பனைமரம் சிறுவர் பாடல்

பனை மரம் { சிறுவர் பாடல் }
*
ஏரியோரம் பனை மரம்
உயர்ந்து நிற்கும் பனை மரம்
குலைகுலையாய் பனங் குலைகள்
காய்த்துத் தொங்கும் பனைமரம்
*
கோடையிலே மட்டைகள்
விசிறியாகும் பனை மரம்
வீட்டின் மேலே வேய்வதற்குக்
கூரையாகும் பனைமரம்
*
வெட்டிவெட்டித் தின்பதற்கு
நுங்கு தரும் பனைமரம்
அவித்துத் தின்ன ருசிமிகும்
கிழங்கு தரும் பனைமரம்
*
கருப்பட்டி தரும் பனைமரம்
கற்கண்டு தரும் பனைமரம்
பதநீர் தரும் பனைமரம்
காயகல்பம் பனைமரம்
*
உடல் வெப்ப நோய்களைக்
குணப்படுத்தும் பெரும் மரம்
சித்த மருத்துவத் துறையிலே
சிறந்து விளங்கும் மருந்து மரம்
*.
நுங்கு வண்டி ஆசைப்பட்ட அங்குசாமி
ஓடியோடிப் பார்க்கிறான்
வாங்கித் தின்னக் காசில்லாமல்
ஏங்கி ஏங்கித் தவிக்கிறான்
*
வெட்டி எரிந்தக் காய்களின்
குவியல்தனைப் பார்க்கிறான்
வண்டி செய்து ஓட்டுவதற்கு
ரெண்டு காய்கள் கேட்கிறான்
*
ரெண்டு காய்கள் தேர்வுசெய்து
வேகமாகப் பறக்கிறான்
ஓரமாக அமர்ந்துக் கொண்டு
வண்டி செய்ய முனைகிறான்
*
ஓரடிக் கொம்பின் முனையில்
ரெண்டு காய்கள் சொருகினான்
நீண்டக் கொம்பினால் தள்ளித் தள்ளி
நுங்கு வண்டி ஓட்டினான்
*.

எழுதியவர் : ந.க.துறைவன் (4-Apr-14, 12:34 pm)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 170

மேலே