ரசிகர்களாக மாறுங்கள் கவிதைக்கு - எழுத்தாளர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன்

'வானம் வசப்படுவது இருக்கட்டும் முதலில் வாழ்க்கை வசப்படட்டும்'

இப்படி, மானுடத்தின் அத்தனை அசைவுகளையும், எழுத்தாலும், பேச்சாலும், தாய் மொழிக்கு பல விதங்களில் பெருமை சேர்த்த, தென்னக எழுத்தாளர்களில் முக்கியமானவர் இவர். பல படைப்பாளிகளின் எழுத்துகள் உருவாக, மையாக இருப்பவர். இன்றளவும், இலக்கிய பணிகளை ஒரு இளைஞரை போல், தேனீயின் சுறுசுறுப்பாய் தொடர்ந்து கொண்டிருப்பவர், எழுத்தாளர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன். எத்துறையாக இருந்தாலும், பேச்சு ஒன்று, வாழ்க்கை ஒன்று, என எதிலும் இரட்டை வேடதாரிகள் பெருகிப்போன இக்காலத்தில், 'நேர்மையை உயிர்போல் சுவாசித்து பழகிப்போனவன் நான். அதனால் அப்படியே வாழக் கற்றுக் கொண்டுவிட்டேன்' எனச் சொல்லும் தைரியம் இவருக்குண்டு.

ஸ்டேட் வங்கியின் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிக் கொண்டே, தமிழின்பால் இருந்த காதலால், கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், வானொலி நாடகம் என பன்முகத்தளங்களில், தன் இலக்கிய பசியை தீர்த்தவர். பணி ஓய்விற்குப் பின்னும் தீர்த்துக் கொண்டிருப்பவர். 97 குழந்தைகளை (புத்தகங்களை) பெற்றெடுத்து, 100 வது குழந்தைக்கு தாயாக, தயாராகிக் கொண்டிருக்கும், 68 வயது ஏர்வாடி ராதாகிருஷ்ணனுடன் ஒரு நேர்காணல்...

இலக்கியத் தளங்களில் உறவாடிக் கொண்டிருக்கும் 'கவிதை உறவு' குறித்து?

பாரதி தலைமுறை மற்றும் பாவேந்தர் பாரதிதாசனார் தலைமுறை இரண்டும் தனித்தனியாக செயல்பட்டுக் கொண்டிருந்த நேரம். இரு தலைமுறையினரையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவர, நான் எடுத்த முயற்சி தான் 'கவிதை உறவு'. 1972 ம் ஆண்டில் 'கவிதை உறவு' இலக்கிய இதழ் பயணப்பட்டு, 41 ஆண்டுகளை கடந்தும் இப்போதும் வெற்றிகரமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இது இயக்கமாகவும் செயல்படுகிறது.

எண்ணற்ற கவிஞர்களை உருவாக்கிய உங்களுக்கு சினிமாத்துறை வசப்படவில்லையே?

1970 களில் சில படங்களுக்கு பாட்டு எழுதியிருக்கிறேன். கவிஞர் கண்ணதாசன் 'ஆனந்த பைரவியில்' என்னை அறிமுகப்படுத்த, அதிலும் ஒரு பாட்டு எழுதினேன். 'தாகம் தீராத மேகம்' படத்தில் நான்கு பாடல்கள் எழுதினேன். நான் பாட்டு எழுதிய சில படங்கள் வெளியாகாமல் போயின. சினிமாவில் விட்ட இடைவெளியை வானொலியில் நிரப்பினேன்.

வானொலி நாடக அனுபவங்கள்?

வானொலியில் 500 நாடகங்கள் எழுதியிருக்கிறேன். எனது வானொலி நாடகங்கள் குறித்து, பள்ளித் தோழரான வலம்புரி ஜான், 'ஏர்வாடியாருக்கு வானொலி வசப்பட்டது போல் வேறு யாருக்கும் வசப்படவில்லை' என்பார். துவக்கத்தில் நகைச்சுவை நாடகங்கள் தான் எழுதினேன். வானொலி இயக்குனர் திருவேங்கடம், 'நேயர்களை அழவைப்பது போல் உங்களால் எழுத முடியுமா' என்றார். அதை சவாலாக எடுத்து 'நிழல் தேடும் நெஞ்சம்' நாடகம் எழுதினேன். பெரிய வெற்றி கிடைத்தது. அந்த நாடகம் தெலுங்கில் படமாக எடுக்கப்பட்டு மிகப்பெரும் வெற்றி பெற்றது. தமிழ் சினிமாவிலும் எனது பல நாடக கதைகளும், கருக்களும் அனுமதி பெறாமலே பயன்படுத்தப்பட்டுள்ளன.

