எப்பக்கத்தில் இருந்து வந்து புகும் இந்தி

#எப்பக்கத்தில் வந்து புகுந்துவிடும் இந்தி

எம்மொழி செம்மொழி
எங்கிலும் எங்கிலும்
எங்கும் நடமிடல் காணீர்
தெம்பினைத் தரும்மொழி
எங்களின் தமிழ்மொழி
என்பதில் பெருமையே கேளீர்..!

எட்டுத் திசைகளில்
இனிதாய் ஒலிக்குது
இடையினில் புகுமோ இந்தி
மெட்டினை இசைக்கும்
மேதினி யில்தமிழ்
வென்றிடும் என்றுமே முந்தி..!

அந்தென பலமொழி
ஆயிரம் வந்தென்ன
ஆயுத மெம்மொழி யேந்தும்
செந்தமிழ்த் தாக்கிட
சிதறும் வடமொழி
சில்லாய் நொறுங்கிய டங்கும்...!

ஆதிக்கம் செய்திடும்
ஆதி காலமொழி
ஆருளர் இதனை மறுக்க
போதி மரத்தமிழ்
பொன்னான நூல்களில்
போற்றுவர் தாமும் சிறக்க..!

வேலிகள் பலவாம்
வித்தகர் பலரால்
படைப்பில் தமிழ்தான் பலமே
கூலிப் படைகள்
கொல்ல முயன்றால்
கூற்றுவன் முன்தமிழ் எழுமே..!

கல்விக் கூடத்தில்
காட்டு மொழிதான்
காலடி பதிக்கப் பார்க்கும்
வில்லன் மொழிதனை
விரட்டிட வேண்டி
வேகத்தில் நாசிகள் வேர்க்கும்..!

அரசுத் துறைகளில்
அடைக்கலம் வேண்டி
அழகாய் நாடகம் போடும்
சிரசைக் கொய்திட
தீட்டிடு வாளை
திணறியே இந்தியும் ஓடும்..!

ஓரடி ஈரடி
நாலடி யென்று
ஒய்யார மாய்த்தமிழ் நடக்கும்
போரிட வருமொழி
புறமுது கிடவே
போட்டுப் பிடரியில் அடிக்கும்..!

இலக்கண இலக்கிய
இருப்பினில் எந்தமிழ்
இரும்பினை ஒடிப்பார் உளரோ..?
வலம்வர நினைக்கும்
வடமொழி வழிகளின்
வாயிலை அடைப்போம் உடனே..!

யாப்புகள் அணைத்து
யாழிசை மீட்டும்
யௌவன மொழியைமீறி
போக்குகள் காட்டும்
புலம்பல் மொழிக்கு
போடுவம் திண்டுக்கல் பூட்டும்..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (20-Jul-25, 11:13 am)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 154

மேலே