பாதி அருந்தப்பட்ட தேநீர்

தேநீர்க்கடை
மேசையின் மீது
பாதி அருந்தப்பட்ட
அந்தத் தேநீர்
வீற்றிருக்கிறது !
அதைச்
சீண்டுவார்
யாருமில்லை !
அநேகமாக
அது
ஆறிப்போயிருக்கும் !
அந்தத் தேநீரைக்
குடித்தவனுக்கு,
குடித்துக் கொண்டிருக்கும்போதே ,
அவன்
பேருந்து வந்திருக்கலாம் !
ஒரு துக்கச்செய்தியை
அவன்
கேட்டிருக்கலாம் !
அந்தத் தேநீர்
அவனுக்குப்
பிடிக்காமல் போயிருக்கலாம் !
ஒரு
உடல் உபாதைக்கு
அவன்
உட்பட்டிருக்கலாம் !
பக்கத்தில் எவனோ
காறித் துப்பியிருக்கலாம் !
அலைபேசிப் பேச்சு
சண்டையில்
முடிந்திருக்கலாம் !
சிந்தனை வயப்பட்டு
அவன்
அப்பாதித் தேநீரை
மறந்து போயிருக்கலாம் !
லாம் !
லாம் !
லாம் !..............
இன்னும்
சற்று நேரத்தில்
அத்தேநீர்
அங்கேயிருக்கப் போவதில்லை !
எனது
கோப்பையில்
கொஞ்சம் தேநீரை
மிச்சம் வைத்துவிட்டு
எழுந்து சென்றேன்
பாதி அருந்தப்பட்ட
அந்தத் தேநீருக்காக !
பாதி அருந்தப்பட்ட
ஒரு
தேநீரை எங்காவது
நீங்களும் கண்டால்
உங்கள் கோப்பையிலும்
கொஞ்சம் தேநீரை
மிச்சம் வையுங்கள் !!!
- குருச்சந்திரன்