ஆட்டிப் படைக்கும் சிந்தனைகள் -3
மங்கலப் பொருத்தம்.
ஒரு கவிதை ஆயினும் கவிதை நூல் ஆயினும் எழுத்துக்களின் சேர்க்கைத் திறனை உணரும் புலனே நுண்மாண் நுழைபுலமாகும். நம் தமிழ் தெய்வச் செந்தமிழ் என்பதும், இறையனார் வகுத்து அருளியது என்பதும் ஆன்றோர்க்கெல்லாம் ஒப்ப முடிந்த கருத்து ஆகலின் எழுத்துக்களின் அமுத ஆற்றல்கள், விண்மீன் தொடர்புகள், கணங்கள் பற்றி எல்லாம் அறிதல் மங்கல நூல்கள் யாத்தற்கும் தெய்வீகப் பேராற்றல் உணர்தற்கும் தேவையாகிறது.
பொருத்தங்கள்” என்ற தலைப்பில் அண்மையில் நான் இத்தளத்தில் எழுதிய ஒரு கவிதையில் பாட்டியல் நூல்கள் கூறும் பொருத்தங்கள் பற்றி மேலோட்டமாகக் கூறி இருந்தேன். அந்தப் பொருத்தங்கள் பற்றி சற்று விரிவாக எழுதுவது அனைவர்க்கும் நலம் பயக்கும் என்ற நல்லெண்ணத்தில் பின் வருபவற்றை பகிர்ந்திடத் துணிகிறேன்.
குற்றெழுத்தெல்லாம் ஆண்பால், நெட்டெழுத்தெல்லாம் பெண்பால் உயிர் எழுத்துக்கள் அதைப் போலவே ஆண்பால், உயிர் மெய் எழுத்துக்கள் பெண்பால் எனவும் பொருந்தும் என்பதோடு இவ்வகைப் பொருத்தங்கள் பத்து வகைப்படும் என அனைத்து தமிழ் இலக்கண நூல்களும் எடுத்து இயம்புகின்றன. அப்படிப்பட்ட பத்து பொருத்தங்கள், மங்கலம், சொல், எழுத்து, தானம், பால், உணா, வருணம், நாள், கதி, கணம் ஆகியவை ஆகும். இவற்றுள் முதலாவது பொருத்தம் ஆகிய மங்கலப் பொருத்தம் பற்றி நிறையவே கூற வேண்டி உள்ளது.
“சீரெழுத்துப் பொன் பூ திருமணி நீர் திங்கள் சொல்
கார் பரிதி யானை கடலுலகம்-தேர் மலைமா
கங்கை நிலம் பிறவும் காண்டகைய முன்மொழிக்கு
மங்கலமாம் சொல்லின் வகை”
என வெண்பாப் பாட்டியல் மங்கலப் பொருத்தத்திற்கான சொற்களை அடையாளம் காட்டுகிறது. செய்யுள் நடையில் கூறப்பட்ட மேற்கண்ட வெண்பாவின்படி, உலகு, கங்கை, மலை, நிலம், கார், புயல், பொன், மணி, கடல், சொல், கரி, பரி, சீர், புகழ், எழுத்து, அலர், திங்கள், தினகரன், தேர், வயல், அமிழ்தம், திரு, ஆரணம், நீர் முதலியன மங்கலப் பொருத்தம் தரும் சொற்கள் எனக் கூறுவர் செந்தமிழ் அறிஞர்.
இப்படியெல்லாம் பொருத்தம் பார்த்தா கவிதை எழுதினர் பழம்பெரும் புலவர் என
எண்ணும்போது இந்தக் காலத்தில் இதெல்லாம் சாத்தியமா என ஐயமுறவும் வாய்ப்பு அளிக்கிறது. பழைய காலம் இருக்கட்டும். இக்காலத்தில் எழுதுபவர்கள் இதையெல்லாம்
அனுசரித்து எழுதுகின்றனரா என ஆய்வு செய்ய, திரு. வைரமுத்து அவர்களின் ”தண்ணீர் தேசத்தைப் புரட்டினேன். என்ன ஆச்சரியம். கவிதை நூலை அவர் இப்படித்தான் துவக்கி உள்ளார்.
