ஆன்மா விடைபெறுகிறது
ஆன்மா விடைபெறுகிறது
ஒரு உடலின் கூட்டை
விட்டு
விடைபெற்று கொண்டிருக்கிறது
ஆன்மா ஒன்று
நல்லது நண்பனே
இத்தனை நாள் வாசம்
அளித்தாய்
சென்று வருகிறேன்
உடல் ஏதோ சொல்ல
நினைத்தது,
இதன் வாயிலாகத்தான்
இது வரை பேசியதால்
எப்படி பேசுவது?
நல்லது நண்பனே
ஏதோ சொல்ல நினைக்கிறாய்
என் வழியாக அப்படித்தானே..!
ஆன்மா வாய்ப்பு கொடுக்க
உடல் சொல்லியது
நீ குடிவந்ததில் குற்றமில்லை
பொருத்தமில்லா என்
உடலை தேர்ந்தெடுத்து
அதற்குள் பல ஆசைகளை
வைத்து அல்லும் பகலும்
உழன்றாடி, கடைசி வரை
உடல் வேதனையில்
அனுபவித்து இப்பொழுது
சென்று வருகிறேன் என்கிறாய்?
இனி போகும் இடத்திலாவது
பொய்கள் பல பேசாமல்
ஆகாத ஆசைகளை
தூண்டி விட்டு என் உடல்
போல் சீரழியாமல் பார்த்து கொள்
அவ்வளவுதான் சொல்லி
விட்டு உதறி விழுந்தது
மனித கூட்டின் உடல்.