்மா இருப்பார்களா என்ன!.கமாலாவின் வீர வசனத்தைக் கேட்டு கை தட்டி ஆர்பரித்தார்கள்.திடுக்கிட்டுப்போன ராஜா வெட்கத்தால் தலை கவிழ்ந்தான்.அதிலே ஒரு தன்மானச்சிங்கம். ராஜாவின் தாழ்ந்த சிரத்தை நிமிர்த்தினான்.
“ராஜாவின் தலை எப்போதும் கவிழக்கூடாது.அவளோடு இணைந்து போனால்தானே பிரச்சனை அவள் முன்னாலயே போகட்டும்.நாம் பின்னாலயே போவோம்.வாடா வா”என ராஜாவின் முதுகைத் தட்டி அவளின் பின் அழைத்துச்சென்றனர்.

கமலா சற்று சில அடிகள் தூரத்தில் முந்தியும்.ராஜாவும் அவன் நண்பர்கள் கொஞ்சம் பிந்தியும் அதாவது சீதைக்குப் பின்னால் ராம சகோதரர்கள் பின் தொடர்வதுபோல் இருந்தது அந்தக் காட்சி.திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு சத்தமில்லாச்சின்னச்சிரிப்பு செய்துகொண்டு பெண்ணுக்கே உரிய அழகு நடை நடந்து சென்று கொண்டிருந்தாள்.

போகும் வழியில் ஒரு ஓடைப்பாலம்.அதில் உட்கார்ந்துகொண்டு போகிற வருகிற இளம் பெண்களை கேலிகிண்டல்.நையாண்டி,நக்கல் அடித்துக்கொண்டிருந்தார்கள் அர்த்தமில்லா சில அற்பர்கள்.இதெல்லாம் வாடிக்கைதானே என அதைப் பொருட்படுத்தாமல் அவர்களின் கூத்துக் கோமாளித்தனமான சொற்களை காதில் போட்டுக்கொள்ளாமல் அவர்களைக் கடந்துகொண்டிருந்தாள்.அப்போது அதிலும் ஒரு நெஞ்சழுத்தக்காரன்.”நேத்துப் பூத்தாளே ரோசாமொட்டு....பறிக்கக் கூடாதோ லேசாத் தொட்டு.”என அவளைப் பார்த்துப் பட்டுப்பாடிக்கொண்டே ஆட்டமும் போட்டான்.அதைக்கண்டு கொள்ளாத கமலா மேலும் தன் நடையைத் தொடர்ந்தாள்.

“அடடே அதோ பார்ரா ராஜா பின்னால படையோட பாது காப்பா வாராரு. ராணியம்மா பத்திரமா பவணி போறாக.இது எப்படி இருக்கு.?”என நையாண்டி செய்தான்.அதற்கு அவன் உடனிருந்த அற்பர்கள்,”சூப்பரு”என ஒத்திசைத்தார்கள்.

கமலா தன் செருப்பைக் கழட்டினாள்.”பொறுக்கிப் பயல்களா....உங்களுக்கெல்லாம் அக்கா தங்கச்சிகளே இல்லையாடா அயோக்ய நாய்ங்களா...வேல வெட்டி இல்லாத வெட்டிக் கழுதைங்க......இவா பொட்டச்சிதானன்னு அற்பமா நினச்சிங்களோ! அற்பப்புழுக்களா!......மத்த பொண்ணுக்கிட்ட ஆட்ன வால எங்கிட்ட ஆட்டலாமுன்னு நினைச்சேங்க அறுத்துருவேங் அறுத்து ஜாக்கிரத.....!”எனக் கழட்டிய செருப்பை சுழட்டி வீசினாள்.அவ்வளவுதான் அதற்கு மேலும் அங்கிருந்தால் ஆபத்து என உணர்ந்த அந்த அசிங்கப்பிறவிகள் ஓட ஆரம்பித்தார்கள்.
வீசியெறிந்த செருப்பை தன் காலில் திரும்பவும் மாட்டிக்கொண்டு வீர நாச்சியாராய் வெற்றி நடை போட்டாள் வீரமங்கை கமலா.

அவளை வைத்துக்கொண்டு பிரச்சனைக்குள் நுழையக்கூடாது என பொறுமை காத்த ராஜாவும் அவன் நண்பர்களும்.அவள் அவ்விடம் விட்டுக்கடந்ததும்.கலைந்து ஓட முயன்ற அந்த சாக்கடைக் கிருமிகளை மடக்கிப் பிடித்தார்கள்.

