பிரியா விடை
பிரபஞ்சத்தின் சக்தியெல்லாம்
திரண்டிங்கு வந்தாலும்
அழிக்க இயலாச்
சிறு கூட்டில்
என் உயிரின் உலையிலும்
உள்ளத்தின் அடியாழ ஈரத்திலிருந்தும்
பெற்ற
சில்லிடும் கத ,கதப்பை விரித்திருந்தேன்
நிரந்தரமாக
உன் விடைபெருதலின் பொருட்டு ...
மனமின்றி உளமதிர திறந்தேன் கதவை
போய் வா ..........
சமுத்திரங்களின் சங்கதிகளை
தெரிந்து கொள்
ஆர்பரிக்கும் அலைகள் பேரிரைச்சலுடன்
உன்னை ஆட்கொள்ள முயன்று தோற்கும் -
புதிர் மிகு புதர்கள் நிறைந்திருக்கும்
அடர்வனங்கள் ஆயிரமுண்டு -
நனைத்த படி சிறகடிக்க
மிகுபெரும் பரப்புகளுண்டு -
ஊண் உண்ணும் ஆசையில்
உன் போன்ற தோற்றத்தில்
கழுகுகள் உனைப் பின்தொடர்ந்தால்
நீ அவற்றுடன் சேர்ந்து சிறகடிக்காதிரு!
அரவங்களற்ற சேம வெளியென
உணர்ந்த பின்னரே
தரையில் காலிறக்கு...
இருப்பினும் கவனம்
வேடன் கைவிரி கண்ணிகள் மறைந்திருக்கும்
துரோகத்தினின்று காத்திடும்
சீர் துணைகள் சேரட்டுமுனக்கு -
சிறகடிப்பதில் எப்போதும் சோர்வடையாதே..
பெருமழை பெய்ததெனில்
கோபுரமாயிரம் உண்டு சிறகுலர்த்த ...
இறுதிவரை பலம் கெடாதிருக்கட்டும்
உன் இறக்கைகளின் இயல்பு ...
அதோ பச்சையம்கூட்டித் தளிர்கள் முளைவிடுகின்றன
உன் பயணத்திற் கேற்ற பருவமிது
புறப்படு .... போய் வா !
இத்தனை நாள் என் கிளையில்
கூடு கட்டியிருந்ததை எண்ணி
வருந்தாதே ...சென்று வா...
பறந்து சலித்து
பிரயாணத்தில் பிரச்சனைகளேதும்
நேருமாயின் ...
எதிர்கொள்ள முடியா விபரீதம்
ஏதேனும் நிகழுமாயின் ...
கனமேனும் திகைக்காதே ...
தாமதிக்காமல் வந்துவிடு
எங்கே கதவு திறந்தேனோ
அங்கேயே அதே நேசத்துடன்
நின்றிருப்பேன்
என் கிளைகள் பரப்பி .