“கடல்
உலகின் முதல் அதிசயம்
சத்தமிடும் ரகசியம்
கால வெள்ளம்
தேங்கி நிற்கும் நீலப் பள்ளம்.
மேற்கண்ட கவிதை வரிகளில்,, கடல், உலகு, வெள்ளம்( நீர்) ஆகிய மங்கலச் சொற்கள் கொண்டு தன் கவிதை நூலை ஆரம்பித்து உள்ளார்.
இது ஏதோ அவரை அறியாமல் அப்படி அமைந்து விட்டது என நாம் உதறித் தள்ள இயலாதபடி தமிழ் செய்யுள் நூல்கள் அனைத்தும் இவ்வாறு மங்கலச் சொற்பிரயோகம் செய்திருப்பது உண்மைதானா என தமிழ் இலக்கணத்தையும் இலக்கியங்களையும் நாம் முதல் வரிகளை புரட்டிப் பார்க்கும் அவசியம் எழுகிறது.
தொல்காப்பியம் இவ்வாறு நுதலிற்று.:
”எழுத்து எனப்படுவ
அகரம் முதல்
னகர இறுவாய் முப்பஃது என்ப
சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே”
இதில் “எழுத்து” மங்கலச் சொல்லாய் அமைந்தது.
தண்டியாசிரியர் தன் சிறப்புப் பாயிரத்தில், பொதுவணியியலில்
“சொல்லின் கிழத்தி மெல்லிய யிணயடி
சிந்தைவைத் தியம்புவல் செய்யுட் கணியே”
என மங்கலச் சொல்லாக “சொல்” பயன்படுத்தப் பட்டுள்ளதையும் செய்யுட்கணியாய் அது விளங்குவதையும் அவர் செப்புகிறார்.
”கல்லாடம் படித்தவரோடு சொல்லாடாதெ” எனப் புகழப் படும் கல்லாடத்தில் வேழமுகக் கடவுள் வணக்கம் இவ்வாறு பாடப்பட்டுள்ளது.
“திங்கள் முடிபொறுத்த பொன் மலை அருவி
கருமணி கொழித்த தோற்றம் போல”
திங்கள் பொன், மலை, மணி ஆகிய மங்கலச் சொற்கள் முதற் சொற்களாய் அமைந்து இருப்பது வெறும் அழகு கருதி அன்று என்பது அங்கையிற் கனியாக விளங்கும்.
கடவுள் வாழ்த்து என உமாபதி துதி செய்யும் செயங்கொண்டார், தனது கலிங்கத்துப் பரணியில்,
“புயல்வண்னன் புனல் வார்க்கப் பூமிசையோன்
தொழில் காட்டப் புவன வாழ்க்கைச்
செயல் வண்ண நிலை நிறுத்த மலை மகளை
புணர்ந்தவனைச் சிந்தை செய்வாம்”
என்பதில் புயல், புனல் பூமி என முதல் அடியில் மூன்று சொற்களும் மூன்றாவது வரியில் மலையெனும் மங்கலச் சொல்லும் சொல்லி வாழ்த்துதல் காண்கிறோம்.
கம்பரோவெனில் இந்த மங்கலப் பொருத்ததை தாரக மந்திரமாகக் கொண்டவர். “உலகம் யாவையும்” என்ற பாடலை அதற்கு உதாரணம் காட்டலாம். ஆனால் ஓர் மங்கலச் சொல்லுடன் நிறுத்தி விடாமல் எத்தனை மங்கலச் சொற்களைக் கூட்டி ஒரு சொல்லோவியம் படைத்துள்ளார் என்பது அவரது ஏரெழுபதில் முதற்பாடலில் காண முடிகிறது.
“சீர் மங்க லம்பொழியுந்த் தெண்டிரை நீர்க் கடல் புடைசூழ்
பார் மங்க லம்பொழியும் பல்லுயிருஞ் செழித்தோங்கும்
கார் மங்க லம்பொழியும் பருவத்தே காராளர்
ஏர் மங்க லம்பொழிய வினிதுழ நாட் கொண்டிடினே.”
