வழியெங்கும் பிதற்றுபவனின் குரல் 11
ப்ரேம பிரபாவின் அடுத்த கவிதை....
"நம்பிக்கை முத்தங்கள்".
நீளும் உறவெனும் நம்பிக்கையில் பகிர்ந்து கொண்ட முத்தங்கள்..நம்பிக்கையற்ற புரிதலில்...எரி நட்சத்திரங்களாய் வீழ்ந்துவிடும் துயரத்தைச் சொல்கிறது இந்தக் கவிதை. காதலின் நீளம் வாழ்தலில் இல்லை...
புரிதலில் இருக்கிறது என்பதை வலியோடு சொல்லும் அழகான கவிதை அது." infatuation "-ம்,"
"c a l c u l a t i o n "-ம் அற்ற நெகிழ்ந்த காதல்,,,
முதுமையில்தான் நிகழக் கூடுமோ...என எனக்கேனோ தோன்றியது..இந்தக் கவிதையைப் படிக்கையில். அது சென்ற கவிதையின் பாதிப்பாக இருக்கலாம் என்றாலும் கூட பிஞ்சில் மஞ்சளாகத் தெரிவதெல்லாம் கனியல்ல...வெம்பல்தான் என்னும் கருத்தை ஏனோ என்னால் மறுக்க இயலவில்லை.
அவசரமான நிகழ்காலத்தில் எல்லாமும் அவசரம்தான்..காதல், கோபம், அன்பு எல்லாமே...
அவசரகதியில் நிகழ்ந்துவிட...எல்லாமும் அதனதன் முகவரியற்று...ஆழ்கடலில் தொலைந்த
முத்துக்களாகி விடுகின்றன. அவரவர் உரிமைகள் மீதான அவரவர் ஆளுமைகள்...விட்டுக் கொடுத்தலின் அன்பை உணர இயலாதபடி செய்துவிட...அனுபவ முதிர்தலில்...தொலைத்ததைத் தேடி அலைய வைத்து விடுகிறது. காலம் என்னும் மருந்து...
சிலரைக் குணப் படுத்தி விடுகிறது. பெரும்பாலானோரை மீளாத காயங்களுடன்...
நடைப் பிணமாக்கி விடுகிறது.
இந்தக் கவிதையின் ஆழம் என்னை வேறெங்கோ அழைத்துச் சென்றுவிட...ஒரு மன்னிப்புடன்
மீண்டும் கவிதைக்குள் வருகிறேன் நான்.
ஒரு நல்ல கவிஞனின் கையில் எளிமையான வார்த்தைகள் எப்படி சொல்ல இயலாத அனுபவத்தைத் தருகின்றன என்பதை இந்த வார்த்தைகள் உங்களுக்குச் சுட்டக் கூடும்.
"நெருக்கமான பார்வைகளின்
பதியத்தில் வளர்ந்த
மொட்டைமாடி முழு நிலவை....."
காதலின் பார்வையில்...எல்லாமே வளர்ந்து விடுகிறது. நிலவு உட்பட. பதியனிட்டு வளரும்
நிலவை...
நானும் இப்போது இரசிக்கிறேன்...
இந்தக் கவிதையின் மேல்
என் நம்பிக்கை முத்தங்களைத் தந்தபடி.
மீண்டும் வருவேன் அடுத்த கவிதையைச் சொல்ல
காலத்தின் பெரும் துணையோடு.