காணமற் போகும் தலைவன்
அழுக்கும் துருவுமாய் கிடந்த பரணை
சுத்தம் செய்வதான ஒரு வேலை
கடைசிக்கிழமையில் எப்போதாவது
வருடத்தில் தோன்றும்.
எலிப்புழுக்கையிட்ட இடமாயிருக்கும்
அவ்விடம் அதன் கழிப்பறையாயிருக்கலாம்
சில கருவாட்டுத்துண்டுகளும் கிடைக்கும்
அது சாப்பிடுமிடமாகவும் இருக்கலாம்.
நம்மையொத்து இரண்டையும் பிரித்துவைக்கத்
தெரியாமல்கூடயிருக்கலாம்.
மெதுவாக ஒவ்வொன்றாய் தூசு தட்டும்
பொருப்புடன் துளாவுகையில்
இரண்டொரு குட்டிகள் கண்திறக்காது
கத்திக்கிடப்பதை பார்க்கநேரும்
அவ்விடம் பிரசவப்பகுதியாகவும் இருக்கலாம்
தட்டுமுட்டுச்சாமான் சாக்குமூட்டை
குழந்தைகளின் கைகாலிழந்த பொம்மைகள்
சீதனப்பெட்டிகள் என நிறைந்து நிற்கும்
அதனுள்ளேதான் எறுமைத்தோளொத்த
நிறத்தில் இறும்புப்பெட்டியும் சாய்ந்துகிடக்கும்
அதன் முகட்டிலிருந்து ஆரம்பிக்க
தன் வாழ்விடமாக்கியிருக்கும் சிலந்தி
வலையோடிருக்கும்.
நிமிர்த்தி நகர்த்தி துடைத்து ஊத
ஆரம்பிப்பதே அந்த பெட்டியிலிருந்துதான்
அது தன்முனைப்பாகவே நடக்கும்...
திறந்ததும் கரப்பானென்ற
செங்கரிய பட்டாளங்கள்
உள் நிறைந்து ஓடிமறையும் அசுரகதியில்
சில புத்தகங்களை துண்டங்களாக்கியும்
சிலவற்றில் மூத்திரம் பெய்தும்
நாசியிலும் சேர்த்து நெடிபரப்பும்
உள்ளங்கை வைத்து தட்டி உதறி விரட்டி
ஒருவாறு உட்கார்ந்து ஒவ்வொன்றாய்
எடுத்து அடுக்கும் போது அதற்குள்ளெங்காவது
சில கடிதம் கிடைக்கும்
அங்கிருந்து மீட்டுக்கொண்டு
பழைய நாட்களுக்குள் என்னை சாமரம்
வீசியழைக்கும் பொருட்டு மறுத்தலின்றி
நான் நகர்வேன்
மனைவி சமையற்கட்டிலிருந்தவாறே
குழந்தைகளை விட்டு
பரணிலிருக்கும் என்னை
தேடச்சொல்வாள்.