மேற்கண்ட செய்யுளில், , சீர், நீர், கடல், பார், கார், நாள் ஆகிய மங்கலச் சொற்களை வரிக்கு வரி நிரப்பி, ஏர்த்தொழிலின் மங்கலத்தை உலகுணரும் வகையில் முழக்குகிறார். இவ்வாறு நூலின் தொடக்கத்தில் மங்கலச் சொற்களை சேர்த்துக் கட்டி யாப்பது ஒரு கடமை என்பதோடு நில்லாமல் அவற்றை வரிக்கு வரி நிறைத்து படைத்தவர்கள் பல பெரும்புலவர்கள் என்பதும் காணக் கிடைக்கிறது.
குற்றாலக் குறவஞ்சியில், திரிகூட ராசப்பக் கவிராயர், கட்டியக்காரன் வரவு என கூற வந்தபோது, நூலின் தொடக்கத்தில்,
“தேர் கொண்ட வசந்த வீதிச் செல்வர்குற் றாலத்தீசர்
பார் கொண்ட விடையி லேறும் பவனி யெச்சரிக்கை கூற
நேர் கொண்ட புரிநூன் மார்பும் நெடிய கைப் பிரம்பு மாகக்
கார் கொண்ட முகிலே றென்னக் கட்டியக் காரன் வந்தான்”
இதில், தேர், பார், கார் எனும் மங்கலச் சொற்கள் கட்டியம் கூறுவதைக் காண்கிறோம்.
சீத்தலைச் சாத்தனார் யாத்த மணிமேகலையில்,, முதற்பாடல்,
“இளங்கதிர் ஞாயிறு என்னும் தோற்றத்து
விளங்கு ஒளி மேனி வரி சடையாட்டி
பொன் திகழ் நெடுவரை உச்சித் தோன்றி
தென் திசை பெயர்ந்த இத் தீவத் தெய்வதம்”
கதிர், ஞாயிறு, பொன், நெடு, தீவு என ஐவகை மங்கலச் சொற்கள் ஐயமின்றி ஒரே பாடலில் பொதிந்து இப்பாடல் ஒய்யார உலா வருகிறது.
பழந் தமிழ் பாடல்கள் இருக்கட்டும், தற்காலப் புலவர்கள் இதனை மதித்து உள்ளனரா என்ற கேள்விக்கு விடையாக, திருமிகு.தெ. பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் மணோன்மணியத்தில் தமிழ் தாய் வாழ்த்து இப்படி எழுதப்பட்டுள்ளது.
”நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரத கண்டமிதில்
தக்க சிறு பிறை நுதலும் தரித்த நறுந் திலகமுமே
தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல்திருநாடும்
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெருந்த் தமிழணங்கே”
இப்பாடலில், நீர், கடல், நிலம், சீர், கண்டம், பிறை, தெக்கணம், திரு, நாடு, உலகு, போன்ற பத்து மங்கலச் சொற்கள் தமிழ்த்தாயை அணி செய்கின்றன.
பாரதிதாசனின் இருண்ட வீட்டில்,
”கடலின் மீது கதிரவன் தோன்றிப்
படரும் கதிர்க்கை பாய்ச்சிச் சன்னலின்
வழியே, கட்டிலில் மங்கையை எழுப்பினான்
விழி திறந்து மங்கை மீண்டும் துயின்றாள்”.
இப்பாடலில், கடல், கதிரவன் ஆகிய மங்கலச் சொற்கள் முதல் வரியிலேயே இருண்ட வீட்டிற்கு ஒளி வீசுகின்றன.
இத்தகைய மங்கலச் சொற்கள் தமிழர் தம் அறிவுத் திறத்தால் அடையாளம் கண்டு இலக்கணமாக வகுத்து அளித்தனரோ என நாம் வியக்குப்போது இது இறைவனே நமக்கு அளித்துள்ள கொடை என்பது பின் வரும் விவிலியத்தின் முதல் இரு வாக்குகள் மூலம் புரிகின்றது.
“தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும் மண்ணுலகையும் படைத்த பொழுது
மண்ணுலகு உருவமற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவி இருந்தது. நீர்த் திரளின் மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது”. ”உலகு” இருமுறையும், ”நீர்” ஒருமுறையும் மங்கலச் சொற்களாய் அமைந்து இறை வார்த்தை மங்கலம் நிறைந்தது என்பதை மெய்ப்பிக்கிறது.