“ஏண்டா விசப்பூச்சிகளா.......உங்களுக்கு இதே வேலையாப் போச்சுல்ல..தெண்ட சோறு திங்கிற நாயுங்க....உங்களுக்குப் பொழுது போகலையின்னா பொழைக்கிற வழியப்பாத்து ஏதாவது வேல செஞ்சி அப்பன் ஆத்தா அக்கா தங்கச்சிங்களக் காப்பாத்துங்கடா.கல்யாண ஆச வந்தா ஏதாவது பொட்டக்கழுதையாப்பாத்துக் கட்டிக்கிட்டு மேக்க வேண்டியதுதானடா.ஏண்டா இப்படிப் படிக்க வாற பொண்ணுங்கள பாழாக்கப் பாக்குறீங்க பாவிங்களா.!......அட சண்டாளங்களா!உங்களப்போல அலையிற நச்சுப்பாம்புகளுக்குப் பயந்துக்கிட்டு தானடா பொண்ணுங்களப் பெத்தவங்க பொண்ணுங்களப் படிக்க அனுப்புறதுக்கே பயந்துக்கிட்டு வீட்டுக்குள்ளயே பூட்டி வைக்கனுமுன்னு நினைக்கிறாங்க.இப்பத்தான் ஒண்ணு ரெண்டு பொண்ணுங்களப் படிக்க வைக்க அனுப்புறாங்க.அதையும் கெடுத்துப் பழையபடியும் அவங்கள வீட்டுக்குள்ள அடைச்சிப் பூட்டுப்போட வச்சுருவீங்க போலிருக்க.நீசங்களா!.உங்களையெல்லாம் விட்டுவைக்கக் கூடாதுடா.எது உங்களச்சீண்டிவிடுதோ அத அறுத்துட்டா அப்புறம் இப்படிச்செய்யவேண்டிய அவசியம் இருக்காதுல்ல.....டேய் எடுறா அந்த பிளேட அறுத்துறலாம்”என ராஜா சொன்னவுடன் அவன் நண்பர்கள் அந்தக் கொடியவர்களைக் கீழே தள்ளிக் கிடத்தி பைகளுக்குள்ளிருந்து ஆளுக்கொரு பிளேடை எடுத்து கட்டுப்பாடு அறுவை சகிச்சை செய்யத் துணிந்தார்கள்.அவ்வளவுதான்.அந்த வீணர்கள் பயத்தில் அழுது ஓலமிட்டார்கள்.”தம்பிகளா நாங்க இனிமே இந்தப்பக்கமே தலை வைத்தும் படுக்கமாட்டோம்.நீங்க நல்லா இருப்பீங்க எங்கள விட்டுடுங்க உங்களுக்குக் கோடிப்புண்ணியம்.நீங்க சொன்னமாதிரி ஏதாவது வேலைவெட்டி தேடி வெளி ஊருக்காவது ஓடிப்போயிருறோம்”என அலறித்துடித்து ஒப்பாரியிட்டார்கள்`

‘இல்ல இல்ல அது இருந்தாதான உங்களுக்குத் தொல்ல.நீங்க சும்மா இருந்தாலும் அது உங்கள சும்மா இருக்க விடாது.பயப்புடாதீங்க வலியில்லாமக் கட் பண்ணியிறலாம்.....புடிங்கடா”மாணவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து கத்தியை எடுத்தார்கள்.

“அய்யய்யோ ஒண்ணு சேர்ந்துட்டாங்கப்பா...நம்மள விடமாட்டாங்கப்பா......அய்யா சாமிங்களா நாங்க இன்னுமே இந்த ஊர்லயே இருக்கல எங்கயாவது கண்காணாத இடமாப் பாத்து ஓடிப் போயிடுறோம். எங்கள விட்டுடுங்க”எனக் கைகூப்பி வணங்கி காலில் விழுந்து அழுது தொழுதார்கள்.

“சரி அப்படின்னா ஒண்ணு செய்யலாம் உங்கள எல்லாத்தையும் போலீசுல ஒப்படச்சிடுறோம்.அப்பத்தான அவங்க உங்களக் கண்காணிச்சிக்கிட்டு இருப்பாங்க.உங்க பேரையும் அவங்க பத்திரமா எழுதி வச்ச்சுக்குவாகல்ல....வாங்க வாங்க “என அத்தனை பேரையும் பத்திரமாக அடித்து இழுத்துக்கொண்டுபோய் உள்ளூர் காவல் நிலையத்தில் ஒட்டு மொத்தமாக ஒப்படைத்தார்கள்.அந்தக் காலக்கட்டத்தில் குற்றவாளிகளுக்கு காவல் நிலையம் என்றாலே சிம்ம சொப்பனம்.காவல் என்று சொன்னாலே கால்டவுசர் நனைந்து விடும்.
. .
(தொடரும்)

கொ`பெ`பி`அய்யா`

.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா (29-Mar-14, 1:20 am)
பார்வை : 259

மேலே