ரங்கநாதன் கவிதைகள் - சந்தனமாலை

வேசிக்கும் வேலையுண்டு
வெளியார் கண்ணுக்கு
பழைய சோறு யாசிக்கும்
குருடனுக்கும் ஓடு உண்டு
கோல்இருக்கும் , கோணிப் பை இருக்கும்
குப்பை பொறுக்கிக்கும்

இவனோ வெறும் பயல்
துண்டு பீடியில் தேய்ந்த காதன்
புறந்திண்ணை பகல் உறக்கம்
நீட்டிப் படுத்தால்
நெற்றியில் ஓட்ட நாலணா பஞ்சம்

பெயரை எழுத பேனா முறியும்
பேப்பரும் கிழியும்
பேருந்தின் ஊரைப் படிக்க
பொழுதே விடியும்

காலம் சென்றது
கட்டிடம் வந்தது
வாசலில் கார் நின்றது
வெள்ளித் தட்டிலே பிள்ளைகள் தின்றது
மம்மியுடன் டாடியாய் மாறிப் போனான்
தும்பை பூச் சொக்காய்
தோள் முழுக்கத் துண்டு
நாவிதக் குப்பையில் நரை மீசை கிடந்தது
பதிலுக்கு முளைத்தது பென்சிலின் கோடு
கருஞ்சாயத் தலையன் ஆனான்

சாமரம் கலெக்டர் வீச
சாரியாய் போலீஸ் நிற்க
சால்வை வந்தன
சந்தன மாலை வந்தன
வாழ்த்து கோசம் வானைப் பிளந்தன
அப்புறம் தான் தெரிந்தது
அவனது தொழில் அரசியல் என்பது

கவிஞர் நரியனுர் ரங்கு
செல் : 9442090468

எழுதியவர் : நரியனுர் ரங்கு (2-Apr-14, 7:18 pm)
சேர்த்தது : ரங்கநாதன்
பார்வை : 80

மேலே