வழியெங்கும் பிதற்றுபவனின் குரல் 12

ப்ரேம பிரபாவின் அடுத்த கவிதை....
" தாரை வார்த்த முத்தங்கள்".

முத்தம் என்பது வெறும் சப்தம் இல்லை...அது ஒரு
ஆயுதம். அதுவும் நம் மேல் அன்புடையவர்களை...
எளிதில் வீழ்த்தி விடும் ஆயுதம் அது. அதை நாம்
காரியம் சாதிக்கும் யுக்தியாகவே பயன்படுத்தினாலும் கூட...அந்த சப்தத்திற்குள்
மறைந்திருக்கும்...அன்பென்னும் "மாயை" பெறுபவரை வீழ்த்தி விடுகிறது...யாருக்கும் வலிக்காமல்.

"தாரை வார்த்த முத்தங்கள்" இதைத்தான் சொல்கிறது. "குடும்பம்" என்னும் உறவு நலிந்து வரும் நிலையில்...முதுமையில் தனித்து இருக்க நேரிடும் அம்மா....(அல்லது அப்பா)வின்...
துயரங்களைப் பதிவு செய்திருக்கிறது இந்தக் கவிதை.

எங்கள் ஊர்ப் பக்கம் ஒரு சொலவடை உண்டு...
"காரியம் ஆகிற வரை காலைப் பிடி....அப்புறம்
கழுத்தைப் பிடி"...என்று. அம்மாவினால் ஆகும் தேவைகள் தீர்ந்த பின்...கறப்பு நின்ற பசுவை
அடி மாட்டிற்கு அனுப்புவது போல...அவளுக்காக
கதவுகள் திறந்து வைத்துக் காத்திருப்பது தெருவிற்கு ஒன்றாய்த் துவங்கி நன்கு வியாபாரமாய் செழிக்கும் முதியோர் இல்லங்கள்தானே.

இளம் வயதில்...தவறுகளிலிருந்து தப்பிக்கவும்..
வாலிபத்தில் நம் தவறுகளுக்கு அவளைத் துணையாக்கி பின் அதன் விளைவுகளுக்கு
அவளைப் பலிகடா ஆக்கவும் செய்யும் முத்தங்களை இந்தக் கவிதையின் அம்மா
சேமித்து வைத்திருக்கிறாள். உறவுகள் தன் இருப்பைக் கேள்விக் குறியாக்கும் பொழுது...
தன் இருப்பை இந்த உலகில் நிச்சயப்படுத்தியதாய்
தான் கருதிய முத்தங்களை அவள் தன்னோடு எடுத்துச் செல்லவில்லை. மாறாக...தன் வம்சத்தைச் சொல்லும் பெயரனிடம் அவற்றைத்
தாரை வார்த்து விட்டு...தன் கணவனின் நினைவுகளை மட்டும் சுமந்தபடி...முதியோர் இல்லம் நோக்கிச் சென்று விடுகிறாள் அம்மா.

வயது...ஆக ஆக...நம்மிடம் உள்ள குழந்தை முத்தங்கள்...குரூர முத்தங்கள் ஆவதை இந்தக் கவிதை மிகச் சிறப்பாகச் சொல்கிறது.
எதையும் எதிர்பார்க்கதவள் என்பதாலும் , எதையும் எந்தத் தாயும் தன்னுடன் எடுத்துச் செல்வதில்லை என்பதாலும்...தான் சேர்த்து வைத்திருந்த தன்
குழந்தைகளின் நினைவுகளின் தொகுப்பாய் இருந்த முத்தங்களையும் தன் பெயரனிடம் தாரை வார்த்துவிட்டு (உதிர்த்துவிட்டு) சென்று விடுகிறாள் தாய்.

இந்தக் கவிதையில் அம்மாவின் வலியைப் பதிவு செய்திருக்கும் கவிஞரின் வரிகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

"யார் தயவில் இனிமேல்
அம்மா இருக்க வேண்டுமென்று
அவளின் உறவுகள் தீர்மானிக்கும் வேளைகளில்...
அவள் கணக்கில் இருந்த
என் அத்தனை முத்தங்களையும்
என் மகனிடம் தாரை வார்த்துவிட்டு
முதியோர் இல்லம் நோக்கி விரைகிறாள்
அப்பாவின் நினைவுகளுடன்."

வாழ்வின் சிதைவை (அதுவும் இந்த நூற்றாண்டில்
அதிகமாகிவிட்ட) உள்ளார்ந்த வருத்தத்துடன் சொல்லும் இந்தக் கவிதை...எனக்கு ஞாபகப் படுத்துகிறது வேறொரு கதையை...

அப்பாவிற்காக...மூலையில் வைத்திருந்த சோற்றுத் தட்டை, மகன் இந்தத் தட்டை உனக்காக
ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளவா? என்று கேட்கும் கதை அது.

தட்டுக்கள் பாதுகாக்கப்பட்ட காலமும் முடிந்து
இப்போது முதியோர் இல்லங்களின் கதவுகள் திறந்து கொண்டிருக்கின்றன. சிதையும் காலத்தில்,
நம் முதுமையில் நமக்காக எந்த வாசலின் கதவுகள் திறந்திருக்கக் கூடும்?

மீண்டும் வருவேன்...காலத்தின் பெரும் துணையோடு...

எழுதியவர் : rameshalam (9-Apr-14, 3:59 pm)
பார்வை : 99

சிறந்த கட்டுரைகள்

மேலே