வங்கியில் பொறுப்பான பணியில் இருந்து கொண்டு, இலக்கியம் எப்படி சாத்தியமானது?

தமிழின் மீது இருந்த ஆர்வம் தான். வங்கி நடைமுறையில் மக்கள் பயன்படுத்தும் பதினைந்தாயிரம் சொற்களை தொகுத்து கலைச்சொல் அகராதியை தயாரித்தேன். அதை அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்., வெளியிட்டு, 'நிறைவான இப்பணியால், தமிழுக்கும் லாபம் ஈட்டித் தந்துள்ளது ஸ்டேட் வங்கி' என பாராட்டினார்.

மறக்க முடியாத தருணங்கள்?

1982ம் ஆண்டு சான்பிரான்சிஸ்கோவில் 5வது உலக கவிஞர்கள் மாநாடு நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து அரசு சார்பில் கவிஞர் கண்ணதாசன் பங்கேற்றார். அந்த மாநாட்டில் எனது பெயரும் இடம்பெற்றது. வங்கியில் பணிபுரியும் ஒரு கவிஞருக்கு, இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதே என பாராட்டிய ஸ்டேட் வங்கி. அங்கு செல்வதற்கு எனக்கு 'ஸ்பான்சர்ஷிப்' வழங்கியது. இலக்கிய உலகில் இது ஒரு முன்மாதிரியான அனுபவம். வழக்கமாக விளையாட்டுக்கு மட்டுமே 'ஸ்பான்சர்ஷிப்' கிடைக்கும். பிரான்ஸ், இத்தாலி, சிங்கப்பூர் என பல நாடுகளில் பங்கேற்ற இலக்கிய கூட்டங்கள் மறக்கமுடியாதவை.

கவிஞர்கள் அரசியல் சார்ந்து, துதிபாடிகளாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏன்?

என்னையும் அரசியலுக்கு அழைத்து சிலர் தோற்றுப்போனார்கள். என் கலைச் சேவைகளுக்கு கலைமாமணி விருது, பாவேந்தர் விருது உட்பட பல பெற்றுள்ளேன். அரசியலை சார்ந்து செயல்படாமல் இருப்பதால், சிலவேளை கிடைக்க வேண்டிய மரியாதைகள் கூட கிடைக்காமல் போகலாம். செம்மொழி மாநாடு நடந்த போது எனக்கு அழைப்பு இல்லை. என்னைப் போல் பலர் உள்ளனர். இதுபோன்ற காரணங்கள் அரசியல் சார்ந்து இயங்க காரணமாகலாம் அல்லவா.

இளைய தலைமுறையினருக்கு கவிதை குறித்து என்ன சொல்லி வருகிறீர்கள்?

காந்தி மீண்டும் பிறக்க வேண்டும்;

ராட்டையோடு அல்ல

சாட்டையோடு.

இது எனது ஒரு கவிதை. மரபுக்கும், புதுமைக்குமான பாலமாக எனது படைப்புகளை எழுதுகிறேன். கவிதை எழுதுவது என்பது இரண்டாவதாக இருக்கட்டும். முதலில் கவிதைகளை ரசிக்க வேண்டும். கவிதை மீது ஒரு நாட்டம் இருந்தால், எளிதாக எழுதிவிடலாம். கவிதைகளுக்கு ரசிகர்களாக மாறுங்கள். இப்போதும் நான் கவிதைகளை ரசிக்கிறேன்.

இலக்கிய பயணம் மனநிறைவைத் தருகிறதா?

ஆற்றல் இருக்கும் போது தங்களை சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்ள கூடாது. வளர்ச்சியின் உச்சத்திற்கு போனாலும் மக்களோடு இயங்கும் ஆற்றல் மதிப்புக்குரியது. உயரங்கள் என்பது வேறு. உயர்வு என்பது வேறு. மனித நேயம், மாண்புமிகு வாழ்க்கை, மண்ணில் எவர்க்கும் அஞ்சாமை, இது தான் 'கவிதை உறவின்' நோக்கமும். இதை நோக்கியே பயணிக்கிறேன். இது சுமையாக இல்லை, சுவையாகவே இருக்கிறது.

எழுதியவர் : படித்ததில் பிடித்தது.. (9-Apr-14, 1:30 pm)
பார்வை : 159

சிறந்த கட்டுரைகள்

மேலே