என்னமோ ஏதோ - கே-எஸ்-கலை

பானையில் இல்லா
சோற்றை அள்ளி அள்ளி
போடுகிறது அகப்பை
முகத்துதியாய், முறுவலாய் !

சொற்பமும் ஈரமில்லா
பாறைகளில் மட்டுமே
வேரூன்றி வளர்கின்றன
சுயநலச் செடிகள் !
வறட்சியின்
விலாசமும் விசாலமும்
உள்ளூர பரவிக் கிடக்கும் !

சுளைகளைப் போர்த்தி
மறைந்துக் கிடக்கும்
புலப்படாத விடமேற்றிய
முட்களின் முகவரி
இன்சொல் உதடுகளில்
தோழமைக் கீதம் பாடும் !

ஈரலிப்பு நிலத்தில்
மலட்டு விதைகளுடன்
கிளை பரப்பி நிற்கும்
வார்த்தை விருட்சங்கள்
வாழ்த்து துதிகளாய் !

====

கலப்படம் செய்யப்பட்ட
உணர்ச்சிகளின் உணர்வுகளின்
விசமத்தில் விஷமேறிய
நரம்புகள் வெடித்து
விடுதலைக்கு இழுத்துச் செல்ல....

தாவி தாவி
தடுக்கி விழுந்த குரங்குகள்
சொடுக்கு விட்டு
சொல்லிச் செல்லும்
அவனோ மேதாவி என்று !

கூவி கூவி அழைத்து
குரல்கட்டிய குயில்கள்
உரத்து உரத்து
குரைத்துச் சொல்லும்
அவனோ பாவி என்று !

பழகிப் போன பாதையில்
விரும்பிப் போக முடியாமல்
திரும்பிப் போக தெரியாமல்
வெரித்து, மரித்து, எரித்து, சிரித்து
தரித்து கிடக்கும் விரக்தி !

எழுதியவர் : கே.எஸ்.கலை (4-Apr-14, 12:29 am)
பார்வை : 312

மேலே